Published:Updated:

பஞ்சாப் கருத்துக்கணிப்புகளில் முந்தும் ஆம் ஆத்மி: அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியை வளர்த்தது எப்படி?

பஞ்சாப் ஆம் ஆத்மி

அரவிந்த் கெஜ்ரிவாலின் அடிப்படை மாற்றத்துக்கான இந்த அணுகுமுறையே, மற்ற கட்சிகளைக் காட்டிலும் ஆம் ஆத்மி கட்சியை பஞ்சாப் மாநிலத்திலும் வளர்த்தெடுத்து ஆட்சிமாற்றத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது.

பஞ்சாப் கருத்துக்கணிப்புகளில் முந்தும் ஆம் ஆத்மி: அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியை வளர்த்தது எப்படி?

அரவிந்த் கெஜ்ரிவாலின் அடிப்படை மாற்றத்துக்கான இந்த அணுகுமுறையே, மற்ற கட்சிகளைக் காட்டிலும் ஆம் ஆத்மி கட்சியை பஞ்சாப் மாநிலத்திலும் வளர்த்தெடுத்து ஆட்சிமாற்றத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது.

Published:Updated:
பஞ்சாப் ஆம் ஆத்மி

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதையொட்டி பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கடும் போட்டி அளித்தாலும், ஆம் ஆத்மி கட்சியே சற்று முன்னிலையில் இருப்பதாக முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. இதனால் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ், ஆட்சிக்கு ஏங்கும் பாஜக மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றன. ஆம் ஆத்மி கட்சியினரோ கடும் உற்சாகத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி

டெல்லி தாண்டி பல மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிளைகள் இருந்தாலும், எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு முன்னேறி தற்போது ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அக்கட்சி வளர்ந்திருக்கும் மற்றொரு மாநிலம் பஞ்சாப்தான்! அதாவது டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் முன்னரே பஞ்சாப்பில் தனது முதல் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது ஆம் ஆத்மி கட்சி. 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக நாடு முழுவதும் 434 இடங்களில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. தனது கோட்டையான டெல்லியிலேயே ஓர் இடத்தைக்கூடக் கைப்பற்ற முடியாத நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமே அந்த நான்கு இடங்களிலும் வெற்றிவாகை சூடியது. அதைத் தொடர்ந்துதான் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று முதன்முறையாக அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்னர், டெல்லிக்கு அடுத்தபடியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனம் முழுக்க பஞ்சாப் மாநில அரசியலை நோக்கி நகர்ந்தது. தொடர்ச்சியாகக் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளைச் செய்துவந்தார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாரம்பர்யமாக அகாலிதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பலமாக இருக்கும்போதே, 2017-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரைக்கூட அறிவிக்காமல் துணிச்சலாகப் போட்டியிட்டது ஆம் ஆத்மி கட்சி. `டெல்லி மாடலை' முன்வைத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார் அரவிந்த் கெஜ்ரிவால். தேர்தல் முடிவில், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 20 தொகுதிகளைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது ஆம் ஆத்மி. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க, அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அகாலி தளம் 15 இடங்களிலும், பாஜக மூன்று இடங்களிலும் மட்டுமே வென்றன. தொடர்ச்சியாக, பஞ்சாப்பில் ஏறுமுகமாக சென்றுகொண்டிருந்தாலும் எம்.எல்.ஏ-க்கள் கட்சித்தாவலில் ஈடுபடுவது, இடைநீக்கம் செய்யப்படுவது என ஆம் ஆத்மி கட்சிக்குள் குழப்பங்களும் நீடித்தன. கட்சி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

இதனால் அதிருப்தியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால், நீண்ட களையெடுப்புக்குப் பின்னர் உட்கட்சிக் கட்டமைப்பில் மிகத்தீவிரமாகச் செயல்பட்டார். 2022 தேர்தலை முன்வைத்து இரண்டாண்டுகளுக்கு முன்பே கட்சிப் பணிகளைத் தொடங்கினார். 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிபெறவும், பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி நிர்வாகிகள் புது உத்வேகம் பெற்றனர். அடுத்து பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சிதான் என தீர்க்கமாக முடிவெடுத்து செயல்படத் தொடங்கினர்.

