Published:Updated:

அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் சிக்கிய ரூ.38 லட்சம்; 1,192 மதுபாட்டில்கள்! - கமுதி சர்ச்சை

வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணம் மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட எஸ்.பி வருண்குமாருக்கு அலைபேசியில் ரகசிய தகவல் கிடைத்தது.

சோதனையில் சிக்கிய மது பாட்டில்கள்
சோதனையில் சிக்கிய மது பாட்டில்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அ.தி.மு.க முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.38,63,300 ரொக்கப் பணம் மற்றும் 1,192 மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருக்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பணம் மற்றும் மது பாட்டில்கள் சிக்கிய அ.தி.மு.க பிரமுகர் வீடு
பணம் மற்றும் மது பாட்டில்கள் சிக்கிய அ.தி.மு.க பிரமுகர் வீடு

கமுதி முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பாலு. அ.தி.மு.க-வைச் சேர்ந்த பாலுவின் தந்தை தர்மலிங்கம், அவரது சகோதரர் பெரிய பாலு, தாயார் ராணியம்மாள் ஆகியோர் அரசு ஒப்பந்தக்காரர்களாக இருந்து வருகின்றனர். இவர்களது வீடு கமுதி கண்ணார்பட்டியில் பகுதியில் உள்ளது. நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாலு, அ.தி.மு.க., சார்பில் மண்டலமாணிக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், இவரது தாயார் ராணியம்மாள் கமுதி அருகே உள்ள மண்டலமாணிக்கம் ஊராட்சித் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தர்மலிங்கத்தின் வீட்டில் வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பணம் மற்றும் வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட எஸ்.பி வருண்குமாருக்கு அலைபேசியில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கமுதி டி.எஸ்.பி., மகேந்திரன், பறக்கும் படை அலுவலர் ஜமால் அகமது, இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் ஆகியோர், தர்மலிங்கத்தின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் சிக்கிய மது பாட்டில்கள்
சோதனையில் சிக்கிய மது பாட்டில்கள்

இந்தச் சோதனையின் போது கணக்கில் வராத ரூ.38,63,300 மற்றும் பக்கத்து வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,192 வெளிமாநில மதுபாட்டில்கள் ஆகியன சிக்கின. இது குறித்து விசாரணை நடத்தியதில் முறையான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து பணம் மற்றும் மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், சோதனையில் சிக்கிய கணக்கில் காட்டப்படாத பணம் குறித்து வருமான வரித்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் மதுபாட்டில்கள் தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்ய வைத்திருந்ததா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.