திருப்பத்தூர் மாவட்டத்தில், பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட வாணியம்பாடி நகரமன்றத் தலைவர் பதவியைக் கைப்பற்றுவதற்காகத் தன் தாயுடன் களமிறங்கியிருக்கிறார் தி.மு.க நகரப் பொறுப்பாளர் சாரதிகுமார்.
வாணியம்பாடி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றன. தி.மு.க சார்பில் முதலாவது வார்டான பெரியபேட்டையில் தாய் உமா சிவாஜி கணேசனும், பொதுப்பிரிவுக்குள் வரும் பத்தாவது வார்டான அம்பூர்பேட்டையில் சாரதிகுமாரும் களமிறங்கினர்.

இந்த இரண்டு வார்டுகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி, தாயும் மகனும் வெற்றிபெற்றுள்ளனர்.
ஒன்றாவது வார்டில் மொத்தம் 1,507 வாக்குகள் பதிவாகின. அவற்றில், உமா சிவாஜி கணேசன் 1,222 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல, உமாவின் மகனும், தி.மு.க நகரப் பொறுப்பாளருமான சாரதிகுமாரும் பத்தாவது வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

11 மணி நிலவரப்படி, வாணியம்பாடி நகராட்சியில் முதல் 10 கூடத்துகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 4 மற்றும் 8 ஆகிய இரண்டு வார்டுகளிலும் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற 8 வார்டுகளையும் தி.மு.க கைப்பற்றியுள்ளது.
இதைத் தவிர, மற்ற வார்டுகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். எனவே, வாணியம்பாடி நகரமன்றத்தை தி.மு.க கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையே களநிலவரம் காட்டுகிறது.