Published:Updated:

கொரோனா காலத் தேர்தல்... கட்சிகளின் நிலைப்பாடு!

தமிழக அரசியல்வாதிகள்
பிரீமியம் ஸ்டோரி
தமிழக அரசியல்வாதிகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், அரசின் தோல்வி குறித்துச் சிந்திக்கவிடாமல் மக்களை திசைதிருப்பும் முயற்சிதான் தேர்தல் குறித்த அறிவிப்பு.

கொரோனா காலத் தேர்தல்... கட்சிகளின் நிலைப்பாடு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், அரசின் தோல்வி குறித்துச் சிந்திக்கவிடாமல் மக்களை திசைதிருப்பும் முயற்சிதான் தேர்தல் குறித்த அறிவிப்பு.

Published:Updated:
தமிழக அரசியல்வாதிகள்
பிரீமியம் ஸ்டோரி
தமிழக அரசியல்வாதிகள்
‘வாக்காளர்களுக்கு கிளவுஸ், ஆன்லைனில் வேட்பு மனுத் தாக்கல், ஆயிரம் பேருக்கு ஒரு வாக்குச் சாவடி...’ எனப் பெருந்தொற்றுக் காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய பல புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் அ.தி.மு.க-வின் ஆட்சிக் காலம், வரும் மே மாதத்தோடு முடிவடைகிறது. கட்சிகள் இப்போதே தங்கள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. `சமூக இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றை இன்னும் ஒரு வருடத்துக்காவது கடைப்பிடிக்க வேண்டும்’ என்பது மருத்துவர்களின் அறிவுரை. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் குறித்தும், தேர்தல் ஆணையம் தற்போது அறிவித்துள்ள புதிய வழிமுறைகள் குறித்தும் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வைகைச்செல்வன் (செய்தித் தொடர்பாளர்,அ.தி.மு.க)

“தேர்தல் ஆணையம், தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்த முடிவெடுத்தாலும் அ.தி.மு.க அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறது. புதிய வழிமுறைகளின்படிதான் பீகாரில் தேர்தல் நடைபெற விருக்கிறது. அந்தத் தேர்தல் முடிந்த பிறகுதான் இந்த நெறிமுறைகளில் எது தேவை, தேவையில்லை என்பதை முடிவு செய்ய முடியும்.’’

வைகைச்செல்வன், பார்த்தசாரதி, கனகராஜ், கோபண்ணா, லெனின்
வைகைச்செல்வன், பார்த்தசாரதி, கனகராஜ், கோபண்ணா, லெனின்

கனகராஜ் (மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்)

“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், அரசின் தோல்வி குறித்துச் சிந்திக்கவிடாமல் மக்களை திசைதிருப்பும் முயற்சிதான் தேர்தல் குறித்த அறிவிப்பு. பா.ஜ.க-வினர் எப்போதும் அதிகாரம் குறித்துத்தான் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்; அதில்தான் மும்முரமாக இருப்பார்கள். இந்த அறிவிப்பையும் அப்படித்தான் பார்க்கிறோம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லெனின் (மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், சி.பி.ஐ)

“பெருந்தொற்றுக் காலத்திலும் தற்காப்போடு வாழ்வதற்கு மக்கள் பழகிவிட்டார்கள். எனவே, கொரோனாவைக் காரணம் காட்டி, தேர்தலைத் தள்ளிவைக்கக் கூடாது. கவர்னர் ஆட்சி வெகுகாலம் நீடிப்பது மாநில உரிமைகளைப் பறிக்கிற ஒரு விஷயம். அதனால், கண்டிப்பாகத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் வழிமுறைகளில் இன்னும் சில விஷயங்களைச் சேர்க்கலாம். குறிப்பாக, வாக்களிக்க ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட நேரம், 700 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி போன்ற விஷயங்கள். அதேபோல, நேரடியாக மக்களைச் சந்தித்து பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதை மட்டும் தடைசெய்துவிடவே கூடாது.’’

பார்த்தசாரதி (தலைமை நிலையச் செயலாளர், தே.மு.தி.க)

“பீகார் தேர்தல் குறித்து, தேர்தல் ஆணையம் கருத்து கேட்டபோது, நாங்களும் எங்கள் பரிந்துரைகளைக் கொடுத்திருக்கிறோம். பீகார் தேர்தல் அக்டோபரில் வெற்றிகரமாக நடந்துவிட்டால், தமிழகத்திலும் தேர்தலை நடத்தலாம்.’’

கோபண்ணா (ஊடகப்பிரிவுத் தலைவர், காங்கிரஸ்)

“அடுத்த மே மாதத்துக்குள் கொரோனா கட்டுக்குள் வரும் என நம்புவோம். எப்படிப்பட்ட சூழல் நிலவினாலும், தேர்தலை ஒத்திவைப்பதில் உடன்பாடு இல்லை. அதேபோல, இணையவழி பரப்புரையே போதுமானது. மக்கள் பங்கேற்பு அதில் அதிகமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம், தொழில்நுட்ப உதவியுடன் தேர்தலைத் திட்டமிட்டு நடத்த வேண்டும்.”

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (செய்தித் தொடர்பாளர், தி.மு.க)

“அரசியல் சாசன அமைப்பின்படி, ஐந்தாண்டு களில் தேர்தல் நடத்த வேண்டியது ஓர் அரசின், தேர்தல் ஆணையத்தின் அடிப்படைப் பணி. தவிர்க் கவே இயலாத காரணங் களால் மட்டுமே தேர்தல் தள்ளிவைக்கப்பட வேண்டும். கொரோனா அந்த வகையில் வராது. அதனால், தேர்தல் கண்டிப்பாக நடைபெற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளை மக்களும், கட்சிகளும், அரசியல் தலைவர்களும் சரியாகப் பின்பற்ற வேண்டும்.’’

மல்லை சத்யா(துணைப்பொதுச் செயலாளர் ம.தி.மு.க)

“கொரோனாவால் நம்மைவிடக் கடுமை யாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலேயே தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப் பட்டிருக்கிறது. எனவே, தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்; கொரோனாவைவிடக் கொடுமையான இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.’’

கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முரளி அப்பாஸ், சீனிவாசன், மல்லை சத்யா, வன்னி அரசு
கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முரளி அப்பாஸ், சீனிவாசன், மல்லை சத்யா, வன்னி அரசு

முரளி அப்பாஸ் (செய்தித் தொடர்பாளர், ம.நீ.ம)

“ஆன்லைன் வேட்புமனு, கிளவுஸ், சமூக இடைவெளி, மாஸ்க் போன்ற விஷயங் களையெல்லாம் நடைமுறைப் படுத்திவிடலாம். ஆனால், `தேர்தல் பிரசாரத்துக்கு இவ்வளவு பேருக்குத்தான் அனுமதி’ என்பதையெல்லாம் இங்கு ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்த, இருக்கிற கட்சிகள் முறையாகப் பின்பற்றுமா என்பது சந்தேகம்தான். `ஆட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும்’ என்கிற பதற்றத்தில் இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாக மீறுவார்கள். பிரசாரம் பற்றிய முடிவுகளைத் தேர்தல் ஆணையம் மாநில அரசாங்கங்களிடம் கொடுத்திருக்க வேண்டிய தில்லை.”

வன்னி அரசு (துணைப் பொதுச் செயலாளர், வி.சி.க)

“தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். அதேவேளையில், `பிரசாரத்துக்கு ஐந்து பேர் மட்டுமே அனுமதி’ என்பதை ஏற்க முடியாது. அது, ஆளும் கட்சியினருக்குத்தான் சாதகமாக அமையும். இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்ட மத சம்பந்தமான விழாக்களுக்குப் பலர் கூடும்போது, ஒரு ஜனநாயகத் தேவைக்கு ஏன் குறைவான பேருக்கு மட்டுமே அனுமதி? தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கும் வழிமுறைகளில் பல மாற்றங்கள் தேவை!’’

சீனிவாசன் (மாநிலச் செயலாளர், பா.ஜ.க)

“வரும் மே மாதத்தில், இந்தச் சட்டசபையின் ஐந்தாண்டுக் காலம் முடிவடைகிறது. அதற்குப் பிறகு கவர்னர் ஆட்சி வரும். அந்தவேளையில், கொரோனா கட்டுக்குள் வந்து, தேர்தல் நடத்தும் சூழல் அமைந்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த வேண்டும்!’’

`வாக்காளர்களுக்கு கிளவுஸ்; ஆன்லைன் வேட்புமனு!’-தேர்தல் ஆணைய விதிமுறைகள் சொல்வதென்ன?’ இந்தக் கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism