காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய் மூட்டை... பா.ஜ.க வாக்குறுதிகள் செத்துப்போனவனின் ஜாதகம்...

இறுதிக்கட்ட பிரசாரத்தில் கர்நாடகத் தேர்தல் களம்
நெருங்கிவிட்டது கர்நாடகா சட்டமன்றத் தேர்தல். வரும் 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால், இறுதிக்கட்ட பிரசாரத்தால் பரபரப்பாகியிருக்கிறது அரசியல் களம்.
ஐவர் Vs ஐவர்
ஆளும் பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, மீண்டும் ‘மோடி அலை’ என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. கடலோர கர்நாடகா, கல்யாண கர்நாடகா, மைசூர் மண்டல், பெங்களூர் மண்டல், பெலகாவி மண்டல் எனப் பிரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் பா.ஜ.க-வினர். மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, இன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகிய ஐந்து பேரும் ‘ரோடு ஷோ’க்கள் மூலம் தேர்தல் களத்தைச் சூடாக்கிவருகிறார்கள்.

மறுபுறம் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகிய ஐந்து பேர் கர்நாடகம் முழுக்க வளையவருகிறார்கள். ராகுல், பிரியங்காவின் பிரசாரத்தில் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரின் காங்கிரஸ் எதிர்ப்பு பேச்சுகளை விமர்சித்தும், ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிரான பல கிடுக்கிப்பிடி கேள்விகளை முன்வைத்தும் அனலைக் கிளப்பிவருகிறார்கள்.
மதமும் ஊழலும்!
பா.ஜ.க தலைவர்கள் ஐவரின் பிரசாரத்தில் பிரதானமாக இருப்பது, ‘காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரானது. தீவிரவாதிகளுக்கு ஆதரவானது. இந்து அமைப்புகளை நசுக்குகிறது. பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறது. காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்றுதான். பாதுகாப்பான இந்தியாவை பா.ஜ.க-வால் மட்டுமே வழங்க முடியும்’ என்பவையே. தீவிர காங்கிரஸ் எதிர்ப்பை முன்வைப்பதோடு, லிங்காயத், ஒக்கலிகா சமூக மக்கள் அதிகமுள்ள பகுதிகள், இந்து அமைப்புகள் அதிகமுள்ள கடலோர கர்நாடகப் பகுதிகளில் இந்துத்துவப் பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள்.
காங்கிரஸ் தலைவர்களோ, ‘ஆளும் பா.ஜ.க அரசில் ஊழல் புரையோடிப்போயிருக்கிறது. அனைத்துப் பணிகளிலும் 40 சதவிகித கமிஷன் பெறப்படுகிறது. இந்துக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் பொய்களைக் கட்டவிழ்த்து வாக்கு சேகரிக்கிறது. பா.ஜ.க-வினர் அனைவரும் மோடியின் புகழ்பாடி வாக்குக் கேட்கிறார்களே தவிர, 40 சதவிகித ஊழல் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க மறுக்கின்றார்கள் ஏன்?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டபடி வாக்கு சேகரித்துவருகின்றனர்.

இரு கட்சிகளின் வாக்குறுதிகள்!
முதல்வர் பதவிக்குக் காய்நகர்த்தியபடி, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி பிரசாரம் செய்துவந்தாலும், பா.ஜ.க Vs காங்கிரஸ் இடையேதான் நேரடிப் போட்டி என்று சொல்லுமளவுக்கே தேர்தல் களம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவசப் பயணம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 உரிமைத்தொகை, வீட்டுக்கு மாதம் 200 யூனிட் விலையில்லா மின்சாரம், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை என வாக்குறுதிகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.
இலவசங்களுக்கு எதிரானவர்களாகக் காட்டிக்கொள்ளும் பா.ஜ.க-வும் போட்டி போட்டுக்கொண்டு இலவச வாக்குறுதிகளை வாரியிறைத்திருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழேயுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள், ‘போஷான்’ திட்டத்தின் கீழ் இலவசமாக தினமும் அரை லிட்டர் பால், கோயில்களைப் புனரமைக்க ரூ.1,000 கோடி நிதி, கோயில் நகரங்களை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதி என இந்துக்கள், இளைஞர்கள், விவசாயிகளைக் குறிவைத்து ‘இலவச’ வாக்குறுதிகளை வாரி வழங்கிவருகிறது. காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை ‘பொய் மூட்டை’ என்று பா.ஜ.க விமர்சிக்கிறது. பதிலுக்கு காங்கிரஸோ, ‘பா.ஜ.க-வின் வாக்குறுதிகள் செத்துப்போனவனின் ஜாதகம் போன்றது’ என்று போட்டுத்தாக்குகிறது.

‘ஸ்டாலினே திணறுகிறார்!’
காங்கிரஸின் வாக்குறுதிகள், குற்றச்சாட்டுகள் குறித்து பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர் மாளவிகா அவினாஷ் நம்மிடம் பேசியபோது, ‘‘ஸ்டாலின் தமிழகத்திலேயே பெண்களுக்கு மாதம் ரூ.1,000 ரூபாய் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார். இந்தச் சூழலில் காங்கிரஸார் இங்கு ரூ.2,000 கொடுக்கப்போவதாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. ஆட்சிக்கு வர மாட்டோம் எனத் தெரிந்துதான், இது போன்ற சாத்தியமற்ற ‘பொய் மூட்டை’ வாக்குறுதிகளை காங்கிரஸார் கூறுகின்றனர். பிரசார களத்தில் இன்றல்ல நேற்றல்ல, 2002 முதலே காங்கிரஸார் பிரதமர் நரேந்திர மோடியைத் தகாத வார்த்தைகளால் கொச்சையாகப் பேசுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆகியவற்றைத் தங்கள் வேலையாகச் செய்து வருகின்றனர். ஆனால், மோடி ஜெயித்துக்கொண்டேதான் இருக்கிறார்’’ என்றார்.
பா.ஜ.க முன்வைக்கும் விமர்சனம் குறித்து, கர்நாடகா காங்கிரஸ் தேர்தல் ‘வார் ரூம்’ தலைவரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்திலைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர் நம்மிடம், ‘‘கர்நாடகா, இந்தியாவின் ‘சிலிக்கான் வேலி.’ இங்கு அரசு வருவாய் ஈட்ட பல வழிகள் இருக்கின்றன. பா.ஜ.க-வினரின் 40 சதவிகித ஊழலை ‘கட்’ செய்தாலே மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எங்களால் நிறைவேற்ற முடியும். பா.ஜ.க-வினரைப் பொறுத்தவரை இந்துத்துவ முழக்கங்கள் மட்டுமே அவர்களின் தேர்தல் ஆயுதம். வளர்ச்சி குறித்தோ, மக்களின் நல்வாழ்வு குறித்தோ அவர்களுக்குச் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை’’ என்றார்.
வெல்லப்போவது பா.ஜ.க-வா, காங்கிரஸா என்கிற கேள்விக்கான விடை மே 13-ம் தேதி கிடைத்துவிடும்!