Election bannerElection banner
Published:Updated:

மம்தா vs சுவேந்து அதிகாரி: நந்திகிராமில் வெற்றி பெற்றது யார்..?! - சர்ச்சையான தேர்தல் முடிவுகள்!

 மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

`அதிகாரமும், பண பலமும் உங்கள் பக்கம் இருக்கலாம், ஆனால் மக்கள் ஆதரவு எனக்கு தான்' என்று சூளுரைத்து சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, தற்போது தேர்தல் களத்தில் கடும் போராட்டத்தை சந்தித்திருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணியானது இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் முன்னிலை வகித்த பா.ஜ.க, சில சுற்றுகளிலேயே பின்தங்கி போனது. தொடக்கத்தில் பின்னடைவைச் சந்தித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னிலை வகிக்க ஆரம்பித்தது. பிற்பகலுக்கு மேல் வெற்றி, மம்தா பக்கம் தான் என்று அடித்து சொல்லும் அளவிற்கு பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டியும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி மாநிலத்தின் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்த போதிலும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி மட்டும் ஆரம்பம் முதலே பின்தங்கி இருந்தார். கடைசி சில சுற்றுகள் வரையிலும், திரிணாமுல் காங்கிரஸின் மிக முக்கிய பொறுப்பில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்து நந்திகிராமில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி

இருந்தாலும் இறுதி சுற்று வாக்குகள் அனைத்திலும் மம்தா பானர்ஜியின் பெயர் தான் எழுதியிருந்தது போல, கடைசி கட்டத்தில் தன்னை விட சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்த பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியை மம்தா ஒருவழியாக போராடி தோற்கடித்ததாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் மம்தா தோல்வி அடைந்ததாக மீண்டும் ஒரு தகவல் பரவியது. இதனிடையே, ``நந்திகிராமில் தோல்வியை ஒப்பு கொள்கிறேன். இந்திய தேர்தல் ஆணையம் என்னை வெற்றியாளராக அறிவித்து, பின்னர் பின்வாங்கியது. இந்த விஷயத்தை நான் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வேன்” என்கிறார் மம்தா பானர்ஜி.

மம்தாவின் வலது கரமாக செயல்பட்டு வந்த சுவேந்து அதிகாரி பா.ஜ.க-வின் பக்கம் தாவி காலை வாரி விட்டார். சுவேந்து அதிகாரி வந்து விட்டதால் மம்தாவின் கதை முடிந்தது என்ற மனநிலையில் மிதப்பில் இருந்த பா.ஜ.க தலைமை, சுவேந்து அதிகாரியை வைத்தே நந்திகிராமில் மம்தாவை போட்டிக்கு வம்பிழுத்தது.

மம்தா - சுவேந்து அதிகாரி
மம்தா - சுவேந்து அதிகாரி

`அதிகாரமும், பண பலமும் உங்கள் பக்கம் இருக்கலாம், ஆனால் மக்கள் ஆதரவு எனக்கு தான்' என்று சூளுரைத்து சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, தற்போது தேர்தல் களத்தில் கடும் போராட்டத்தை சந்தித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு