Election bannerElection banner
Published:Updated:

ஆளுநருடன் சந்திப்பு; மகளிரணி விழாவில் மனைவி! - மே.வங்க பா.ஜ.க முதல்வர் வேட்பாளராகிறாரா கங்குலி?

கங்குலி-டோனா கங்குலி
கங்குலி-டோனா கங்குலி

அக்டோபர் மாதத்தில், ஐபிஎல் போட்டிகள் நடந்துகொண்டிருந்த காரணத்தால், கங்குலியும் அவருடைய மனைவி டோனா கங்குலியும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்தார்கள். அந்தச் சமயத்தில் பா.ஜ.க-வினரிடமிருந்து டோனா கங்குலிக்கு அழைப்பு வந்தது... பா.ஜ.க-வில் இணைகிறாரா கங்குலி?

மேற்கு வங்கத்தில் ஏப்ரல் மாதத்துக்குள்ளாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க என இரண்டு கட்சிகளும் அனல் பறக்கத் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-இன் இந்நாள் தலைவருமான செளரவ் கங்குலி, மேற்கு வங்க ஆளுநரைச் சந்தித்திருக்கிறார். கொல்கத்தா ராஜ் பவனில் நிகழ்ந்த இந்த ஒரு மணி நேரச் சந்திப்பு, மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவையும், புகைப்படங்களையும், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தன்கார் (Jagdeep Dhankhar). மேலும் அந்த ட்விட்டர் பதிவில், ``பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் 4:30 மணிக்கு ராஜ்பவனில் நிகழ்ந்த சந்திப்பில், அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினேன். 1864-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகவும் பழைமையான கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்துக்கு வந்து பார்வையிட வேண்டுமென அழைத்தார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்டேன்'' என்று பதிவிட்டிருந்தார் ஜெக்தீப். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி,

இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். பேச வேண்டுமென அழைத்தார். மாநில ஆளுநர் அழைத்தால் நான் போகத்தானே வேண்டும்... நாங்கள் கிரிக்கெட் குறித்துத்தான் பேசினோம். வேறொன்றுமில்லை. ஜெக்தீப் ஆளுநராகப் பதவியேற்று ஓராண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அவர் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தைப் பார்த்ததில்லை. அடுத்த வாரத்தில் அவரை ஈடன் கார்டன்ஸ் மைதானத்துக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்.
செளரவ் கங்குலி

கடந்த சில ஆண்டுகளாகவே கங்குலியை பா.ஜ.க-வில் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. கங்குலியை பா.ஜ.க தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்ததாகவும், ஆனால், அரசியலுக்கு வருவதில் கங்குலி பெரிய ஆர்வம் காட்டவில்லை என்றும் கடந்த காலங்களில் வெளியான செய்திகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர் மீண்டும், `பா.ஜ.க-வில் இணைகிறார் கங்குலி' என்கிற செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர் பேசுகையில், ``பிரபலங்களைக் கட்சியில் சேர்த்து, தங்கள் பலத்தைக் கூட்டுவது பா.ஜ.க-வின் ஸ்டைல். அதிலும் கிரிக்கெட் பிரபலங்களைத் தங்கள் கட்சிக்குள் கொண்டுவருவதற்கு பெரும் முயற்சிகளை பா.ஜ.க தொடர்ந்து செய்துவருகிறது. உதாரணமாக, கெளதம் கம்பீரை கட்சியில் இணைத்து, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவரை எம்.பி ஆக்கியது பா.ஜ.க. அதேபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கட்சியில் இணைக்க அணுகியதாகக்கூடச் செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் நீண்டகாலமாகவே பா.ஜ.க-வின் பட்டியலில் இருக்கும் கிரிக்கெட் பிரபலம் கங்குலி.

கங்குலி
கங்குலி
Twitter
தோனி-அமித் ஷா சந்திப்பு...  ஜெய் ஷா தலையீடு... - தோனி ஓய்வில் அரசியல் இருக்கிறதா?

மேற்கு வங்கத்தின் அடையாளங்களுள் ஒன்றாக கங்குலியைப் பார்க்கிறார்கள் அம்மாநில மக்கள். சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அவர் பா.ஜ.க-வில் இணைந்தால், அந்தக் கட்சிக்கு அது மிகப்பெரிய பலமாக இருக்கும். திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் மாளிகையை, `பா.ஜ.க-வின் மாநில அலுவலகம்' என்றே அழைக்கிறார்கள். பா.ஜ.க-வுக்கான டீல்கள் பலவும் அங்கு வைத்துத்தான் முடிக்கப்படுவதாக ஆளும்கட்சி குற்றம்சாட்டிவருகிறது. இந்தநிலையில் கங்குலி ஆளுநரைச் சந்தித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என கங்குலி சொல்கிறார். ஆனால், ஜெக்தீப் தன்கார் மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்று 17 மாதங்கள் கடந்துவிட்டன. இவ்வளவு காலம் ஆளுநரைச் சந்திக்காத கங்குலி, திடீரென தேர்தலுக்கு முன்பாக ஏன் ஆளுநரைச் சந்திக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

`கிரிக்கெட் குறித்துப் பேசினோம். வேறொன்றும் பேசவில்லை' என்கிறார் கங்குலி. ஆளுநரோ, `பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம்' என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இருவர் சொல்வதும் வெவ்வேறாக இருப்பதே `அரசியல் குறித்துப் பேசியிருப்பார்களோ' என்கிற சந்தேகத்தை வலுவடையச் செய்கிறது. ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அரசியல் குறித்தும் பேசியிருப்பார்கள் என்றே தோன்றுகிறது'' என்கிறார்கள்.

