
பிரதமர் மோடிபோல் உடையணிந்து, தலைப்பாகை வைத்துக்கொண்டு, தாடியை வெள்ளையாக்கிக்கொண்டு, மோடி போல் மேனரிசத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. இதோ சில சுவாரஸ்யங்கள்...
* மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி இரண்டாவது வார்டில் ரகமத்நிஷா என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். ரகமத்நிஷா தன் கணவர் பாரூக்குடன் மாட்டு வண்டியில் சீர்காழி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இப்படியே வாக்கும் சேகரித்துவருகிறார்.
* மாநகராட்சியாக மாறியுள்ள கரூரின் 26வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் ராஜேஷ் கண்ணன். சமூக ஆர்வலரான இவர், மணல் கொள்ளைக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இவர் தான் போட்டியிடும் வார்டு மக்களுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு கோடி கொசுக்கள், ஒரு லட்சம் கரப்பான்பூச்சிகள், 1,000 எலிகள், 100 தெருநாய்கள் ஆகியவற்றை ஒழிப்பதாக உறுதிமொழி அளிக்கும் துண்டறிக்கையைக் கொடுத்து மக்களிடம் வாக்குகள் சேகரித்துவருகிறார். இதை நிரூபிக்கும் வகையில் எலிகளைப் பிடித்து, அவற்றை எலிப்பொறிகளில் அடைத்து, தன் இரண்டு மகன்களையும் உடன் எடுத்துவரச் சொல்கிறார்.



* நாமக்கல் நகராட்சியின் 15வது வார்டு பட்டியல் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் அந்த வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட வந்தார், ஓய்வுபெற்ற ஆய்வாளர் ஜெயந்தி. `இந்த வார்டில் பொதுப்பிரிவினர் போட்டியிட முடியாது' என்று தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ஜெயந்தியை, மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலாளர் ஆதம் பாரூக் அங்கேயே மடக்கி, 13வது வார்டில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட வைத்தார். ஜெயந்திக்கும் ஒரு வார்டு கிடைத்தது; மக்கள் நீதி மய்யத்துக்கும் ஒரு வேட்பாளர் கிடைத்தார்.
* கரூர் மாநகராட்சியின் 48வது வார்டில், பா.ஜ.க சார்பில் `அம்மன்' சுரேஷ் போட்டியிடுகிறார். இவர் பிரதமர் மோடிபோல் உடையணிந்து, தலைப்பாகை வைத்துக்கொண்டு, தாடியை வெள்ளையாக்கிக்கொண்டு, மோடி போல் மேனரிசத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். மோடி போலவே மாஸ்க் அணிய மறந்து, வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.


* கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வில் சீட் மறுக்கப்பட்டதால், பா.ஜ.க-வுக்கு உடனே தாவி சில நிமிடங்களில் சீட் பெற்று, போட்டியிட்டுத் தோற்றவர், டாக்டர் சரவணன். தற்போது பா.ஜ.க-வின் மதுரை மாநகரத் தலைவராக இருக்கும் சரவணன், தன் பாணியை இத்தேர்தலில் மற்றவர்களுக்கும் நடைமுறைப்படுத்தினார். `தி.மு.க, அ.தி.மு.க நண்பர்களே, உங்க கட்சியில் உங்களுக்கு சீட் கிடைக்கவில்லையா, கவலை வேண்டாம், எங்களிடம் வாருங்கள், 100 சீட்டு இருக்கு, விருப்பப்பட்ட வார்டை எடுத்துக்கோங்க' என்று மைக்கில் அனௌன்ஸ் பண்ணாத குறையாக மாற்றுக்கட்சி அதிருப்தியாளர்களை இழுத்தார். அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காத 2 முன்னாள் கவுன்சிலர்கள் உட்பட பல அதிருப்தியாளர்களை இழுத்து வேட்பாளர் ஆக்கியிருக்கிறார்.
