Published:Updated:

` 7.85 சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம்!'- காமராஜர் நகர் நிலவரத்தால் பதறும் புதுச்சேரி காங்கிரஸ்

காமராஜர் நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுவதால் பதற்றத்தில் இருக்கின்றது ஆளும் கட்சி.

காமராஜர் நகர்
காமராஜர் நகர்

புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி-யாகிவிட்டதால் இடைத்தேர்தலைச் சந்தித்தது இந்தத் தொகுதி. காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி சார்பில் நெல்லித்தோப்பு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமாக இருந்த ஜான்குமாரும் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி கூட்டணி சார்பில் ரியல் எஸ்டேட் அதிபர் புவனா (எ) புவனேஸ்வரனும் போட்டியிட்டனர்.

ரங்கசாமி
ரங்கசாமி

காங்கிரஸும், என்.ஆர்.காங்கிரஸும் நேருக்கு நேர் மோதும் இந்தத் தேர்தல், முதல்வர் நாராயணசாமிக்கும் முன்னாள் முதல்வர் ரங்கசாமிக்கும் இடையேயான போட்டியாகவே பார்க்கப்பட்டது.

வழக்கமான தேர்தலைவிட இடைத்தேர்தல்களில் அதிகமான வாக்குகள் பதிவாகும். ஆனால், காமராஜர் நகர் தொகுதியில் கடந்த பொதுத்தேர்தலைவிட இந்தமுறை 7.85% குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பது அரசியல் கட்சிகளைப் பதற வைத்திருக்கிறது. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி தோற்றால், அரசின் மீதான மக்களின் அதிருப்தி என்றும் வெற்றிபெற்றால் ஆட்சி மீது எந்தக் குறையும் இல்லை என்ற கருத்து பேசப்படுவது வழக்கம்.

இந்தத் தேர்தலை தன்மான பிரச்னையாக எடுத்துக்கொண்ட முதல்வர் நாராயணசாமி தொகுதிக்குள் கூடாரம் அமைத்து வேலை செய்தார். அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வீதிவீதியாக, வீடு வீடாகச் சென்று ஆளும் கட்சிக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்தது.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி

அதனால், இந்தமுறை வாக்குப்பதிவின் விகிதம் அதிகரிக்கும் என்று நினைத்திருந்த நிலையில் கடந்த தேர்தலைவிட 7.85 சதவிகிதம் குறைந்திருப்பது அரசியல் கட்சிகளைக் குழப்பமடைய வைத்திருக்கிறது. `ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொள்வதில்தான் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தியதே தவிர மக்களைக் கவரும்படியான வாக்குறுதிகளையோ, அவர்களின் பிரச்னை குறித்தோ பேசாதுதான் வாக்குப்பதிவு குறைவுக்குக் காரணம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அதேபோல, விளிம்புநிலை மக்கள் அதிகமாக வசிக்கும் சாமிப்பிள்ளைத் தோட்டம் பகுதியில் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியிருக்கிறது. நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், இது யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற பதற்றத்தில் இருக்கின்றது புதுவை ஆளும் கட்சி.