Published:Updated:

கர்நாடகா: `மக்கள் குரல் யாத்திரை; இலவச அறிவிப்புகள்' - எடுபடுமா காங்கிரஸ் தேர்தல் வியூகம்?!

கர்நாடகா - காங்கிரஸ்
News
கர்நாடகா - காங்கிரஸ்

கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை அடுத்து, காங்கிரஸ் கட்சி யாத்திரை செல்வது, இலவசங்கள் அறிவிப்பது எனப் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்த வியூகங்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த உதவுமா?

கர்நாடகா: `மக்கள் குரல் யாத்திரை; இலவச அறிவிப்புகள்' - எடுபடுமா காங்கிரஸ் தேர்தல் வியூகம்?!

கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை அடுத்து, காங்கிரஸ் கட்சி யாத்திரை செல்வது, இலவசங்கள் அறிவிப்பது எனப் பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்த வியூகங்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த உதவுமா?

Published:Updated:
கர்நாடகா - காங்கிரஸ்
News
கர்நாடகா - காங்கிரஸ்

கர்நாடாகாவில், பாஜக ஆட்சி நடந்துவருகிறது. இங்கு 224 தொகுதிகளுக்கு சட்டசபைத் தேர்தல், வரும் மே மாதம் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பாஜக முனைப்பு காட்டிவருகிறது. கடைசியாக, கடந்த 2013 - 2018-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அதன் பிறகு கர்நாடகத் தேர்தலில் தனித்த வெற்றி வாய்ப்பைப் பெற முடியவில்லை. இந்தத் தேர்தலில் வெல்ல, தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக, `மக்கள் குரல்’ என்னும் யாத்திரையைத் தொடங்கி நடத்திவருகிறது. இதில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

மக்கள் குரல் யாத்திரை
மக்கள் குரல் யாத்திரை

‘கர்நாடகம்’ - காங்கிரஸ் யாத்திரை விவரம்!

1924-ம் ஆண்டு, மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக பெலகாவி மாவட்டத்தில்தான் பொறுப்பேற்றார். இதனால் காங்கிரஸின் `மக்கள் குரல் யாத்திரை’ (Praja Dhwani Yatra) ஜனவரி 11-ம் தேதி அங்கிருந்து தொடங்கியது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் ஒரே வாகனத்தில் பயணித்து இந்த யாத்திரையை நடத்திவருகின்றனர். வரும் 29-ம் தேதி வரை இந்த யாத்திரை 22 மாவட்டங்களைக் கடந்து பெங்களூரில் நிறைவடையும். ஆனால், `என்ன காங்கிரஸ் யாத்திரை நடக்கிறதா?’  எனக் கேட்கும் நிலையில்தான் அவர்களின் யாத்திரை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன்.

காங்கிரஸ் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர்கள்

எப்போதும் ஒரு செயலைத் தொடங்கும்போது கர்நாடக காங்கிரஸிடம் இருக்கிற வேகம் படிப்படியாகக் குறைந்துவிடுகிறது. இந்த யாத்திரையின் தொடக்கத்தில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவிக்கப்பட்டது. பின்பு பிரியங்கா காந்தி வருகை தந்து, பெண்களைக் கவரும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 தருவதாக வாக்குறுதி வழங்கினார். இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில் யாத்திரை என்னவானது எனத் தெரியவில்லை.

கடந்த முறை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், எம்.பி-யுமான ராகுல் காந்தி நடத்திய 'பாரத் ஜோடோ யாத்திரை' நடந்தபோது மாநில காங்கிரஸின் செயல்பாடுகள் பாராட்டப்பட்டன. ஆனால், மெல்ல மெல்லத் தங்கள் வேகத்தில் சுணக்கம் காட்டத் தொடங்கினர். குறிப்பாக, டெல்லியிலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கர்நாடகத்தில் காங்கிரஸ் மெச்சும் அளவுக்கு இல்லை என்ற கூறப்பட்டது. அதன் பிறகுதான் இந்த யாத்திரை தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஆறு நாள்களாக நடந்துவரும் யாத்திரை மக்கள் மத்தியில் போய்ச் சேரவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
ட்விட்டர்

`அடிமட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் இல்லை!’

பாஜக மற்றும் ஜனதா தளம் சார்பாகவும் யாத்திரைகள் நடந்துவருகின்றன. அவற்றிலிருந்து தங்களைத் தனித்துவப்படுத்த காங்கிரஸ் பெரிதாக முயலவில்லை. இருப்பினும், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக வரிசையாகச் செய்திருக்கும் ஊழல், காங்கிரஸுக்கு ப்ளஸ் பாயின்ட்டாக மாறும் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்து. குறிப்பாக, பிட்காயின், பி.எஸ்.ஐ ஊழல், 40% கமிஷன் குற்றச்சாட்டு என பாஜக அரசுக்கு எதிராக அடுக்கடுக்காகப் பல ஊழல் குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸ் வைத்தது. இந்த ஊழல்களை உண்மையாக்கும் வகையில், ஒப்பந்ததாரர்கள் சிலர் அதிகாரிகளின் தொல்லை தாங்காமல் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டது மக்களுக்கு பாஜக மீதிருக்கும்  அதிருப்தியை அதிகப்படுத்தியது.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

இதை மனதில்வைத்து காங்கிரஸ் மக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. மற்ற இந்துத்துவா விவகாரங்களில் அரசை விமர்சிக்காமல், நிர்வாக எதிர்ப்பு அலை, வளர்ச்சியில் பின்தங்கிய நிலை, ஊழலை விவாதத்தில் வைப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். இதுதவிர, சாலைப் பள்ளம், மெட்ரோ தூண் இடிந்து விழுந்தது போன்றவை காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் ஆயுதமாக மாறியிருக்கின்றன. போலவே, தேர்தலில் மக்கள் வாக்குகளைப் பெற இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது.

இதையெல்லாம் தாங்கள் மேற்கொள்ளும் யாத்திரையில் தலைவர்கள் பேசலாம். ஆனால், அதை மக்களுக்கு எடுத்துச் செல்ல அடிமட்ட அளவில் வேலை பார்க்க காங்கிரஸில் நம்பிக்கையான ஆட்கள் இல்லை என்பது அவர்களுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், வாக்குச்சாவடி அளவில் வாக்காளர் அமைப்பில் ஆட்கள் பற்றாக்குறை தேர்தலில் காங்கிரஸின் பின்னடைவுக்கு வழிவகுக்கும்.

கர்நாடகாவில் பெண்களுக்கு ரூ.2,000 அறிவிப்பு
கர்நாடகாவில் பெண்களுக்கு ரூ.2,000 அறிவிப்பு
ட்விட்டர்

சாதகமாக இருக்கும் கருத்துக்கணிப்புகள்!

கடந்த ஒரு மாதமாக மேற்கொண்ட பல்வேறு கருத்தக்கணிப்புகள் காங்கிரஸுக்கு ஆதரவாகவும், பாஜக-வுக்கு எதிராகவும் இருக்கின்றன. கடந்த முறை 104 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, இந்த முறை 70 இடங்களையும், காங்கிரஸ் 115 இடங்களையும், ஜனதா தளம் 40 இடங்களையும் கைப்பற்றும் என்பது சில கருத்துக்கணிப்புகளின் முடிவாக இருக்கிறது.

கர்நாடக தேர்தல்!
கர்நாடக தேர்தல்!

இது காங்கிரஸுக்குச் சாதகமான முடிவாகப் பார்க்கப்பட்டாலும், தேர்தல் நடக்க இன்னும் காலம் இருப்பதால், காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்ற தைரியத்தில் பாஜக-வும், நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சியும் இருக்கின்றன. பாஜக நிர்வாகரீதியில் மண்ணைக் கவ்வியிருந்தாலும் சமூக வாக்குகள் நிச்சயம் காப்பாற்றும் என நம்புகிறார்கள். குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை இந்து விரோதி என விமர்சிப்பதும், அவர்கள் ஆட்சியில் கொண்டுவந்த பசுவதைத் தடுப்புச் சட்டம், மதமாற்ற தடைச்சட்டம், சில பெயர் மாற்றம் என இந்து சென்டிமெட் அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் என பெரும் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

கர்நாடகா: `மக்கள் குரல் யாத்திரை; இலவச அறிவிப்புகள்' - எடுபடுமா காங்கிரஸ் தேர்தல் வியூகம்?!

அதேபோல், பாஜக-வின் முக்கியத் தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கரிஷ்மா அவர்களுக்குக் கைகொடுக்கும். இது பாஜக-வின் அரசியல் திட்டமாக இருக்கிறது. மற்றொரு கூடுதல் நம்பிக்கையக, பாஜக அரசுக்கு இருப்பது கட்சியின் அடிமட்ட பலம். என்னதான் பா.ஜ.க நிர்வாகத்துக்கு எதிராகப் பல ஊழல்கள் நடந்தாலும், அடிமட்ட அளவில் கட்சியை நல்ல கட்டமைப்பில் வைத்திருக்கிறது பா.ஜ.க. விளம்பரங்கள், பூத் அளவில் வாக்காளர்களைக் கவரும் முயற்சியை பாஜக இப்போதே தொடங்கியிருக்கிறது.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

எனவே, அடிமட்ட அளவில் திட்டமிட்டு பிரசாரம் செய்து வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய செயல்வீரர்கள் காங்கிரஸில் இல்லாமல் இருப்பது, காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவுதான். ஆகவே அடிமட்ட ஒழுங்கமைப்பை சீரமைக்காத வரை, காங்கிரஸ் எத்தனை யாத்திரைகள் நடத்தினாலும், தேர்தல் இலவச அறிவிப்புகள் வெளியிட்டாலும் அறுதிப் பெரும்பான்மையுடன் அந்தக் கட்சி ஆட்சியில் அமர்வது பெரும் சவால் என்பதே மாநில அரசியலை உற்று நோக்குபர்களின் கருத்தாக இருக்கிறது.