Election bannerElection banner
Published:Updated:

`ஏன் எனக்கு சீட் கொடுக்கலை!’ - கலங்கி நிற்கும் எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்!

பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்
பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்

நேற்றுவரை `நான்தான் பெருந்துறை தொகுதியின் வேட்பாளர்’ என உறுதியாக நம்பியிருந்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், சீட் இல்லை என்றதும் உடைந்துபோயிருக்கிறார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தோப்பு வெங்கடாசலம். வருவாய்த்துறை அமைச்சர், சுற்றுச்சூழல்துறை அமைச்சர், ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் எனப் பல பதவிகளில் இருந்தவர். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தின் ஒரே அமைச்சராகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்து பவர்ஃபுல்லாக வலம்வந்தார்.

2016-ல் ஈரோடு மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில் அ.தி.மு.க., ஜெயித்த பிறகும், தோப்பு வெங்கடாசலத்துக்கு எந்த அமைச்சர் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. இதற்கிடையே அவர் வசமிருந்த ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியும் பிடுங்கப்பட்டது. அப்போதிலிருந்து தோப்பு செம அப்செட்டாகவே வலம்வந்தார். எப்படியாவது அமைச்சர் பதவி மற்றும் மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிவிட வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார். எதுவுமே நடக்கவில்லை.

பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்
பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்

மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், பெருந்துறைத் தொகுதி கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் தோப்புவின் செயல்பாடுகள் மீது கடுமையான அதிருப்திகொண்டிருந்தனர். இம்முறை தோப்பு வெங்கடாசலத்துக்கு சீட் கிடைக்கக் கூடாது என அ.தி.மு.க -விலேயே ஒரு டீம் கடுமையாக வேலை செய்தது. தேர்தல் நெருங்க நெருங்க `தனக்கு சீட் கிடைக்குமா?’ என தோப்புவுக்கே சந்தேகம் தட்டியது. அதையடுத்து சென்னையிலேயே முகாமிட்டவர், `எம்.எல்.ஏ சீட்டை வாங்காமல் ஊருக்குத் திரும்பப் போவதில்லை’ என எடப்பாடியாரையே சுற்றிச் சுற்றி வந்தார். ஆனால், நேற்று வெளியான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலில் பெருந்துறைத் தொகுதியில் தோப்பு வெங்கடாசலத்தின் பெயர் இல்லை. நேற்றுவரை `நான்தான் பெருந்துறைத் தொகுதியின் வேட்பாளர்’ என உறுதியாக நம்பியிருந்த எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம், சீட் இல்லை என்றதும் உடைந்துபோனார். இதில் நொந்துபோன தோப்பு, முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க-வின் சீனியர் மூலமாக `எப்படியாவது ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்’ என சென்னை கிரீன்வேஸ் சாலையிலேயே வலம்வருகிறார்.

இந்தநிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தோப்பு வெங்கடாசலம், ``அம்மா மறைந்த பின்னால் அம்மாவை எந்த இடத்தில்வைத்துப் பார்த்தேனோ அப்படித்தான் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்குக் கட்டுப்பட்டு இருக்கிறேன். பெருந்துறைத் தொகுதியில் நான் எவ்வாறு செயல்பட்டிருக்கிறேன்... தொகுதிக்கு நான் செய்த பணிகள் என்னென்ன... எனப் பெருந்துறை தொகுதிக்குச் சென்று கேட்டுப் பாருங்கள்... என்னுடைய தொகுதியைச் சேர்ந்த மக்கள், இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் எதற்காக உங்களுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதற்கான காரணத்தைக் கேட்டார்கள். அதன் அடிப்படையில் முதலமைச்சரை நேற்று சந்தித்து இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறேன். முதல்வர் இதைப் பற்றி யோசனை செய்வதாகச் சொல்லியிருக்கிறார்.

எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்
எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்

துணை முதலமைச்சரைப் பார்க்க நினைத்தேன். அவரைச் சந்திக்க முடியவில்லை. எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு என்ன காரணம்... இந்த இயக்கத்துக்கு எவ்வளவு உழைப்பைக் கொடுத்திருக்கிறேன்... பல திட்டங்களை என் தொகுதிக்கு கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தியிருக்கிறேன். என்னுடைய செயல்பாடு சரியில்லையென்றால் அமைச்சர்கள் குற்றச்சாட்டு சொல்லலாம். நான் என்னுடைய தொகுதிக்கு கொண்டுவந்த திட்டங்கள் அவர்களைக் கோபப்படுத்தியிருக்கின்றன என்று சொல்லி என்மீது அவர்கள் பொறாமைப்பட்டால், அது இந்த இயக்கத்துக்கு பாதகமாக முடிந்துவிடும்.

நான் இந்த இயக்கத்துக்காக எட்டு முறை சிறை சென்றிருக்கிறேன். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் எத்தனை முறை இயக்கத்துக்காகச் சிறை சென்றிருக்கிறார்? தற்போதுவரை நான் அ.தி.மு.க-வில்தான் இருக்கிறேன். அ.தி.மு.க-வில் என்னுடைய விசுவாசம் முழுமையாக இருக்கும். வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் இன்னும் என்னுடைய தொகுதிக்குச் செல்லவில்லை. என்னுடைய தொகுதியிலுள்ள மக்கள், இயக்கத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்த பின்னர் மற்ற முடிவுகளை எடுப்பேன்” எனப் பேசியிருக்கிறார்.

செங்கோட்டையன் முதல் 3 புதுமுக வேட்பாளர்கள் வரை! - ஈரோடு அ.தி.மு.க வேட்பாளர்களின் பயோடேட்டா!

ஏற்கெனவே தினகரனின் அ.ம.மு.க முகாமமுக்குச் சென்றுவந்த தோப்பு வெங்கடாலசம், சீட் கிடைக்காத அதிருப்தியில் தினகரன் அணிக்குச் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தோப்பு என்ன முடிவெடுக்கிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு