Published:Updated:

`எங்கள் வழி தனி வழி’ - தமிழ்நாடு பாஜக-வைக் கடுப்பேற்றுகிறாரா எடப்பாடி?!

எடப்பாடி பழனிசாமி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாட்டை ஓரிரு நாள்களில் அறிவிக்கவிருப்பதாக பாஜக கூறிவரும் நிலையில், அதிமுக சார்பில் அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு விநியோகம் செய்யத் தொடங்கியிருக்கிறது எடப்பாடி தரப்பு.

`எங்கள் வழி தனி வழி’ - தமிழ்நாடு பாஜக-வைக் கடுப்பேற்றுகிறாரா எடப்பாடி?!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாட்டை ஓரிரு நாள்களில் அறிவிக்கவிருப்பதாக பாஜக கூறிவரும் நிலையில், அதிமுக சார்பில் அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு விநியோகம் செய்யத் தொடங்கியிருக்கிறது எடப்பாடி தரப்பு.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா ஜனவரி 4-ம் தேதி காலமானார். இதையடுத்து, காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இரண்டே வாரத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிப்.27-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியிலிருக்கும் காங்கிரஸுக்கு மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, தேர்தல் பரப்புரைகள் தடல்புடலாகச் செய்துவருகிறார்கள்.

திருமகன் ஈவெரா - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
திருமகன் ஈவெரா - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த முறை த.மா.கா-வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல இந்த முறையும் அவர்களுக்கே ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணியிலிருக்கும் தேசியக் கட்சியான பா.ஜ.க, அந்தத் தொகுதியை வாங்கிவிடலாம் என எண்ணி தேர்தல் பணிக்குழுவைத் தொகுதியில் அமைத்தது.

ஆனால், எதிர்பார்க்காத விதமாக நேரடியாகக் களமிறங்கப் போவதாக எடப்பாடி தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த முடிவால் 'இடைத்தேர்தலில் கூட்டணியுடன் களத்தில் இறங்கி, தங்களின் வாக்கு சதவிகிதத்தை ஏற்றிக்கொள்ளலாம்' என்ற பா.ஜ.க-வின் எண்ணத்தில் பேரிடியாக விழுந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஒற்றைத் தலைமை விவகாரத்தால் பிரிந்து செயல்படும் பன்னீர்செல்வமும், 'நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. எனவே, எங்கள் சார்பாக வேட்பாளரை களமிறக்கவிருக்கிறோம்' என அறிவித்திருக்கிறார்.

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

இதனால் தங்கள் வேட்பாளரை நிறுத்தலாமா அல்லது விலகி நின்று அ.தி.மு.க-வுக்குள் நடைபெறும் சண்டையை வேடிக்கை பார்க்கலாமா என்று ஆலோசித்துவருகிறது பா.ஜ.க. அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாட்டை ஓரிரு நாட்களில் அறிவிக்கவிருப்பதாக பா.ஜ.க கூறிவரும் நிலையில், அ.தி.மு.க சார்பில் அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு விநியோகம் செய்யத் தொடங்கியிருக்கிறது எடப்பாடி தரப்பு. அதேபோல, கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்பது என பிஸியாக இருக்கிறது.  எடப்பாடியின் இந்த தனி வழிப் பயணம் பா.ஜ.க-வைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்கிறார்கள் கமலாலய சீனியர்கள்.

இதுதொடர்பாக கமலாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

" நாடு முழுவதும் பா.ஜ.க தலைமையில்தான் தேசிய முற்போக்கு கூட்டணி செயல்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அ.தி.மு.க பெரிய கட்சியாக இருக்கலாம். ஆனால், தேசிய கட்சியான எங்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர், இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து அறிவித்திருக்கலாம். கூட்டணி தர்மத்துக்கும் அதுதான் அழகாக இருந்திருக்கும். ஆனால், எந்த ஆலோசனையும் நடத்தாமல், தாங்களே போட்டியிடப் போவதாக அறிவித்தது சரியில்லை. அ.தி.மு.க-வில் தற்போது உட்கட்சி பிரச்னை பெரிதாக இருப்பதால், இடைத்தேர்தலுக்கு சின்னம் முடங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அடுத்தபடியாக எங்களிடம் மட்டுமே சின்னம் இருக்கிறது. எனவே, தி.மு.க-வுக்கு எதிராக பா.ஜ.க களமிறங்கினால், சரியான போட்டி ஏற்பட்டிருக்கும். ஆனால், அவசரகதியில் எடப்பாடி அறிவித்துவிட்டார். அத்தோடு நின்றிருந்தால் கூட பிரச்னையைச் சரிசெய்திருக்கலாம். இடைத்தேர்தலில் எங்களின் நிலைப்பாட்டைக் கேட்கக்கூட இல்லாமல், தற்போது விருப்ப மனுக்கான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் - மோடி - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - மோடி - எடப்பாடி பழனிசாமி

அதேபோல, ஓ.பி.எஸ் தரப்பும் வேட்பாளர்களை நிறுத்தவிருப்பதாக திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால், பா.ஜ.க போட்டியிடலாமா வேண்டாமா என்பதைத் தாண்டி, இப்போது யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதே குழப்பமாகிவிட்டது. இது கூட்டணிக்கு நல்லதல்ல. எனவேதான், இது குறித்து டெல்லிக்கு நோட் அனுப்பியிருக்கிறோம்" என்றனர் சூடாக.

இந்த நிலையில்தான்``நம்முடைய வழி தனி வழியாக இருக்க வேண்டும்” என தேனியில் எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசினார்.

 ``முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம். குறிப்பாக ஏழைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற அவர்கள் கனவை மெய்ப்பிக்க வேண்டும். நம்முடைய வழி தனி வழியாக இருக்க வேண்டும். நேர்மையான வழியாக இருக்க வேண்டும். அந்த இருபெரும் தலைவர்களின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும்” என பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் பேசியதையும் பாஜக கவனித்து நோட் அனுப்பியிருப்பதாகத் தகவல்!