அரசியல்
Published:Updated:

உள்ளாட்சி உய்யலாலா!

உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
News
உள்ளாட்சி உய்யலாலா!

பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். என் வார்டில் ஒரு ஓட்டுகூட உங்கள் வேட்பாளருக்குக் கிடைக்காது

காத்திருந்து... காத்திருந்து...

‘கோவை மேயர் வேட்பாளர் இவர்தான்’ என்று அ.தி.மு.க பெண் நிர்வாகி ஒருவரின் படங்கள், சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. அவரும் அதன் பிறகு கட்சி நிகழ்ச்சிகளில் ஆக்டிவாக வலம் வந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சிகளில் தனக்கு இருக்கை போடுவதில் தொடங்கி, அனைத்துக்கும் தனி டீம் வைத்திருந்தார். ஜெயலலிதாபோலவே வெள்ளை நிறப் புடவை, கூலர்ஸ் அணிந்து ஸ்டைலாக வலம்வந்துகொண்டிருந்தார். மேயர் பதவியைக் குறிவைத்துப் பல நிகழ்ச்சிகளையும் நடத்தினார். பிற கட்சிகளில் சேர அழைப்பு வந்தும் அ.தி.மு.க மீதான நம்பிக்கையில் தவிர்த்துவந்தார். தற்போது, கோவை மாநகராட்சிக்கான கவுன்சிலர் வேட்பாளர்கள் பட்டியலில் அந்தப் பெண் நிர்வாகியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ‘வட போச்சே...’ என்று கடும் அப்செட்டில் இருக்கிறார் அந்த நிர்வாகி!

உள்ளாட்சி உய்யலாலா!

மனைவிக்காகக் கட்சியை உதறிய பா.ஜ.க நிர்வாகி!

வேலூர் மாநகராட்சி 28-வது வார்டில், தன் மனைவிக்காக சீட் கேட்டிருந்தார் மாவட்ட பா.ஜ.க இளைஞரணிச் செயலாளர் ராஜேஷ். அதற்காக விருப்ப மனுவையும் கொடுத்து, மனைவியை நேர்காணலிலும் பங்கேற்கச் செய்தார். ஆனாலும், அந்த வார்டில் வேறொரு பெண்ணுக்கு வாய்ப்பு வழங்கிவிட்டார்கள். இதனால் கொதித்தெழுந்த ராஜேஷ், ‘‘பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். என் வார்டில் ஒரு ஓட்டுகூட உங்கள் வேட்பாளருக்குக் கிடைக்காது’’ என்று சாபம்விட்டு, கட்சிப் பதவியைத் தூக்கியெறிந்திருக்கிறார். ‘‘அது உங்க மனைவிக்கு சீட் கேட்கும்போது தெரியவில்லையா?’’ என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்கள் பா.ஜ.க-வினர்!

உள்ளாட்சி உய்யலாலா!

மஞ்ச சட்டையைப் போட்டா எல்லாரும் அண்ணன் ஆகிட முடியுமா?

‘விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க’ என்றாலே, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான். தேர்தல் நேரத்தில் அவரின் பேச்சுதான் பரபரப்பாக இருக்கும். பண மோசடி வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்று நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், அமைதியாக உள்ளாட்சித் தேர்தல் பணிகளைக் கவனித்துவருகிறார். இந்த நிலையில், சாத்தூரில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய, சாத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனி, ‘‘அ.தி.மு.க-வுல நின்னு கவுன்சிலரா ஜெயிச்சுட்டு யாராவது கட்சி மாறுனா, அவரை வீடு புகுந்து வெட்டுவேன். மா.செ ரவிச்சந்திரன் அண்ணன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டா இருக்கும். என்னோட இந்தப் பேச்சால என்மேல கேஸ் போட்டாலும் பிரச்னை இல்லை’’ எனவும், சில அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசினார். கட்சியினரை மிரட்டும் தொனியில் அவர் பேசிய வீடியோ வைரலாகிவந்த நிலையில், சாத்தூர் நகர் காவல் நிலைய போலீஸார், மூன்று பிரிவுகளில் சண்முகக்கனி மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். ‘‘வார்த்தைக்கு வார்த்தை அதிரடியாகப் பேசுற நம்ம அண்ணனே மஞ்ச சட்டையிலருந்து வெள்ளைச் சட்டைக்கு மாறி அமைதியாகி, தேர்தல் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்காரு. அண்ணன் மாதிரியே மஞ்ச சட்டையைப் போட்டுக்கிட்டு வெட்டுவேன், குத்துவேன்னு பேசிக்கிட்டு இருக்காரு இந்த சண்முகக்கனி. இவருக்கு இதெல்லாம் தேவைதானா... மஞ்ச சட்டையைப் போட்டுக்கிட்டா எல்லாரும் பேச்சுல அண்ணனை மாதிரி ஆகிட முடியுமா?’’ என்று அ.தி.மு.க-வினர் கிண்டலடிக்கிறார்கள்!