
முதுகலை பொறியியல் படித்துவரும் சாருகலா என்பவர் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்காடம்பட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வாகியுள்ளார்.
ஒன்பது மாவட்டங்களில் நடந்து முடிந்திருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க தரப்பில், தேர்தல் நடத்தப்பட்ட விதம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது. இத்தகைய அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் இந்தத் தேர்தலில் கல்லூரி மாணவிகள், 90 வயது மூதாட்டி என சாமான்யர்கள் சிலர் தேர்வாகியுள்ளனர். கணவன் - மனைவி, தந்தை - மகள் எனக் குடும்ப உறவுகளும் தேர்வாகியிருக்கின்றன. அப்படி, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடந்த சுவாரஸ்யங்கள் குறித்துப் பார்க்கலாம்...
சொல்லில் அல்ல... செயலில் காட்டுகிறேன்!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றிய கவுன்சிலராக தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார், 21 வயது நிரம்பிய தீபிகா. பி.சி.ஏ இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துள்ள தீபிகாவுக்கு, தன் தந்தை இளவழகன் மூலம் சிறு வயதிலேயே அரசியல் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. சொல்லைவிடச் செயலே பிடிக்குமாம் இவருக்கு!
முதலமைச்சர் வழியில் சேவை!
ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற 140 மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தலில், `அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்’ என்ற பெருமை திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க வேட்பாளர் பிரியதர்ஷினி ஞானவேலனுக்குக் கிடைத்துள்ளது. எம்.எஸ்ஸி., எம்.பில்., எம்.எட் படித்துள்ள இவர், தன்னை எதிர்த்துக் களமிறங்கிய மொத்த வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். ``முதலமைச்சரைச் சந்தித்தபோது என்னைப் பாராட்டியது பெருமையாக இருக்கிறது. என்னை நம்பி மகுடம் சூட்டிய மக்களுக்கு முதல்வரின் வழியில் சேவை செய்வேன்” என்கிறார்.
இளமையும் முதுமையும்!
முதுகலை பொறியியல் படித்துவரும் சாருகலா என்பவர் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்காடம்பட்டி ஊராட்சித் தலைவராகத் தேர்வாகியுள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட சிவந்திபட்டி கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்க ப்பட்டிருப்பவர், பெருமாத்தாள். 90 வயது மூதாட்டியான அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இரு பெண் வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார். ``மக்களுக்கு நல்லது செய்யுறதுக்கு வயசு தடையா இருக்காதுய்யா... எப்ப வேணும்னாலும் என்னை வந்து சந்திச்சு பிரச்னைகளைச் சொல்லலாம். நீ வேணும்னா பாரு, இந்த ஊரை எப்படி மாத்திக் காட்டுறேன்னு’’ என்று சவால் விடுகிறார்.
ஐ.ஏ.எஸ் கனவு தோற்றது... அரசியல் வென்றது!
நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்கு உட்பட்ட வார்டில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட உமாதேவி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சியினரைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இரண்டு முறை ஐ.ஏ.எஸ் தேர்வில் நேர்முகத் தேர்வு வரை சென்ற போதிலும் வெற்றியைக் கைப்பற்ற முடியாத அவருக்கு, அரசியல் கைவசமாகி யிருக்கிறது.
கொல்கத்தாவில் சுங்கத்துறை ஆணையராக இருக்கும் 2011 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான உமாசங்கரின் தங்கையான இவருக்கு, பல்வேறு சங்கத்தினரும் கொடுத்த ஆதரவு காரணமாக வெற்றி சுலபமாகியிருக்கிறது. வெற்றி பெற்ற கையோடு தி.மு.க-வில் இணைந்துள்ளார் உமாதேவி.
உள்ளாட்சியில் வென்ற குடும்பங்கள்!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியனில் தி.மு.க-வின் ஐ.டி விங் பொறுப்பாளரான ஆரோக்கிய எட்வினும் அவர் மனைவி சௌமியாவும் வெற்றி பெற்றுள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு யூனியனுக்கான வார்டு தேர்தலில் தி.மு.க-வைச் சேர்ந்த ஜார்ஜ் கோசல், அவரின் மனைவி இந்திரா கோசல் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதே யூனியனில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரான தமிழ்ச்செல்வன், அவரின் மகள் கிங்ஸ்லி மோசஸ் ஆகியோர் வெற்றியைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.
வள்ளியூர் யூனியன் வார்டு தேர்தலில், நெல்லையின் சிட்டிங் எம்.பி-யான ஞானதிரவியத்தின் மகன் சேவியர் ராஜா வெற்றி பெற்றுள்ளார். அதே யூனியனில் தி.மு.க மாநில நிர்வாகியான கிரஹாம் பெல் தம்பி தினகரன் என்பவர் வென்றுள்ளார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினராகத் தேர்வான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராகும் எண்ணத்துடன் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார். அவரின் மனைவி சௌமியா ஜெகதீஷ், ராதாபுரம் யூனியனுக்கான வார்டுக்குத் தேர்வாகியிருப்பதால், அவரை சேர்மனாக்கும் முயற்சியும் நடக்கிறது.
வெற்றிபெற்ற மாற்றுத் திறனாளிகள்!
பொதுத் தேர்தல்களில் மாற்றுத்திற னாளிகளுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் ‘டிசம்பர் 3’ இயக்கம், முதன்முறையாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 7 மாவட்டங்களில் தங்களது உறுப்பினர்கள் 48 பேரைக் களத்தில் இறக்கியது. வார்டு உறுப்பினர் முதல் மாவட்ட கவுன்சிலர் வரை அனைத்துப் பதவிகளுக்கும் போட்டியிட்ட இந்த வேட்பாளர்கள், வெற்றிபெற்றால் தாங்கள் என்ன செய்வோம் என்பதை மட்டுமே பிரசாரத்தில் முன்னிறுத்தினார்கள். அந்த முயற்சியின் பலனாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவியையும், திருப்பத்தூர், விழுப்புரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 8 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளையும் தட்டிச்சென்றிருக்கும் இந்தத் தன்னம்பிக்கை நாயகர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்து வார்டுகளைத் தங்கள் வசப்படுத்தியிருக்கிறார்கள். வெற்றி தந்த மகிழ்ச்சியில் நம்மிடம் பேசிய இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் அண்ணாமலை, “மாற்றுத் திறனாளிகள் தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின் விதியை எதிர்த்து, 2011-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தோம். அதனடிப்படையில் 2012-ம் ஆண்டு மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்ட வர்களைத் தவிர, அனைவரும் தேர்தலில் பங்கேற்கலாம் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். அதன் தொடர்ச்சியாக 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருத்தச் சட்டத்தில், அனைத்து அரசுத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து பொதுத் தேர்தல்களிலும் 5 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத் தொடர்ச்சியாக அரசியல் மாநாடுகளை நடத்தி வருகிறோம்; முதல்வரிடமும் கோரிக்கை வைத்திருக்கிறோம். கண்டிப்பாக எங்களுக்கு எதிர்காலத்தில் இட ஒதுக்கீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் எங்கள் உறுப்பினர்களுக்குப் பயிற்சி கொடுத்துத் தேர்தலில் நிறுத்தினோம். வெற்றி பெற்றிருக்கும் எங்கள் உறுப்பினர்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக உழைப்பார்கள்” என்கிறார்.
ஒரு வாக்கு புரட்சி!
திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுமருதூர் பஞ்சாயத்துத் தலைவராக இருந்த ரமேஷ் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில், அவரின் மனைவி கன்னியம்மாள் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கடல்மணி, கன்னியம்மாளைவிட ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் கருப்பட்டி தட்டை காந்தி நகர் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதில் பிரபு 65 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் 64 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து சிலர் பேச வைத்தார்கள் என்றால், ஒரே ஒரு ஓட்டு வாங்கி ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் பேசவைத்தவர், கோவை மாவட்டம் குருடாம்பாளையம் வார்டு தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க பிரமுகர் கார்த்தி. மொத்தம் பதிவான 913 வாக்குகளில் அவர் பெற்றது ஒரே ஒரு ஓட்டு.
“அவர் தாமரையில் நிற்கலை. பா.ஜ.க வேட்பாளர் இல்லை. சுயேச்சை சின்னத்தில் நின்னாரு” என்றெல்லாம் பா.ஜ.க-வினர் ‘மீசையில் மண் ஒட்டலை’ கணக்காக முட்டுக் கொடுக்க, “அட எல்லாக் கட்சிக்காரங்களும் சுயேச்சை சின்னத்துலதான் நிப்பாங்க’’ என்று கார்த்தியின் பா.ஜ.க போஸ்டர்கள், பிரசார வீடியோக்களை வெளியிட்டதுடன் ‘ஒத்த ஓட்டு பா.ஜ.க’ என்று நேஷனல் டிரெண்டிங்கும் செய்துவிட்டார்கள்.
ஒரே ஓட்டு... ஓஹோன்னு டிரெண்டிங்!