Published:Updated:

தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் என்ன?

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

ஒவ்வொரு குடிமகனின் வாக்குக்கும் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும் உரிமையும் வலிமையும் உண்டு என்கிறது தேர்தல் ஆணையம். அதனால்தான், ஜனவரி 25 அன்று ஒவ்வோர் ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இளைஞர்களுக்கு வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

தேசிய வாக்காளர் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 25-ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளை முன்வைத்து தேர்தல் ஆணையத்தால் பிரசாரம் மேற்கொள்ளப்படும். அந்தவகையில், `வலுவான ஜனநாயகத்துக்கான வாக்காளர்களின் அறிவு (Electoral literacy for stronger Democracy) என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் தினத்தை கடைப்பிடிக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. கல்வி மற்றும் தேர்தல் செயல்பாடுகளில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் புதுப்பிப்பதில் கவனம் செலுத்தும் நோக்கில், இந்த ஆண்டின் தீம் உருவாக்கப்பட்டது.

தேசிய வாக்காளர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

தேசிய வாக்காளர்  தினம்
தேசிய வாக்காளர் தினம்
தேர்தல் ஆணையம்

இந்தியாவில் தேர்தல் ஆணையம் ஜனவரி 25, 1950 அன்று அமைக்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் அதன் தொடக்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 61-வது தொடக்க தினம் கொண்டாடப்பட்ட ஜனவரி 25, 2011-தேதியன்று, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று, தேசிய வாக்காளர் தினம் தொடர்பாக சட்ட அமைச்சக முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பெயரில், தேசிய வாக்காளர் தினமாக அந்த நாள் அனுசரிக்கப்பட்டது. வாக்குரிமையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரையும் வாக்களிக்க வைக்கும் நோக்கத்தில் தேசிய அளவில் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாறு, இந்த ஆண்டு (2020) இந்தியாவின் 10-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு குடிமகனின் வாக்குக்கும் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும் உரிமையும் வலிமையும் உண்டு என்கிறது தேர்தல் ஆணையம். அதனால்தான், ஜனவரி 25-ம் தேதியன்று ஒவ்வோர் ஆண்டும் தேசிய வாக்காளர் தினத்தை புதிய தீமுடன் கொண்டாடுகிறது. இளைஞர்களுக்கு வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கம்.

பேச்சுப் போட்டிகள், பிரசாரங்கள், புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள விநியோகம், வாக்காளர்களின் புகைப்படம் எடுத்தல் என பல இடங்களில் இந்நாளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல்களை நடத்துவதற்கான தன்னாட்சி அரசியலமைப்பைக் கொண்டது இந்தியத் தேர்தல் ஆணையம். இது மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டமன்றங்கள், நாட்டின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கான தேர்தல்களை நடத்துகிறது. 18 வயது நிரம்பிய எந்த இந்தியக் குடிமகனும் ஜனநாயகத் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகிறான். நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி பகுதிகளிலும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி, வயது 18 ஆகிவிட்ட அனைத்து தகுதியான வாக்காளர்களையும் அடையாளம் காண்பதே தேர்தல் ஆணையத்தின் முக்கியப் பணி.

இந்த ஆண்டு எப்படிக் கொண்டாடப்பட்டது?

10-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்ட இந்த ஆண்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டெல்லி மானக்‌ஷா மையத்தில் (Manekshaw centre) நடந்த விழாவுக்குத் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்திய தேர்தல் ஆணையம் தனது 70 ஆண்டு பயணத்தை நிறைவு செய்வதால் இந்த ஆண்டு `இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு மைல்கல்' ஆகும் என்று சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் செயல்முறையைத் துடிப்பானதாகவும், அதிக வாக்காளர்களைக் கொண்டதாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் எடுத்துக்கொண்டிருப்பதற்கு தன் நன்றிகளையும் வாழ்த்துகளையும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

`மிராக்கிள் ஃபுரூட்' சந்தைக்கு வந்தா சர்க்கரை தொழிலே இருக்காது... அது என்ன? 

புதிய வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவித்தல், வாக்களிக்கப் போதுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என நாட்டின் வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாள், வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, தேர்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்க நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கொண்டாடப்பட்டது.

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

தேசத்தை வழிநடத்தும் திறன் கொண்டவர்கள், பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பவர்கள், மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள் என வாக்காளர்கள் நினைக்கும் எவரையும் தங்களது தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை ஜனநாயக நாடான இந்தியாவில் உண்டு. குடிமக்கள் முன்வந்து சரியான தலைவரைத் தேர்வு செய்யாவிட்டால் நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் தடைபடுவதோடு மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் நலனையும் அது பாதிக்கும். குறிப்பாக, இளைஞர்கள் வருங்காலத்தில் வலுவான அடித்தளத்தை உருவாக்க, அவர்களை வாக்களிக்க ஊக்குவிப்பது மிக அவசியம். அதில், தேசிய வாக்காளர் தினத்தின் பங்கு மிக முக்கியமானது.

அடுத்த கட்டுரைக்கு