Published:Updated:

`ஜெயலலிதா அறிவித்த திட்டம்!' - சிப்காட் சர்ச்சையும் காரைக்குடி இளைஞர்களின் தேர்தல் புறக்கணிப்பும்

`காரைக்குடியில் தமிழக அரசு அறிவித்தபடி சிப்காட் தொழிற்பூங்காவினை அமைக்கவில்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்' என அப்பகுதி இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

சிப்காட்
சிப்காட்

தொழில் வாய்ப்புகளில் முன்னேற்றம் காணாத மாவட்டமாக சிவகங்கை இருந்து வருகிறது. இதைக் கருத்தில்கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் தொழில்வளத்தை அதிகரிக்கும் நோக்கில் காரைக்குடியில் சிப்காட் அமையும் என அறிவித்திருந்தார்.

ஜெயலலிதா, பழனிசாமி
ஜெயலலிதா, பழனிசாமி

ஆனால், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரின் சுயநலத்திற்காக இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், `சிப்காட் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை என்றால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்' என காரைக்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து காரைக்குடி பகுதியைச் சேர்ந்த மக்கள் மன்றத்தலைவர் ச.மீ.இராசகுமாரிடம் பேசினோம். ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2012ல் அறிவிப்பு செய்து, 2015ல் காரைக்குடியை யொட்டிய பகுதியில் சிப்காட் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பொருட்டு 4 வட்டாட்சியர்கள் உட்பட 18 அரசுப் பணியாளர்களை நியமித்து சிப்காட் தொடங்குவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அப்பகுதியில் பெருநிலங்களைக் கொண்ட அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் முதலாளிகள் எனப் பலரும் இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் சம்பந்தமில்லாத காரணங்களைச் சொல்லி இத்திட்டம் கைவிடப்பட்டதாகத் தமிழக அரசு அறிவித்தது.

சிப்காட் அமையவிருந்த இடம்
சிப்காட் அமையவிருந்த இடம்

காரைக்குடியில் 1,126 ஏக்கரில் சிப்காட் அமையவிருந்தது. இதன்மூலம் 1,500 மிகப்பெரிய உள்நாட்டு வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களும் உள்ளூர் தொழில் முனைவர்களுக்குத் தொழில் தொடங்க நல்ல வாய்ப்பும் கிடைத்திருக்கும். தற்போது அப்பகுதியில் ஒரு ஏக்கரின் விலை ஒரு கோடி ரூபாய் என்று இருந்தால், சிப்காட் மூலம் நிலத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மட்டுமே வழங்கப்பட்டிருக்கும். புதுக்கோட்டையில் திருச்சி நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் சிப்காட் தொழில் பூங்காவில் ஒரு தொழிற்சாலைக்கு ஒரு ஏக்கர் வீதம் ரூ.5 லட்சத்திற்கு மட்டுமே 99 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் விடப்படுகிறது.

இதனால் சிப்காட்டில் ஒரு பகுதியினை சிறுதொழில் மையம் அமைக்க தமிழக அரசின் சிட்கோவிற்கு வழங்கி, அவர்களின் மூலம் 5 சென்ட், 10சென்ட் என 500-க்கும் மேற்பட்ட சிறுதொழில் முதலாளிகளுக்கும் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும், இப்பகுதியில் உள்ள நாற்பதாயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைத்து, சிவகங்கை மாவட்டமும் காரைக்குடி பகுதியும் வளர்ச்சியை நோக்கி நடைபோட்டிருக்கும்.

இணையத்தில் போஸ்டர்
இணையத்தில் போஸ்டர்

இந்த வாய்ப்பை காரைக்குடி சுற்றுவட்டார மக்களும் சமூக நல அமைப்புகளும் நழுவவிடப்போவதில்லை. தமிழக அரசு உடனடியாக இடத்தை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு ஆதரவான போக்கினை மாற்றிக்கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசையினை நிறைவேற்ற உடனடியாக சிப்காட் தொழில் பூங்காவினை இப்பகுதியில் அமைக்கவேண்டும். இல்லை என்றால் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிப்பு செய்வோம்'' என்றார்.