அலசல்
Published:Updated:

உள்ளாட்சி உய்யலாலா!

உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
News
உள்ளாட்சி உய்யலாலா!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021

ஸ்டாலின் படத்துடன் அ.ம.மு.க வேட்பாளர்!

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியத்தின் 13-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக அ.ம.மு.க சார்பில் போட்டி யிடுகிறார் சந்திரசேகர். குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அவர், தி.மு.க தலைவரான மு.க.ஸ்டாலின் படம் அச்சிடப்பட்ட பிட் நோட்டீஸ்களை விநியோகித்து வாக்கு சேகரித்துவருகிறார். அதனால் அதிருப்தியடைந்த தி.மு.க-வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், சந்திரசேகரோ, ‘‘முதல்வர் ஸ்டாலின் எல்லோருக்கும் பொதுவானவர். எனக்கும் அவர்தான் முதல்வர். அதனால்தான் அவர் படத்தை அச்சடித்து வாக்கு சேகரிக்கிறேன்’’ என்கிறார். “அட... எப்படியெல்லாம் காரணம் கண்டுபிடிக்கிறாங்க!” என்று கண்சிமிட்டுகிறார்கள் அவர் போட்டியிடும் வார்டு மக்கள்!

உள்ளாட்சி உய்யலாலா!

“நடவடிக்கை எடுங்க ஆண்டவரே!”

உள்ளாட்சித் தேர்தலில் ஒன்பது மாவட்டங்களிலும் சொல்லிக்கொள்ளும்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற 27 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலிலும் முதலில் போட்டியிடுவதாகச் சொல்லிவிட்டு, கடைசியில் பின்வாங்கிவிட்டார் கமல்ஹாசன். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியின் தோல்விக்கு கிராம அளவில் அடிப்படைக் கட்டமைப்பு இல்லாததே முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டது. இந்தநிலையில், “கட்சியைக் கீழ்மட்ட அளவில் வளர்ப்பதற்கான முயற்சியைச் செய்யாமல், வெறுமனே கிராமசபைக் கூட்டங்களை நடத்த அறிக்கை விட்டுக்கொண்டிருந்தால் எப்படி? முதலில் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுங்க ஆண்டவரே’’ என்று புலம்புகிறார்கள் அந்தக் கட்சியின் தொண்டர்கள்.

உள்ளாட்சி உய்யலாலா!

கவுன்சிலர் ஆனார் ரௌடியின் மனைவி!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பிரபல ரௌடிகளில் ஒருவர் நெடுங்குன்றம் சூர்யா. இவர்மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. சூர்யாவும், அவரின் மனைவி விஜயலட்சுமியும் சமீபத்தில் பா.ஜ.க-வில் சேர்ந்தனர். தற்போது சூர்யா சிறையிலிருக்கும் நிலையில், நெடுங்குன்றம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து கெஜலட்சுமி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். ‘விஜயலட்சுமி தேர்தலில் போட்டியிடக் கூடாது’ என்று பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், எதிர்பாராத ட்விஸ்ட்டாக கெஜலட்சுமி வேட்புமனுவை வாபஸ் பெற, ரௌடியின் மனைவியான விஜயலட்சுமி போட்டியின்றி தேர்வானார்.

கலக்கும் காந்திய வேட்பாளர்!

``வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருள்களோ கொடுக்க மாட்டோம்’’ என்று உரக்கச் சொல்லி பிரசாரம் செய்துவருகிறார் தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் மணிமேகலை. காந்திய சிந்தனையாளர்களின் ஆதரவுடன் களமிறங்கியிருக்கும் இவருக்கு ஆதரவாக காந்தியவாதிகளான செங்கோட்டை விவேகானந்தன், வெங்காடம்பட்டி திருமாறன், காந்தி மியூசியம் பாதமுத்து, அன்புசிவன், முத்துசாமி ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருவதால் மணிமேகலைக்கு எதிராகப் போட்டியிடுவோர் கலக்கமடைந்துள்ளனர். “நான் வெற்றி பெற்றால், கிராமத்தில் செயல்பட்டுவரும் மதுக்கடையை இழுத்து மூட நடவடிக்கை எடுப்பேன்” என்று அறிவித்து, களமிறங்கியிருக்கும் மணிமேகலைக்கு பெண்களின் ஆதரவு பெருகிவருகிறது.

உள்ளாட்சி உய்யலாலா!

ஒருதலைபட்ச நடவடிக்கையா? - காட்பாடி களேபரம்...

வேலூர் மாவட்டம், காட்பாடி 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் அம்பிகா எழுதப் படிக்கத் தெரியாதவராம். அவரிடம், உதவி தேர்தல் அலுவலர் மனுவை வாபஸ் பெறும் படிவத்தில் கையெழுத்து பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அ.தி.மு.க மாநகர மாவட்டச் செயலாளர் அப்பு தலைமையிலான நிர்வாகிகள் பி.டி.ஓ அலுவலகத்துக்குள் சென்று, தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார் தலைமையிலான தி.மு.க-வினரும் திரண்டுவந்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க-வினர் மீது மட்டும் தேர்தல் அதிகாரி போலீஸில் புகார் அளித்தார். செப்டம்பர் 26-ம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த காட்பாடி பகுதி

அ.தி.மு.க செயலாளர் ஜனார்தனன், மாநகர மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் அமர்நாத், காட்பாடி ஒன்றிய முன்னாள் செயலாளர் ஆனந்தன் ஆகியோரைக் கைதுசெய்தது போலீஸ். இதையடுத்து, காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்திருப்பதாக மாநில தேர்தல் ஆணையரிடமும், டி.ஜி.பி-யிடமும் புகார் அளித்திருக்கிறது அ.தி.மு.க தலைமை.

உள்ளாட்சி உய்யலாலா!

போட்டி வேட்பாளரான மாற்று வேட்பாளர்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்தின் 14-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ம.க சார்பில் களமிறங்கியிருக்கிறார், வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சுரேஷ்குமார். இவர் மனு தாக்கலின்போது, தன் மனைவி தமிழரசியை மாற்று வேட்பாளராக முன்னிறுத்தியிருந்தார். இருவரின் மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தமிழரசி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரின் மனுவை வாபஸ் வாங்கவில்லை. வேட்புமனுவைத் திரும்பப் பெறும் தேதியும் முடிவடைந்து, சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டன. சுரேஷ்குமாருக்கு மாம்பழச் சின்னமும், அவரின் மனைவி தமிழரசிக்கு சுயேச்சை சின்னமான கைத்தடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. வேறு வழியில்லாமல் கணவன், மனைவி இருவருமே எதிரெதிர் வேட்பாளராக இருக்கிறார்கள்!