Published:Updated:

வேலூர் தேர்தலில் எதிரொலித்ததா ஜம்மு-காஷ்மீர் விவகாரம்? - வாக்குப் பதிவு காட்சிகள்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்
பிரபாகரன் செ

`சர்ச்சைக்குரிய ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. வம்பாகிவிடும்' எனக் கூறியுள்ளார் அமைச்சர் நிலோஃபர் கபில்.

ஓட்டுப்போட்ட இஸ்லாமிய பெண்கள்
ஓட்டுப்போட்ட இஸ்லாமிய பெண்கள்

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு, மூன்று லட்சம் இஸ்லாமிய வாக்குகள் கொண்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலிலும் எதிரொலித்திருக்கிறதா... இஸ்லாமியர்களின் வாக்குகள் பெரும்பான்மையாகக் கிடைக்குமா என நடுநடுங்கிப் போயிருக்கிறார்கள் அ.தி.மு.க வேட்பாளர் தரப்பில். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 35 ஏ, 370 ஆகிய சட்டப் பிரிவுகள் ரத்துசெய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓட்டுப்போடக் காத்திருந்த இஸ்லாமிய பெண்கள்
ஓட்டுப்போடக் காத்திருந்த இஸ்லாமிய பெண்கள்

இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலிலும் காஷ்மீர் விவகாரம் பிரதிபலித்திருப்பதால் ஆளுங்கட்சியினர் ஆட்டம் கண்டுள்ளனர். வேலூர் தொகுதியில் மட்டும் 3 லட்சம் இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். இவர்களின் வாக்குகள் யாருக்குப் பெரும்பான்மையாகக் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. 

காஷ்மீர் விவகாரம் குறித்து இஸ்லாமிய வாக்காளர்கள் சிலரிடம் கேட்டோம். ``மத்திய அரசாங்கம் இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது. காஷ்மீர் விவகாரம் பற்றி எங்களுக்குத் தெரியவில்லை’’ என்றனர் சிம்பிளாக. வாணியம்பாடியைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபிலிடம் பேசினோம். 

அமைச்சர் நிலோஃபர் கபில்
அமைச்சர் நிலோஃபர் கபில்

``சர்ச்சைக்குரிய ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. வம்பாகிவிடும். அந்த விவகாரம் வேலூர் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவின் அரசு. ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் பிரசாரம் செய்திருக்கிறார்கள். நிச்சயமாக அ.தி.மு.க கூட்டணிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றிபெறுவார். இஸ்லாமிய மக்கள் எங்களை முழுவதுமாக ஆதரிக்கிறார்கள்’’ என்றார்.

அணைக்கட்டுத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார், ``மத்திய அரசு எடுக்கும் எல்லா முடிவுகளுமே சிறுபான்மையினருக்கு எதிரானதுதான். வேலூர் தேர்தல் முடிவு அவர்களுக்குப் பாடம் புகட்டும். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-பி.ஜே.பி கூட்டணி வேட்பாளரைத் தோற்கடிப்பார்’’ என்றார்.

ஓட்டுப்போடக் காத்திருந்த இஸ்லாமியர்கள்
ஓட்டுப்போடக் காத்திருந்த இஸ்லாமியர்கள்

காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டீக்காராமன், ``இந்துக்களும் இஸ்லாமியர்களும் அண்ணன், தம்பியாக வாழ்கிறோம். காங்கிரஸின் அடிப்படை கொள்கையே மதச்சார்புதான். காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்றுகூறி ஒரு லட்சம் வீரர்களை திடீரென குவித்துள்ளார்கள். உண்மையாகவா... என்று கவனித்த நேரத்தில் மத்திய அரசின் குட்டு வெளியாகியிருக்கிறது’’ என்றார்.