Published:Updated:

மேற்கு வங்கத்தில் எடுபடாமல் போன பாஜகவின் வியூகம்.. அடித்து நொறுக்கிய மம்தா பானர்ஜி!

மோடி - மம்தா
மோடி - மம்தா

நந்திகிராமில் வேட்புமனு தாக்கலின்போது தன் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக மம்தா கூறிய குற்றச்சாட்டுகளும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்கள் வெளியானதும் அவர் மீதான அனுதாபத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.

மேற்கு வங்க தேர்தலில் தனது கட்சிக்கு எதிராக பாஜக மேற்கொண்ட அத்தனை அரசியல் வியூகங்களையும் அடித்து நொறுக்கி, மூன்றாவது முறையாக தனது
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தியதன் மூலம், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் மம்தா பானர்ஜி தான் மாபெரும் அரசியல் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படுகிறார்.

ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மாநிலத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 211 ல் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பாஜக மூன்று இடங்களில் வெற்றி பெற்றது. அதே சமயம் 2019
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 18 தொகுதிகளிலும் திரிணாமுல் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

 மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பாஜக வகுத்த வியூகம்!

இந்த வெற்றி தந்த உற்சாகத்தினால்தான், 2021 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது பாஜகவை ஆட்சியில் அமர்த்தி விட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜகவைச் சேர்ந்த
பல உயர்மட்ட தலைவர்கள் பல மாதங்களாகவே அடிக்கடி மேற்குவங்கத்துக்கு விசிட் அடித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட மோடி அமைச்சரவையே மேற்கு வங்கத்துக்கு இடம்பெயர்ந்து விட்டதோ எனச் சொல்லும் வகையில், அந்த
மாநிலத்தையே சுற்றிச் சுற்றி வந்தனர்.

மகாராஷ்டிராவில், குறிப்பாக மும்பையில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களை எப்படி பாஜகவும் சிவசேனாவும் இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கும் உத்தியாக
பயன்படுத்தியதோ, அதே உத்தியை மேற்கு வங்கத்தின் துர்கா பூஜை மற்றும் தசரா கொண்டாட்டங்களையும் பயன்படுத்தியது பாஜக. கூடவே வங்கத்தின் பெருமை மிகு தலைவர்களையும் இந்து அடையாளங்களுக்குள் வளைத்துப் போட முயன்றது. இது தவிர வேறு பல இந்துத்வா அஸ்திரங்களையும் அக்கட்சி பயன்படுத்தியது.

பாஜக தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த இந்த முயற்சியினால், கணிசமான மக்களிடையே இந்துத்துவா உந்தல்களை ஏற்படுத்தியதில், அக்கட்சிக்கான செல்வாக்கு ஓரளவுக்கு அதிகரித்தது. போதாததற்கு, மம்தா கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களைத் தன்பக்கம் வளைத்துப் போட்டு, மம்தாவுக்கு உளவியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கும் வேலைகளையும் கச்சிதமாக மேற்கொண்டது பாஜக. இதன் உச்சமாகத்தான், மம்தாவின் வலது கரமாக இருந்த நந்திகிராமின் முன்னாள் எம்எல்ஏ சுவேந்து அதிகாரியை பாஜக வளைத்துப் போட்டது.

கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராமில், டாடா மோட்டார் தொழிற்சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2007 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் ஒரே இரவில் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியானது.

மம்தா
மம்தா

மம்தா மேற்கொண்ட இந்த போராட்டம்தான் 2011 ஆம் ஆண்டில் அவர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, அடித்தளம் அமைத்தது. அந்த போராட்டத்தில் மம்தாவுக்கு வலிமையான தூணாக இருந்த சுபேந்து அதிகாரிதான், தற்போது நந்திகிராமில் போட்டியிட்ட மம்தாவுக்கு எதிராக பாஜக சார்பில் களத்தில் நிறுத்தப்பட்டார். மம்தாவும் பாஜகவுக்கு அதே பாணியில் பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவைத் தனது கட்சிக்குள் வளைத்துப் போட்டார்.

அனுதாபத்தை அள்ளிய மம்தா!

நந்திகிராமில் வேட்புமனு தாக்கலின்போது தன் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக மம்தா கூறிய குற்றச்சாட்டுகளும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படங்கள் வெளியானதும் அவர் மீதான அனுதாபத்தை மக்களிடையே ஏற்படுத்தியது. கட்டுப்போட்ட காலுடன் அவர் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தை நாடகம் என பாஜக விமர்சித்தாலும், தேர்தலில் அது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை.

இன்னொருபுறம் தனது முதல் நந்திகிராம் சுற்றுப்பயணத்தின் போது, தன்னை பிராமண குலத்தைச் சேர்ந்தவர் என்றும் மண்ணின் மகள் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொண்டது கூட பாஜகவின் இந்துத்துவா ஆயுதத்திற்கான மம்தாவின் பதிலடியாகவே பார்க்கப்பட்டது. பாஜகவை விட தன்னை அதிகமாக இந்து என்று காட்டிக்கொள்ள அவர் பேரணி மேடையிலேயே சண்டி வந்தனம் கூட நிகழ்த்திக் காட்டினார். அதே சமயம், வாக்குகளைப் பெறுவதற்காக மம்தா இந்த அளவுக்கு இறங்கி வர வேண்டுமா என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை.

மேற்கு வங்கத்தில் எடுபடாமல் போன பாஜகவின் வியூகம்..  அடித்து நொறுக்கிய மம்தா பானர்ஜி!

நம்பிக்கை கொடுத்த சிறுபான்மை வாக்காளர்கள்

இந்த சூழலில், பாஜகவின் சவாலை தடுக்க 30% சிறுபான்மை வாக்காளர்கள் கை கொடுப்பார்கள் என்று நம்பினார் மம்தா. பாஜக குறிப்பிட்ட இந்து வாக்குகளை ஒருமுகப்படுத்தும் அரசியலை மேற்கொண்டாலும், தனது கட்சிக்கு சிறுபான்மையினரின் பெரும்பான்மை வாக்குகளும், இந்துக்களிடையே தனக்கு ஆதரவாக உள்ள கணிசமான வாக்குகளும் இந்த தேர்தலில் வெற்றியை உறுதி செய்யும் என அவர் நம்பினார்.

அதே சமயம் பாஜகவும் சும்மா இல்லை. தேர்தல் நிர்வாகத்திற்காக கட்சி பல அடுக்கு நிறுவன கட்டமைப்பை அமைத்தது. மக்களவைத் தேர்தலின்போது கட்சி
அமைப்பை வழி நடத்திய பிரமுகர்களே இந்த தேர்தலிலும் அதற்கான பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் கிராமங்கள் அளவில் ஊடுருவி, பாஜவுக்கான ஆதரவு தளத்தை அமைப்பதில் பெரும் பங்காற்றின.

இன்னொருபுறம் கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் செல்வாக்கு இல்லாமல் போனது, மம்தா மற்றும் பாஜக ஆகிய இரண்டு தரப்புக்குமே வசதியாகப் போனது. பாஜக, மம்தா கட்சியை வீழ்த்துவதிலும், மம்தா பாஜகவை வீழ்த்துவதிலுமே முழு கவனத்தைச் செலுத்தினர்.

வாழ்வா சாவா போராட்டம்..

இத்தகைய சூழலில்தான் பாஜக கொடுத்த கடுமையான நெருக்கடிகள் அனைத்தையும் தனி ஒருவராக எதிர்கொண்டு சமாளித்தார் மம்தா பானர்ஜி. இந்தத் தேர்தலைப்
பொறுத்தவரை மம்தாவுக்கும் அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கிட்டத்தட்ட வாழ்வா சாவா போராட்டமாகவே இருந்தது. இன்னொரு புறம் தேர்தல் ஆணையமும் பாஜகவுக்கு ஆதரவாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மேற்கு வங்கத்தில் மட்டும் எதற்கு 8 கட்டத் தேர்தல், ஓரிரு கட்டங்களாக நடத்தாலாமே என்ற அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. கொரோனா பரவல் அதிகரிப்பதால், கடைசி மூன்று கட்டத் தேர்தலை, ஒரே கட்டமாக நடத்துங்கள் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. பாஜக தலைவர்களின் பிரசாரத்துக்கு வசதியாகவே தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்துகொள்வதாக மம்தா குற்றம் சாட்டினார். இன்னொருபுறம் மம்தா தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பிரசாரத்துக்குத் தடை விதித்து அவர் மீது நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், பாஜகவிடம் மிக மென்மையான போக்குடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தவிர நான்காம் கட்ட வாக்குப்பதிவின்போது நடந்த தேர்தல் வன்முறைகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை, வாக்களிக்க விடாமல் அச்சமூட்டுவதற்காகத்தான் என்றும் மம்தா குற்றம் சாட்டி இருந்தார்.

பா.ஜ.க குறிவைத்த மேற்கு வங்கம்... மோடி அலையை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பாரா மம்தா..?!

இத்தனை நெருக்கடிகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 200 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் பெருமை அனைத்தும், பாஜகவையும் அதன் பரிவாரங்களையும் ஒற்றை மனுஷியாக எதிர்கொண்டு வீழ்த்திய மம்தாவையே சாரும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு