Published:Updated:

‘எடப்பாடி ஆட்சியில் தப்பு செஞ்சா பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும்!’ - ராஜேந்திர பாலாஜி

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்
பிரபாகரன் செ

‘‘எடப்பாடி ஆட்சியில் யார் தவறு செய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும். யாரும் தப்ப முடியாது’’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

வேலூர் மக்களவைத் தொகுதி, அ.தி.மு.க கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். கே.வி.குப்பம் சட்டமன்ற பகுதி தேர்தல் பொறுப்பாளராக அவர் இருக்கிறார். மேடைக்கு மேடை மைக்கைப் பிடித்து தன்னையே அறியாமல் தி.மு.க-வினரை அச்சில் ஏற்ற முடியாத கடும் சொற்களால் பேசுகிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சமீபத்தில், ‘‘தி.மு.க மட்டும்தான் ரவுடி கட்சியா, நாங்களும் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறோம். எடப்பாடி கண் அசைத்தால் போதும், ஸ்டாலினை அரசியல் களத்திலிருந்தே வெளியேற்றிவிடுவோம்’’ என்று ஆவேசப்பட்டார். நேற்றைய பிரசாரத்தில், ‘‘ஸ்டாலின் எதையுமே கொடுக்காமல் குற்றம் சொல்லியே பெயர் வாங்கிவருகிறார். 

சிங்கம், குட்டி போட்டால் அது சிங்கக்குட்டி. வேறொன்று போட்டால் அது வேற குட்டி. இது, அண்ணன் எடப்பாடியாரை அவமரியாதையாகப் பேசும் உதயநிதிக்குப் பொருந்தும். ஸ்டாலின் வளர்ப்பு, அதனால் அப்படிப் பேசுகிறார். முதல்வரை ஒருமையில் பேசுவதால் நாங்கள் குறைந்து போகமாட்டோம். நேரு, பொன்முடி போன்றோர் இருந்தும் உதயநிதி அரசியல் பேசுகிறார்.

உதயநிதி
உதயநிதி

அந்த அளவுக்கு தி.மு.க-வின் நிலை பரிதாபமாக ஆகிவிட்டது என்பதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க-வில் மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியல் நடக்கிறது. அ.தி.மு.க-வில் வாரிசு அரசியல் இல்லை. நான் சாதாரண ஒரு கூலித் தொழிலாளி. பல்வேறு பதவிகளைக் கடந்து இன்று அமைச்சராகி உள்ளேன்’’ என்றார். 

இந்த நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு ராஜேந்திர பாலாஜி கொடுத்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், ‘‘தி.மு.க-வினர் என்ன சொன்னாலும் இந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதியா? சட்டம் தன் கடமையைச் செய்யும். அ.தி.மு.க-காரன் தப்புசெய்தாலும் வழுக்கி விழுந்து கை உடையும். 

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தி.மு.க-காரன் தப்புசெய்தாலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடையும். எடப்பாடி ஆட்சியில் தப்பு செய்பவர்கள் யாரும் தப்ப முடியாது’’ என்றார். ‘‘கருணாநிதி, ஜெயலலிதாவுடன் மேடை நாகரிகமும் மறைந்துபோய்விட்டதாக வேலூர் மக்கள் ‘கமென்ட்’ அடிக்கிறார்கள்.