Published:Updated:

`ஸ்டாலினின் வாயில் வருவது எல்லாமே பொய்!' - ஓ.பன்னீர்செல்வம்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

`ஸ்டாலின் வாயைத் திறந்தாலே பொய் பேசுகிறார். 2023-க்குள் தமிழகம் குடிசையில்லாத மாநிலமாக மாற்றப்படும்' என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

வேலூர் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, இன்று மாலை ஒடுகத்தூர் மற்றும் லத்தேரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவர் பேசுகையில், ``சமுதாய சீர்திருத்தத்திற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார். 

ஓ.பன்னீர்செல்வம் - ஏ.சி.சண்முகம்
ஓ.பன்னீர்செல்வம் - ஏ.சி.சண்முகம்

தமிழ் சமுதாயம் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக வாழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா. ஏழைத் தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே வாழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த முப்பெரும் தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகிய குணங்களை ஒருங்கே பெற்ற தலைவர், புரட்சித் தலைவி அம்மா.

புரட்சித் தலைவர் 1972-ல் அ.தி.மு.க-வை தோற்றுவித்து மூன்று முறை யாரும் அசைக்கவும் வெல்லவும் முடியாத முதலமைச்சராக இருந்து, நாட்டு மக்கள் விரும்புகின்ற சிறப்பான ஆட்சியைத் தந்தார். சரித்திர திட்டங்களைச் செயல்படுத்தினார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக அம்மா பொறுப்பேற்று கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக வேதனைகளையும், சோதனைகளையும் சந்தித்தார். 

பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள்.
பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள்.

இந்த இயக்கத்தை ஒழித்துக் கட்ட நினைத்த கருணாநிதியின் சதிகளை முறியடித்து தியாக வாழ்க்கையை மேற்கொண்டு எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாத மாபெரும் இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு அம்மாவின் வழியில் இந்த ஆட்சியைத் தொண்டர்களாகிய நாங்கள் மக்கள் ஆட்சியாக வழிநடத்திச் செல்கிறோம்.

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் வாயில் வருவது எல்லாமே பொய். தமிழக மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை அம்மா உறுதிசெய்தார். குடிசையில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என்ற தொலைநோக்கு திட்டத்தை அம்மா கொண்டுவந்தார். குடிசையில்லாத மாநிலமாகத் தமிழகம் 2023-க்குள் மாற்றப்படும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

75,000 கோடி மதிப்பில் 11,45,000 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு இன்றுவரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கான ஆண்டு வருமானம் ஒரு லட்சம் கோடி ரூபாய். இதில் மூன்றில் ஒரு பங்கு நிதியை மாணவர்களின் இலவச கல்விக்காக ஒதுக்கியிருக்கிறோம். 

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நிறுத்திவிடுவார்கள் என்று ஸ்டாலின் புதுசா புருடா விடுகிறார். நாங்கள் ஏற்கெனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் 150 நாள் வேலை வாய்ப்பினைத் தந்துகொண்டிருக்கிறோம். எந்தக் காலத்திலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் நிறுத்தப்படாது.

பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள்.
பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்கள்.

இந்த வருடம் மழை பெய்யவில்லை. அதனால், சில இடங்களில் சிறிய பிரச்னை. அதனைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்துவிட்டோம். தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி பல வரலாற்றுத் தவறுகளை செய்திருக்கிறது. இலங்கையில் நான்கு லட்சம் தமிழர்களை கொன்றுகுவிக்கக் காரணமாக இருந்ததும் அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க தான்’’ என்றார்.