Published:Updated:

பெண் வாரிசுகளுக்கு சீட்டு; உள்ளூர் பெண்களுக்கு கல்தா!- மகாராஷ்டிரா தேர்தலில் அதிருப்தி

சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவதைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் ஓர் அம்சமாகக் குறிப்பிட்டிருக்கிறது, தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சி. சாவர்க்கருக்குக் கிடைத்த அங்கீகாரம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்கிறார்கள் அந்த மாநிலப் பெண்கள்.

தேர்தல் பாரதிய ஜனதா கட்சி சிவசேனா கட்சி
தேர்தல் பாரதிய ஜனதா கட்சி சிவசேனா கட்சி

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அக்டோபர் 21-ல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி சிவசேனா கட்சியுடனும், காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி அமைத்துப்போட்டியிடுகின்றன.

பங்கஜா முண்டே
பங்கஜா முண்டே

தங்கள் தலைவர்களில் ஒருவரான சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குவதைத் தங்கள் தேர்தல் அறிக்கையில் ஓர் அம்சமாகக் குறிப்பிட்டிருக்கிறது தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான ஆளும் பாரதிய ஜனதா கட்சி. சாவர்க்கருக்குக் கிடைத்த அங்கீகாரம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்கிறார்கள் அந்த மாநிலப் பெண்கள்.

மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 152-ல் பெண் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். இத்தனை பெண்கள் போட்டியிட்டாலும் பெண் வேட்பாளர்கள் சதவிகிதம் மாநிலம் உருவான காலம் தொடங்கி ஒற்றை இலக்கத்திலேயே இருப்பதாக இருகூட்டணிகளைச் சேர்ந்த பெண் வேட்பாளர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பெண் வேட்பாளர்கள் பட்டியலில் பிரநிதி ஷிண்டே இருக்கிறார்.

பிரநிதி ஷிண்டே
பிரநிதி ஷிண்டே

இவர் முன்னாள் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவின் மகள். பாரதிய ஜனதா வேட்பாளர்கள் பட்டியலில் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே இடம்பெற்றிருக்கிறார். இப்படிக் கட்சிகளில் பெண் வேட்பாளர்கள் பட்டியலும் யாரால் வாக்கு அதிகம் பெறமுடியும் என்கிற அடிப்படையிலேயே அமைந்திருப்பதாகச் சொல்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் ஒருவர். அவர் கூறுகையில், ”அனைத்துக் கட்சிகளிலும் இந்தப் பாலினப் பாகுபாடு இருக்கிறது. அது ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இந்தமுறை போட்டியிட சீட்டு பெற்ற பெண்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள். மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே உள்ளூர் பெண்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது” என்றார்.

``கிட்டத்தட்ட சரிபாதிக்கு இருக்கும் பெண் வாக்காளர்களுக்கு அவர்களது குறையைச் சட்டமன்றத்தில் எடுத்துக்கூற பெண் உறுப்பினர்கள் தேவை. ஆனால், தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் எண்ணிக்கையும் குறைவு என்பதால் அதுவும் நிகழுவதில்லை” என்கிறார் மகாராஷ்டிர அரசியல் விமர்சகரும் செயற்பாட்டாளருமான பரிநீத்தா பாட்டீல்.

காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சி

``பெண்கள் தங்களுக்குத் தகுதியானதை தாங்களே தேர்ந்தெடுக்காத வரை, தங்களுக்குத் தேவையான உறுப்பினர்களை தாங்களே கேட்டுப் பெறாத வரை இந்த நிலை மாறப்போவதில்லை” என்கிறார் பாட்டீல்.

1972 தேர்தலில் அந்த மாநிலத்தில் போட்டியிட்ட 56 பெண்களில் ஒருவர்கூட சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு இருந்தாலும் அது மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பொருந்தாது. இந்த நிலை தற்போது எவ்வளவோ மாறியிருக்கிறது. இருந்தும், பெண் வாக்களர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைக் கூட அவர்கள் முடிவு செய்வதில்லை என்பதே மகாராஷ்டிரத் தேர்தல் நிதர்சனம்.

மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை நான்கரை கோடி. இவ்வளவு பரந்து விரிந்த வாக்கு வங்கிக்கு போதிய பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை இல்லை என்பது துரதிர்ஷ்டமே.