Published:Updated:

`நாங்கள் என்ன குமாரசாமியா?’ - ஸ்டாலினுக்கு சவால்விடும் ராஜேந்திர பாலாஜி

லோகேஸ்வரன்.கோ

‘‘அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா?’’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாகப் பேசினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வேலூர் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க கூட்டணிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, கே.வி.குப்பத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ``ஸ்டாலின் குதிக்கிறார். கூப்பாடு போடுகிறார். கெஞ்சுகிறார். அவருக்கு, அந்த ஜாதகப் பொருத்தம் கிடையாது. 

ஸ்டாலின் பிரசாரம்
ஸ்டாலின் பிரசாரம்

8 பொருத்தமும் எங்கள் அண்ணன் எடப்பாடியாருக்குத்தான் இருக்கிறது. அடுத்த பொதுத்தேர்தலிலும் எடப்பாடியார்தான் முதல்வராக வருவார். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபையில் சட்டையைக் கிழித்துக்கொண்டே இருக்க வேண்டும். தி.மு.க தலைவராவதற்குச் சதி செய்து சொந்த அண்ணன் அழகிரியையே தூக்கியெறிந்து தலைமையைக் கைப்பற்றியவர் ஸ்டாலின். 

அப்படிக் குறுக்கு வழியில் எடப்பாடியார் முதல்வர் பதவியை பிடிக்கவில்லை. எங்களிடம் உங்கள் வேலையைக் காட்ட வேண்டாம். அ.தி.மு.க என்பது மனிதர் ஆரம்பித்த கட்சியில்லை. புனிதரான எம்.ஜி.ஆர் ஆரம்பித்த இயக்கம். 

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நடந்துமுடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க 13 இடங்களிலும் அ.தி.மு.க 9 இடங்களிலும் வென்றது. இதில் 13 என்பது பேய்களின் நம்பர். 9 என்பது நவ ரத்தினங்கள். எனவே, நாங்கள் நவ ரத்தினங்களைப் பெற்றிருக்கிறோம். அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா?

கர்நாடகாவைப்போல் தமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயன்றால் அவரை ஒரு கைபார்த்துவிடுவோம். ஸ்டாலினை அரசியலைவிட்டே எங்களால் வெளியேற்ற முடியும். தி.மு.க மட்டும்தான் ரவுடி கட்சியா... நாங்களும் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறோம். எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்கிறோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எடப்பாடியார் கண் அசைத்தால் போதும். தி.மு.க அவ்வளவுதான். அரசியல் பயணத்தை அவர் தொடரவே முடியாது. எங்கள் இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு தளபதியின் பின்னாலும் பெரிய வரலாறு இருக்கிறது’’ என்றார் காட்டமாக.