தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் துரிதமாக செய்து வருகின்றன. முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. சென்னை உட்பட 11 மாநகராட்சிகள் இந்த முறைப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகள் அனைத்தும் நிறைவடையும் நிலையில் இருப்பதால், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ``கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவிவரும் தற்போதைய சூழலில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தள்ளி வைக்க வேண்டும். தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்ட நேரிடும்´´ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
