Published:Updated:

மகாராஷ்டிரா, ஹரியானாவில் முந்தும் பா.ஜ.க? - கருத்துக் கணிப்பால் பரபரக்கும் தேர்தல் களம்

மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன் தமிழகம், புதுச்சேரி உட்பட 18 மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், 2 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது.

தேர்தல்
தேர்தல் ( PIB )

சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் இரண்டுமே பா.ஜ.க வசமிருப்பவை. இதனால், இந்தத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க தேர்தல் களத்தில் தீவிரமாக வேலை செய்தது. அதேநேரம், அந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.கவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வேலை செய்தது.

தேர்தல்
தேர்தல்
PIB

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் கூட்டணியோடு பா.ஜ.க ஆட்சியில் இருந்தது. அக்கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்தார். தற்போதைய தேர்தலையும் இதே கூட்டணியோடு பா.ஜ.க எதிர்கொண்டது. இருப்பினும் சிவசேனா கட்சியின் நிறுவனரான பால்தாக்கரேவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நேரடியாக தேர்தலில் களம்கண்டார். பால் தாக்கரேவின் பேரனான ஆதித்யா தாக்கரேவை முதல்வர் வேட்பாளராக சிவசேனா களம் நிறுத்தியது என்ற பேச்சும் மகாராஷ்டிரா தேர்தலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.

தி.மு.க வழியில் சிவசேனா... தேர்தல் களத்தில் சவாலைச் சந்திப்பாரா, ஆதித்யா தாக்கரே?

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க நேரடியாக 164 தொகுதிகளில் களமிறங்கியது. சில சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் பா.ஜ.க-வின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். அதேபோல், சிவசேனா கட்சி 124 தொகுதிகளில் போட்டியிட்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் கட்சி, 147 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 121 இடங்களிலும் போட்டியிட்டன.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் போக்கர் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் சவானும் இதே தொகுதியில் களம்கண்டிருக்கிறார். பால் தாக்கரேவின் பேரனும் சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவான யுவசேனாவின் தலைவருமான ஆதித்யா தாக்கரே, மும்பையின் வொர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இறுதி நிலவரப்படி மகாராஷ்டிராவில் 63 சதவிகித வாக்குகள் பதிவாகின.

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 75 தொகுதிகளை வென்று பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும் என்று நம்பிக்கையுடன் பேசியிருக்கிறார் முதல்வர் மனோகர்லால் கட்டார். அதேநேரம், பா.ஜ.க-விடம் இழந்த ஆட்சிக் கட்டிலை மீண்டும் பிடிக்கும் முனைப்போடு காங்கிரஸ் கட்சி களம்கண்டது. 90 இடங்களில் 48 பா.ஜ.க வசமிருந்தவை. சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 10 இடங்களைக் கைப்பற்றியது. அந்த நம்பிக்கையில் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க தேர்தலை எதிர்கொண்டது. அவர் கர்னல் தொகுதியிலும், முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவருமான பூபிந்தர்சிங் ஹூடா கிலோயின் கர்ஹி சம்ப்லா (Garhi Sampla) தொகுதியிலும் போட்டியில் இருக்கிறார்கள்.

மனோகர்லால் கட்டார்
மனோகர்லால் கட்டார்

இந்தத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் மூன்று விளையாட்டு வீரர்கள் களம்கண்டிருக்கிறார்கள். பபிதா போகத் (தாத்ரி தொகுதி), யோகேஷ்வர் தத் (சோனிபத்தில் உள்ள பரோடா தொகுதி), சந்தீப் சிங் (பெஹோவா தொகுதி). இவர்கள் தவிர அம்மாநிலத்தில் டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான சோனாலி போகத், ஆதம்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் களமிறக்கப்பட்டிருக்கிறார். தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் பா.ஜ.கவே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியிருக்கின்றன.

`18 மாநிலங்களில் இடைத்தேர்தல்; 2 சட்டப்பேரவைத் தேர்தல்!’ - விறுவிறுப்பாகத் தொடங்கியது வாக்குப்பதிவு

இதுதவிர, உத்தரப்பிரதேசத்தில் 11 தொகுதிகளுக்கும், குஜராத்தில் 6 தொகுதிகளுக்கும் பீகாரில் 5, அசாமில் 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. மேலும், தமிழகம் மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் ஒரு தொகுதி இடைத்தேர்தலைச் சந்தித்தது.