Published:Updated:

`ஊராட்சியே மாறியிருக்கு; தேர்தல் ஆணைய இணையதளத்தில் குளறுபடி!' - புதுக்கோட்டை ஆட்சியரிடம் புகார்

எனது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கோடு தான் குளந்திரான்பட்டு ஊராட்சிக்கு பதிலாக, தீத்தான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவருக்கு விண்ணப்பத்திதாக இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

ஆட்சியரிடம் புகார் கொடுத்த எழுத்தாளர்
ஆட்சியரிடம் புகார் கொடுத்த எழுத்தாளர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளார் துரைகுணா என்கிற குணசேகரன். இவர் `ஊரார் வரைந்த ஓவியம்' உள்ளிட்ட சில புத்தகங்களை எழுதி உள்ளார். இவர், சமீபத்தில் குளந்திரான்பட்டு குளத்தைக் காணவில்லை என்றும் அதை மீட்க அரசு அதிகாரிகள் வேலைக்குத் தேவை என்று நோட்டீஸ் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து, சில தினங்களிலேயே அந்த குளத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்தநிலையில்தான், எழுத்தாளர் துரைகுணா, குளந்திரான்பட்டு ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு தனது மனைவி கோகிலா முன்மொழிய வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் ஆணைய இணையதளத்தில் குளறுபடி எனும் எழுத்தாளர்
தேர்தல் ஆணைய இணையதளத்தில் குளறுபடி எனும் எழுத்தாளர்

இதற்கிடையே, தனது வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா, என்று சந்தேகத்தின் பேரில், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. குளந்திரான்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு செய்த துரைகுணாவின் வேட்புமனு மாயமாகி இருந்தது. அதற்குப் பதிலாக, தீத்தான்விடுதி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்ததாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இவரது வேட்புமனு நிராகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த துரை குணா வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்தார். இதுபற்றி கலெக்டரிடம் புகார் கொடுத்திருப்பதாக அவர் கூறுகிறார்.

இதுபற்றி துரைகுணா கூறும்போது, ``நான் முறைப்படி குளந்திரான்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு செய்திருந்தேன். எனது வேட்புமனுவைப் பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி, அதற்கான ரசீதையும் என்னிடம் வழங்கினார். நான் குளந்திரான்பட்டு ஊராட்சிக்குத் தான் வேட்புமனு செய்தேன். ஆனால், தீத்தான்விடுதி ஊராட்சிக்கு வேட்புமனு செய்ததாக இணையதளத்தில் பதிவாகி இருக்கிறது. ஒரு பொது தொகுதியில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் போட்டியிடுகிறேன் என்ற ஒரே காரணத்திற்காக சாதிய வன்மத்தோடு,

தேர்தல் ஆணைய இணையதளத்தில் குளறுபடி எனும் எழுத்தாளர்
தேர்தல் ஆணைய இணையதளத்தில் குளறுபடி எனும் எழுத்தாளர்

வேண்டுமென்றே எனது சுயமரியாதைக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்றும், என்னுடைய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கோடும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரி செயல்பட்டிருக்கிறார். இந்த விஷயத்தில், ஆதிக்கசாதியினரோடு கைகோர்த்து அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் செயல்பட்டு உள்ளார். தேர்தல் அதிகாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளேன்" என்றார்.

இதுகுறித்து சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, ``இணையதளத்தில் வேட்புமனு செய்த மனுவை சரிபார்க்கும் வகையில் வெப்சைட் ஒன்றை தற்போது புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளனர். இது இறுதி கிடையாது. சர்வர் பிரச்னை இருக்கிறது. பஞ்சாயத்து தேர்தல் என்பதால், அதிகளவிலான வேட்புமனுக்கள் வருகிறது.

தேர்தல் ஆணைய இணையதளத்தில் குளறுபடி எனும் எழுத்தாளர்
தேர்தல் ஆணைய இணையதளத்தில் குளறுபடி எனும் எழுத்தாளர்

இணையதளத்தில் பதிவு செய்யும் போது சிறிய தவறு ஏற்பட்டுவிட்டது. துரைகுணா என்பவர் வேட்புமனு செய்த பஞ்சாயத்து மாறிவிட்டது என்று தெரிந்தவுடனே உடனே மாற்றி விட்டோம். தீத்தான்விடுதியில் பதிவாகி உள்ள அவரது பெயரை நீக்கப் பரிந்துரை செய்துள்ளோம். இதில், எந்த தனிப்பட்ட விரோதமும் கிடையாது" என்றார்.