ஜெய் ஷா, கங்குலி
ஜெய் ஷா, கங்குலி
மேலும், ``கங்குலி பா.ஜ.க-வினருடன் நல்ல பழக்கத்தில் இருந்துவருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ-ன் செயலாளராக இருப்பதால், பா.ஜ.க-வின் முக்கியத் தலைவரான அமித் ஷாவுடனும் நல்ல நட்பில் இருக்கிறார் கங்குலி. கங்குலிக்கு மேற்கு வங்கத்திலிருக்கும் பேருக்கும் புகழுக்கும், பா.ஜ.க-வில் கங்குலி இணைந்தால், அவரை முதல்வர் வேட்பாளராகக்கூட அறிவிக்க வாய்ப்பிருக்கிறது'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கங்குலி, பா.ஜ.க-வில் இணைவது குறித்து செய்திகள் வெளியாகியிருக்கும் இந்தச் சமயத்தில், கடந்த அக்டோபர் மாத மத்தியில் நடந்த நிகழ்வு குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. அக்டோபர் மாதத்தில், ஐபிஎல் போட்டிகள் நடந்துகொண்டிருந்த காரணத்தால் கங்குலியும் அவரது மனைவி டோனா கங்குலியும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்தார்கள். அந்தச் சமயத்தில் பா.ஜ.க-வினரிடமிருந்து பாரம்பர்ய நடனக் கலைஞரான டோனா கங்குலிக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், `மேற்கு வங்க பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கொல்கத்தாவில் நடத்தப்படும் துர்கா பூஜை தொடக்க விழாவில் நீங்கள் கலந்துகொண்டு நடனமாட வேண்டும்' என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று இந்தியாவுக்கு வந்து அந்த விழாவில் கலந்துகொண்டார் டோனா. வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் பிரதமர் மோடி. அவரது உரைக்குப் பின்னர் பாரம்பர்ய நடனமாடினார் டோனா.

பா.ஜ.க-வினர் நடத்திய இந்த விழாவில் கலந்துகொண்டதன் காரணமாகவும், அந்த விழாவை நடத்திய பா.ஜ.க மகளிரணி நிர்வாகிகளுடன் டோனா இணக்கமாகப் பேசிக் கொண்டதன் காரணமாகவும் அந்தச் சமயத்தில் ஒரு செய்தி வெளியானது. `கங்குலி அரசியலில் களமிறங்க ஆர்வம் காட்டவில்லை என்பதால், அவரது மனைவியை அரசியலுக்குக் கொண்டு வர பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. அவருக்குச் சட்டமன்றத் தேர்தலில் சீட் வழங்கவும் பா.ஜ.க முடிவு செய்திருக்கிறது' என்பதுதான் அந்தச் செய்தி.

சரி, மீண்டும் ஆளுநருடனான கங்குலியின் சந்திப்புக்கு வருவோம்... இந்தச் சந்திப்பு குறித்து பா.ஜ.க-வின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, ``அவர்கள் இருவருமே அரசியல்வாதிகள் அல்ல. எனவே, இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்'' என்று கூறியிருக்கிறார். அதேநேரத்தில், பா.ஜ.க-வின் மேற்கு வங்கத் தலைவர் திலீப் கோஷ், ``கடந்த காலங்களில் எக்கச்சக்க பிரபலங்கள் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்கள். இனி வரும் காலங்களிலும் இணைவார்கள். கங்குலி போன்ற பிரபலங்களுக்காக பா.ஜ.க-வின் கதவுகள் திறந்தேயிருக்கும். டோனா கங்குலியும் பா.ஜ.க-வில் சேர்ந்தால் மகிழ்ச்சிதான்'' என்று பேசியிருக்கிறார்.

மனைவியுடன் கங்குலி
மனைவியுடன் கங்குலி
Twitter/ @DonaGanguly75
மேற்கு வங்கம்: `மிஷன் 200'... 11 பேர்கொண்ட குழு - மம்தாவை வீழ்த்துமா பா.ஜ.க?

இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி செளகட்ட ராய் (Saugata Roy), ``செளரவ் கங்குலி மேற்கு வங்கத்தின் அடையாளம். இன்று அவர் ஆளுநரைச் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பில் அரசியல் இருக்காது என்றே நம்புகிறோம். இந்தத் தேர்தலை `மம்தா Vs கங்குலி' (Didi Vs Dada) எனக் கொண்டு போகும் முயற்சியில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டிருப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், கங்குலி விவேகமானவர் என்பதால் பா.ஜ.க விரித்திருக்கும் வலையில் சிக்க மாட்டார் என்றே எண்ணுகிறோம்'' என்கிறார்.

அமித் ஷா, கங்குலி, ஜெய் ஷா - அருண் ஜெட்லி சிலை திறப்பு விழா, டெல்லி கிரிக்கெட் மைதானம்
அமித் ஷா, கங்குலி, ஜெய் ஷா - அருண் ஜெட்லி சிலை திறப்பு விழா, டெல்லி கிரிக்கெட் மைதானம்
Twitter/@drrishibjpwb

இந்தநிலையில், இன்று டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பிசிசிஐ தலைவர் கங்குலியும் ஒன்றாகக் கலந்துகொண்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் கங்குலியைச் சூழ்ந்த செய்தியாளர்கள், `பி.ஜே.பி-யில் இணையப்போகிறீர்களா?' என்ற கேள்வியைத் தொடர்ந்து முன்வைத்தனர். ஆனால், அந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக காரில் ஏறிச் சென்றுவிட்டார் கங்குலி.

கிரிக்கெட்டில், இறங்கி வந்து சிக்ஸர் விளாசுவதில் வல்லவரான செளரவ் கங்குலி, அரசியல் களத்தில் இறங்கி சிக்ஸர் அடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு