Election bannerElection banner
Published:Updated:

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினை ஓரங்கட்டிய `நாம் தமிழர்' காளியம்மாள்! - எதில் தெரியுமா?!

நாம் தமிழர் காளியம்மாள்
நாம் தமிழர் காளியம்மாள்

பிரமாணப் பத்திரப் பதிவிறக்கங்களில் ஸ்டாலின், இ.பி.எஸ், ஓ.பி.எஸ்-ஸை ஓரங்கட்டிய நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் - காரணம் என்ன?

``விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டுவந்தது, மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது ஐயா ஸ்டாலின்தான். மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டுவர உதவி செய்துகொண்டிருப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். உங்க வாக்குகளையெல்லாம் யாருக்கு போட்டுருக்கீங்கனு பாருங்க'' - நாம் தமிழர் கட்சியின் பூம்புகார் தொகுதி வேட்பாளர் காளியம்மாள் தேர்தல் பிரசாரத்தின்போது ஆவேசமாக உதிர்த்த வார்த்தைகள் இவை!

இதுமட்டுமல்ல, பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பொது மேடைகளில் தைரியமாகப் பேசக்கூடியவர் காளியம்மாள். ஆவேசம், கிண்டல் எனக் கலந்துகட்டிப் பேசி மக்களின் கரவொலியைப் பரிசாகப் பெற்றவர் இவர். முக்கியத் தலைவர்களை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கும் காளியம்மாள், இ.பி.எஸ், ஓ.பி.எஸ், ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை ஓரங்கட்டி, ஒரு விஷயத்தில் முந்தி நிற்கிறார்.

எடப்பாடி பிரமாணப் பத்திரம் பதிவிறக்கம்
எடப்பாடி பிரமாணப் பத்திரம் பதிவிறக்கம்
 `வெல்ல வியாபாரம் டு முதல்வர்'; `எமெர்ஜென்ஸி டு எதிர்க்கட்சித் தலைவர்' - பழனிசாமி Vs ஸ்டாலின்!

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அதை யார் வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்படி அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களுள் காளியம்மாளின் பிரமாணப் பத்திரமும் இடம்பெற்றிருக்கிறது!

இந்த விஷயத்தில்தான் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை முந்தியிருக்கிறார் காளியம்மாள்.

7.59 லட்சம்!
இதுவரை காளியம்மாளின் பிரமாணப் பத்திரம் 7,59,159 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது!

மற்ற தலைவர்களின் பிரமாணப் பத்திரங்கள்!

இதுவரை தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பிரமாணப் பத்திரம் 10,557 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரமாணப் பத்திரம் 10,529 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் பிரமாணப் பத்திரம் இதுவரை 3,348 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

சீமான் பிரமாணப் பத்திரம்
சீமான் பிரமாணப் பத்திரம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரமாணப் பத்திரம் 1.84 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது!
ஸ்டாலின் பிரமாணப் பத்திரம்
ஸ்டாலின் பிரமாணப் பத்திரம்

`சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020' குறித்துப் பேசி வைரலான பத்மபிரியா, மக்கள் நீதி மய்யம் சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டார். இவரது பிரமாணப் பத்திரம் 3,20,406 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ம.நீ.ம தலைவர் கமலஹாசனின் பிரமாணப் பத்திரம் 3,88,303 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

காளியம்மாள் யார்?

மேற்கண்ட பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில் காளியம்மாள் மட்டுமே அதிகம் பிரபலமில்லாதவராக இருக்கிறார். நாகப்பட்டினத்தைச் சொந்த ஊராகக்கொண்ட காளியம்மாள், மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர். பி.காம் வரை படித்திருக்கும் இவர், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். கஜா புயல், மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்குத் துணையாக நின்றவர் காளியம்மாள். சமூகப் பணிகள் மூலமாக நாம் தமிழர் நிர்வாகிகளின் அறிமுகம் கிடைக்க, பின்னர் தன்னை அந்தக் கட்சியில் இணைத்துக்கொண்டார் காளியம்மாள்.

காளியம்மாள்
காளியம்மாள்
Vikatan

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறக்கப்பட்ட காளியம்மாள், 60,515 வாக்குகளைப் பெற்றார். எளிமையான தோற்றம், ஆவேசமான பேச்சு ஆகியவற்றின் மூலம் குறுகிய காலத்தில் நாம் தமிழர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளராக மாறினார் இவர்! இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய நாம் தமிழர் கட்சியின் பிரசார பீரங்கியாகத் தேர்வுசெய்யப்பட்டார் காளியம்மாள். 2021 சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் தொகுதியில் களமிறக்கப்பட்டார் இவர்.

காளியம்மாளின் பிரமாணப் பத்திரத்தில்...

35 வயதாகும் காளியம்மாள் தன்னிடம் 10,86,500 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய குடும்பத்தினரின் பெயரில் 2,30,000 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

அசையாச் சொத்துகள் ஏதுமில்லை என்று குறிப்பிட்டிருக்கும் காளியம்மாள், தன் பெயரில் 2,83,000 ரூபாயும், கணவர் பெயரில் 1,25,000 ரூபாயும் கடன் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இத்தனை பதிவிறக்கங்கள் எப்படி?

`அதிகம் பிரபலமில்லாத காளியம்மாளின் பிரமாணப் பத்திரம் சுமார் எட்டு லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதன் காரணம் என்ன?' என்பது குறித்து பத்திரிகையாளர்கள் சிலர், ``ஸ்டாலின், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோருடைய பிரமாணப் பத்திரங்கள் அனைத்தும் பிரேக்கிங் நியூஸாக செய்திகளில் வந்துவிட்டன. அதனால் அதிகம் பேர் அவர்களுடைய பிரமாணப் பத்திரங்களைப் பதிவிறக்கம் செய்ய ஆர்வம் காட்டியிருக்க மாட்டார்கள்.

நாம் தமிழர் கட்சி அதிக அளவிலான இளைஞர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. இளைஞர்கள் பலரும் பிரமாணப் பத்திரங்களைப் பதிவிறக்கம் செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர். அதன் காரணமாகத்தான் சீமானுடைய பிரமாணப் பத்திரம் ஒரு கோடிக்கும் மேலான பதிவிறக்கங்களைப் பெற்றிருக்கிறது. காளியம்மாளைப் பொறுத்தவரை, சீமானுக்கு அடுத்து அந்தக் கட்சியில் ஆவேசமாக உணர்ச்சி பொங்கப் பேசக்கூடியவர் அவர்தான்.

காளியம்மாள் பிரமாணப் பத்திரம்
காளியம்மாள் பிரமாணப் பத்திரம்

காளியம்மாளின் மேடைப் பேச்சுகள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றன. சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிரப்பட்டன. அதன் விளைவாகவே இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் பிரசார பீரங்கியாகச் செயல்பட்டார் அவர். எனவே, இளைஞர்கள் பலரும் அவருடைய பிரமாணப் பத்திரத்தைப் பதிவிறக்கம் செய்ய ஆர்வம்காட்டியிருக்கலாம். அது மட்டுமல்லாமல் கோடீஸ்வர வேட்பாளர்களின் மத்தியில் சாமனியராகக் களமிறங்கியிருக்கும் காளியம்மாளிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்திலும் அதிக அளவில் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டிருக்கலாம்'' என்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு