Published:Updated:

தமிழகத்தில் தவறிய ஐபேக் கணிப்பு... மேற்கு வங்கத்தில் உண்மையானது!

பிரசாந்த் கிஷோர் - மம்தா
பிரசாந்த் கிஷோர் - மம்தா

மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அதிகபட்சமாக 100 இடங்களைத் தாண்டாது என்றும், அக்கட்சி வெற்றி பெறக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கில் தான் இருக்கும் என்றும் ஐபேக் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் முன்னதாக கூறியிருந்தார். தற்போது அவர் கணிப்பு உண்மையாகியிருக்கிறது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 100 இடங்களைத் தாண்டாது எனப் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறிய கணிப்பு உண்மையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் நிறுவனமான ஐபேக் நிறுவனத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், நடந்து
முடிந்த 5 மாநில தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க-வுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டார்.

பிரசாந்த் கிஷோர் -  ஸ்டாலின் - சபரீசன்
பிரசாந்த் கிஷோர் - ஸ்டாலின் - சபரீசன்

இந்தத் தேர்தலில் தமிழகத்தில், தி.மு.க மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சுமார் 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்று அவர் சொல்லி வந்தார். அதுவும் தி.மு.க தனித்துப் போட்டியிட்டாலே இந்த அளவுக்கான இடங்களைப் பெற்று
விட முடியும் என்றும், முடிந்தால் கூட்டணி இல்லாமல் தனித்தே கூட போட்டியிடலாம் என்றும் அல்லது 200 க்கும் அதிகமான இடங்களில் தி.மு.க போட்டியிட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியிருந்தார்.

ஆனால், அந்த யோசனையை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை. எனவே, கூட்டணி கட்சிகளைச் சேர்த்துக்கொண்டாலும், அவர்களுக்கு தேர்தலில்
போட்டியிடுவதற்கான தொகுதிகளைக் கிள்ளிக் கொடுத்தால் போதும் என்று பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தி இருந்தார்.

அவரது இந்த ஆலோசனை மற்றும் அவர் கொடுத்த அளவுக்கு அதிகமான நம்பிக்கை ஆகியவை காரணமாகத்தான் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில் தி.மு.க
கறார் காட்டியது. ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தி.மு.க-வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதும் இந்தக் காரணங்களால் தான்.

இந்த நிலையில், தமிழக தேர்தல் முடிவுகள் பிரசாந்த கிஷோரின் கணிப்புக்கு மாறாக வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டி
இடங்களைப் பெறும் அளவுக்கான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தாலும், ஐபேக் டீம் கணித்தபடி 200-க்கும் அதிகமான இடங்களிலெல்லாம் தி.மு.க கூட்டணி வெற்றி
பெற வாய்ப்பில்லை. மாறாக அ.தி.மு.க கூட்டணி கிட்டத்தட்ட 100 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

 மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

அதே சமயம், மேற்கு வங்கத்தில் பிரசாந்த் கிஷோரின் கணிப்பு உண்மையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அதிகபட்சமாக 100
இடங்களைத் தாண்டாது என்றும், அக்கட்சி வெற்றி பெறக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கில் தான் இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது, அப்படி பா.ஜ.க மட்டும் 100 இடங்களைத் தாண்டிவிட்டால் தான் அரசியல் ஆலோசகர் பணியையே கைவிடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், அவர் கணித்தபடியே மேற்கு வங்கத் தேர்தலில் பா.ஜ.க, மதியம் 12.30 நிலவரப்படி 88 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 202 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு