Published:Updated:

`அது எங்கள் சின்னம்; அவர் வெற்றி பெறலாம்!'- சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கியதால் ம.நீ.ம போர்க்கொடி

இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளருக்கு வழங்கப்பட்ட டார்ச் லைட் சின்னத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் நீதி மய்யம் மனு அளித்திருக்கிறது.

மக்கள் நீதி மய்யம்
மக்கள் நீதி மய்யம் ( விகடன் )

தமிழகத்தின் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளோடு புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். காமராஜர் நகர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ வைத்திலிங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பியாகிவிட்டதால் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது இந்தத் தொகுதி. காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 9 பேர் போட்டியிடுகின்றனர். அதில் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) என்ற கட்சியின் சார்பில் போட்டியிடும் லெனின் துரை என்பவருக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

நடிகர் கமலஹாசன்
நடிகர் கமலஹாசன்
விகடன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டது. இந்நிலையில் அந்தச் சின்னம் சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் அதிர்ச்சியடைந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். இதுகுறித்து அக்கட்சியின் புதுச்சேரி தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தேர்தல் ஆணையத்துக்கு மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த மனுவில், “மக்கள் நீதி மய்யம் கட்சி கமல்ஹாசனால் தொடங்கி செயல்பட்டு வருகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் இக்கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இக்கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக கமல்ஹாசன்செய்த பிரசாரத்தின் காரணமாக டார்ச் லைட் என்பது மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் எனத் தமிழகம், புதுச்சேரி மக்கள் மனதில் பதிந்துள்ளது.

சுயேச்சை வேட்பாளர் லெனின் துரை
சுயேச்சை வேட்பாளர் லெனின் துரை
விகடன்

அந்தத் தேர்தலில் புதுச்சேரியில் 3.85% வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது. இந்நிலையில் காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21.10.2019 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. நடைபெற உள்ள இடைத்தேர்தலால் ஆட்சியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதால் போட்டியிடத் தேவையில்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்து அறிவித்துள்ளார். இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சியின் வேட்பாளர் லெனின் துரை புதுச்சேரி தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது முற்றிலும் தவறானது.

கமலஹாசன்
கமலஹாசன்
விகடன்

ஏனென்றால் ஏற்கெனவே டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யத்திற்கானது என மக்கள் மனதில் பதிந்துள்ள நிலையில், தற்போது அதே சின்னத்தை வேறொரு வேட்பாளருக்கு ஒதுக்கியிருப்பதன் மூலம் வாக்காளர்கள் சுயேச்சை வேட்பாளர் லெனின் துரை மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் என்றோ அல்லது அவருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிக்கின்றது என்றோ நினைத்து வாக்களிக்கும் நிலை ஏற்படும். இதன் மூலம் வெற்றி பெறும் வேட்பாளர்கள்கூட மாறலாம். எனவே மக்கள் நீதி மய்யத்தின் சின்னமான டார்ச் லைட் சின்னத்தை சுசி கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு ஒதுக்கியிருப்பதை திரும்பப் பெற வேண்டும். மேலும் வேறு எந்த வேட்பாளருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித்தரக் கூடாது' என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.