இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றிபெற்று இருக்கிறது. இத்தேர்தலில் பாஜக 6 பெண்களையும், ஆம் ஆத்மி கட்சி 5 பெண்களையும், காங்கிரஸ் 3 பெண்களையும் வேட்பாளர்களாக நிறுத்தின. இதுதவிர சுயேச்சை பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 24 பெண்கள் போட்டியிட்டதில், பா.ஜ.க சார்பாக களமிறக்கப்பட்ட ரீனா என்ற பெண் மட்டும் வெற்றி பெற்று இருக்கிறார். ரீனா கடந்த 2021-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் இப்போது அதே இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 4 பெண்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடந்த தேர்தலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளர் என்று கருதப்பட்ட ஆஷா குமாரி, மூத்த காங்கிரஸ் தலைவர் கவுல் சிங் மகள் சம்பா தாக்குர் ஆகியோரும் தோல்வியடைந்தவர்களில் முக்கியமானவர்கள் ஆவர். இமாச்சல பிரதேசத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 49% பேர் பெண்கள். அதோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகபட்சமாக, 70.58% பேர் வாக்களித்துள்ளனர்.
மேலும், மூன்று தொகுதியில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். 19 தொகுதியில் ஆண் மற்றும் பெண் வாக்காளர்களின் விகிதம் ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. தேர்தலில் பெண் வாக்காளர்களை கவர 'ஸ்ரீசக்தி சங்கல்ப்' உட்பட 11 வாக்குறுதிகளை பா.ஜ.க கொடுத்திருந்தது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 33% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் பாஜக அறிவித்திருந்தது. பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.
இம்மாநிலத்தில் 1967-ம் ஆண்டு முதல், இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் 43 முறை மட்டுமே பெண்கள் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதுவும், 20 பெண்கள் மட்டுமே எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வித்யா 8 முறையும், ஆஷா குமாரி 6 முறையும், சர்வீன் சௌதரி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். 1972-ம் ஆண்டுதான் முதன்முறையாக பெண் வேட்பாளர்கள் இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்டனர். அன்றிலிருந்து இன்றுவரை வெறும் 206 பெண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.