* திருநங்கைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிவரும் மதுரை பாரதி கண்ணம்மா, ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடுகிறார். `திருநங்கைகளுக்கு அனைத்து நிலையிலும் சமத்துவம் கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிடுவேன். இது சரியென்று நினைப்பவர்கள் வாக்களிக்கலாம்' என்று தெரிவிக்கும் இவர், நீதி தவறாத மீனாட்சியம்மன் கோலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஒவ்வொரு முறையும் வருவார், இந்த முறையும் அப்படியே வந்தார்.
*``அஞ்சு ரூபாய்த் தாளை எந்தக் கடையிலும், வங்கியிலும் வாங்கறதில்லை. அஞ்சு ரூபாய்த் தாள் செல்லாதுன்னு அரசாங்கம் அறிவிச்சிடலாம். அதை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கத்தான் இப்படி வந்தேன்'' என்று 5 ரூபாய்த் தாள்களை ஒட்டி மாலையாக அணிந்துகொண்டு மதுரை 68 வார்டுக்கு அ.ம.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஜாகிர் உசேனை எல்லோரும் வித்தியாசமாகப் பார்த்தார்கள்.


* மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட பிறகு, தனது முதல் தேர்தலைச் சந்திக்கிறது கடலூர். 45 வார்டுகளைக் கொண்ட இந்த மாநகராட்சிக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். அதன்படி 31-வது வார்டில் ஜெயலட்சுமி என்ற 65 வயதுப் பெண்மணி வேட்புமனு தாக்கல் செய்தார். அவரிடம், `எந்த வார்டில் என்ன பதவிக்குப் போட்டியிடுகிறீர்கள்?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அவருக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. `சரி, உங்கள் கட்சியின் தலைவர் யார்?’ என்று செய்தியாளர்கள் அடுத்த கேள்வியைக் கேட்க, “நான்தான்” என்று அப்பாவியாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் அவர். அதற்கு மறுநாள் 19 வயது இளைஞர் ஒருவரை மனுத்தாக்கல் செய்ய அழைத்து வந்தனர் ம.நீ.ம கட்சியினர். ஆனால், 21 வயது பூர்த்தியானால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்க, அவசர அவசரமாக அவரை அலுவலகத்தின் பின்புற வழியாக வழியனுப்பி வைத்தனர், ஆண்டவரின் தொண்டர்கள்.
* தஞ்சாவூர் மாநகராட்சி 51வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார் அஞ்சுகம் பூபதி. பிரசாரத்தில் அவரைப் பார்த்ததுமே மக்கள் பதற்றமடைந்து, `பொறுமையா, கவனமா போங்க' என்று அட்வைஸ் செய்கின்றனர். அஞ்சுகம் பூபதி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதே இந்தக் கனிவுக்குக் காரணம்.
* பட்டுக்கோட்டை நகராட்சியின் 1-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ரேகா மதன் போட்டியிடுகிறார். அவர் கொடுக்கும் வாக்குறுதிகள் பெரும் கவனம் பெற்றுவருகின்றன. `ஒவ்வொரு வீட்டுக் கதவிலும் என் செல்போன் நம்பர் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்படும். எதுவாக இருந்தாலும் என்னை அழைக்கலாம். வார்டின் மையப் பகுதியில் புகார்ப் பெட்டி வைக்கப்படும். தினமும் மாலை பெட்டி திறக்கப்பட்டு, பொதுமக்கள் போடும் புகார்கள் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கரன்ட் பில்லை என்னிடம் கொடுத்துவிட்டால் ஆன்லைனில் நானே கட்டிவிடுவேன். வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களில் யாராவது இறந்தால், அவர்களது இறுதிச்சடங்கிற்கான செலவு செய்யப்படும்' என ரேகா மதன் கொடுக்கும் வாக்குறுதிகளால் பரபரத்துக் கிடக்கிறது பட்டுக்கோட்டை.
* தமிழ்நாட்டில் எங்கு தேர்தல் நடந்தாலும் விதவிதமான கெட்அப்களில் ஆஜராகிவிடுவார், கோவையைச் சேர்ந்த நூர் முகமது. 38 தேர்தல்களில் களம்கண்ட நூர் முகமது, இந்த முறை கோவை மாநகராட்சி 94-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். ராஜா வேடத்தில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த முகமது, கோமாளி வேடம் அணிந்து பிரசாரம் செய்யவிருக்கிறார். “சாரே... ஒவ்வொரு முறையும் பெரிய கட்சிங்ககிட்ட பணம் வாங்கிட்டு ஓட்டு போட்டு ஏமாந்துபோறது மக்கள்தான். அவங்க அறியாமைய சொல்றதுக்குத்தான் கோமாளி வேஷம் போடறேன். ஏமாறவங்கதான் கோமாளி” என்கிறார் பளீரென்று.
* அ.ம.மு.க சார்பில் கோவை மாநகராட்சி 90-வது வார்டில் போட்டியிடுகிறார் நாபிக். வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, தன் மகளுக்கு ஜெயலலிதா கெட்டப் போட்டுக் கூட்டிவந்தார். “செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா...” என்று கேட்ட அந்தக் குட்டி ஜெ.வைச் சுற்றி பொம்மைத் துப்பாக்கியுடன் ஐந்து சிறுவர்கள் பிளாக் கேட்ஸ் கெட்டப்பில் நின்றுகொண்டிருந்தனர்.

* பலரும் கோயிலில் கும்பிட்டுவிட்டு பிரசாரத்தைத் தொடங்குவது வழக்கம். நெல்லை மாநகராட்சி 15-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிடும் பிரியங்கா, வயல்காட்டை வணங்கிவிட்டுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். நடவு நடுவது, களை பறிப்பது என விவசாய வேலைகள் செய்வேன். எங்கள் குடும்பத்தில் எந்த நிகழ்வையும் வயலை வணங்கிய பிறகே செய்வோம். அதனால்தான் இப்படிப் பிரசாரத்தைத் தொடங்கினேன்” என்று சென்டிமென்ட் காரணம் சொல்கிறார்.
* ஆம்பூர் நகராட்சியிலுள்ள 35-வது வார்டு பெண்கள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பா.ம.க சார்பில் தங்கமணி என்பவர் உட்பட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுப் பரிசீலனையின்போது, 8 பெண் வேட்பாளர்களின் மனுக்களையும் ஏற்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். இதில்தான் ஒரு ட்விஸ்ட்! ``பா.ம.க வேட்பாளர் தங்கமணி பெண் இல்லை, அவர் ஆண்'’ என மற்ற வேட்பாளர்கள் குரல் எழுப்பிய பின்னரே அதிகாரிகள் சுதாரித்தனர். வேட்பு மனுவில் வேட்பாளர்களின் புகைப்படம் ஒட்டப்படுவதில்லை. அவர்கள் தாக்கல் செய்யும் பிரமாணப் பத்திரத்தில்தான் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கும். தங்கமணியின் பிரமாணப் பத்திரத்தை எடுத்து, அவரது புகைப்படத்தைப் பார்த்து அதிகாரிகள் வெட்கப்பட்டுச் சிரித்தனர். இதையடுத்து, தங்கமணியின் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தனர். தங்கமணியோ, `‘அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்தவே மனுத்தாக்கல் செய்தேன்’' என மீசையில் மண் ஒட்டாத குறையாக நக்கலடித்துவிட்டுச் சென்றார்.
* விதவிதமான கெட்டப்களில் வேட்பாளர்கள் அசத்த, நீலகிரி மாவட்டம் கோத்தகிரிப் பேரூராட்சி 21-வது வார்டு சுயேச்சை வேட்பாளரான வளர்மதி, தேயிலைத் தோட்டத் தொழிலாளிபோல் இடுப்பில் கோணி கட்டி, தேயிலைகளைப் பறித்துப் போடும் தலைப்பையை மாட்டிக்கொண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவரான வளர்மதி, சாலை, சுடுகாடு, குடிநீர், தடுப்புச் சுவர் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்படும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலையை உணர்த்தவே இப்படி வந்தாகச் சொன்னது, தேர்தல் அதிகாரிகளையே கலங்கச் செய்தது.