 ஆம் ஆத்மி - கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி - கெஜ்ரிவால்

இதற்கு ஏற்றபடி மறுதிசையில், பஞ்சாப் காங்கிரஸில் உட்கட்சிப் பூசல்கள் ஏற்பட்டு, கட்சியில் நிலைத்தன்மையே கேள்விக்குறியானது. கட்சியையே காப்பாற்ற முடியாத காங்கிரஸால் எப்படி பஞ்சாப் மக்களைக் காப்பாற்ற முடியும் என எகிறி அடித்தது ஆம் ஆத்மி. அதேபோல, பாஜக-வும் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட விவசாயிகளின் வெறுப்பைச் சம்பாதித்தது. பின்னர், உட்கட்சிப்பூசல்களால் காங்கிரஸிலிருந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங், தனிக்கட்சி ஆரம்பித்து பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்தார். அதேசமயம், வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்காலமாகத் தொடர்ந்த விவசாயிகளின் போராட்டம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல்கள் போன்றவற்றை கருத்தில்கொண்டு, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டது. இருப்பினும், போராட்ட காலத்தில் மத்திய பாஜக அரசு விவசாயிகளிடம் நடந்துகொண்டவிதம், பஞ்சாப் விவசாயிகள் மற்றும் மக்களிடத்தில் ஆராத வடுக்களாக நின்றுவிட்டன. இப்படியாக இந்த இரண்டு கட்சிகளின் மீதும், பஞ்சாப் மக்களுக்கு ஏற்பட்டிருந்த அதிருப்தி இயல்பாகவே ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவான மனநிலையை ஏற்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கு பதிலாக, குடிநீர், மின்சாரம், மருத்துவம் என மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தி பிரசாரத்தை மேற்கொண்டது ஆம் ஆத்மி. குறிப்பாக, டெல்லி மாடலை அப்படியே கையிலெடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றால், குடும்பப் பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மாநிலம் முழுக்க 16,000 மருத்துவ கிளினிக்குகள் அமைக்கப்படும், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தி இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித்தரப்படும் என அதிரடியான திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்து, பஞ்சாப் மக்களைக் கவர்ந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி
அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி

இதன் முன்னோட்டமாக, கடந்த டிசம்பர் மாதம் பஞ்சாப் மாநிலத் தலைநகர் சண்டிகர் மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 35 இடங்களில் 14 இடங்களைத் தனித்து நின்று கைப்பற்றி முதலிடத்தில் நின்றது. இந்த வெற்றி குறித்துப் பேசிய ஆம் ஆத்மி மூத்த தலைவர் ராகவ் சதா, `சண்டிகர் வெறும் டிரெய்லர்தான். உண்மையான படம் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்தான்’ என அதிரடியாக தெரிவித்தார். அதற்கேற்றாற்போலவே தற்போது வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகளும் அப்படியே பொருந்தியிருக்கின்றன.

ஆம் ஆத்மி தொண்டர்கள்
ஆம் ஆத்மி தொண்டர்கள்

பஞ்சாப்பில் மொத்தம் 117 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. குறைந்தது 59 தொகுதிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே பெரும்பான்மையைத் தக்கவைக்க முடியும். இந்த நிலையில், ஏபிபி, ரிபப்ளிக், நியூஸ் எக்ஸ், டைம்ஸ் நவ், ஜி, இந்தியா அஹெட், இந்தியா நியூஸ் போன்ற ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சியே பஞ்சாப்பில் அதிக இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, டைம்ஸ் நவ், இந்தியா நியூஸ், இந்தியா அஹெட் போன்ற ஊடகங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் எனத் தெரிவித்திருக்கின்றன.

இந்த முடிவுகள் மற்ற கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியையும், ஆம் ஆத்மிக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. அதேபோல, கடந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் போட்டியிட்டது ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மற்ற கட்சிகள் மௌனத்தில் இருக்க, முதல் ஆளாக முந்திக்கொண்டு தனது முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறது.

ஏற்கெனவே, 2022 பஞ்சாப் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஒரு சீக்கியர்தான் இருப்பார் என அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியாகக் கூறியிருந்த நிலையில், தற்போது கட்சியின் சார்பில் இரண்டுமுறை எம்.பி-யாகவும், பஞ்சாப் ஆம் ஆத்மி மாநிலத் தலைவராகவும் இருக்கக்கூடிய பக்வந்த் மான் (Bhagwant Mann) முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றிபெற்ற நான்கு பேர்களில் பக்வந்த் மானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பக்வந்த் மான்
அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பக்வந்த் மான்

மேலும், இந்த முடிவு அறிவிப்பை அரவிந்த் கெஜ்ரிவால் தன்னிச்சையாக எடுக்காமல், ஒரு செல்போன் நம்பரை அறிமுகப்படுத்தி, அதில் யார் முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் எனக் குறுஞ்செய்தி அனுப்புங்கள் எனப் பொதுமக்களிடம் கருத்து கேட்டார். சுமார் 21 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பக்வந்த் மான் முதல்வர் வேட்பாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்த காரணத்தால், பக்வந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

பொதுமக்களுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்குமான தொடர்பை மேம்படுத்துதல், டெல்லியில் சக்சஸ் ஆன திட்டங்களின் ஃபார்முலாக்களை, டெல்லி மாடலாகக் குறிப்பிட்டு தேர்தல் பிரசாரம் செய்வது, கவர்ச்சிகர திட்டங்களுக்கு மாற்றாக மக்களின் அடிப்படைத் தேவைகளை அடியொற்றி வாக்குறுதிகள் அளிப்பது, பொதுப்படையாகப் பேசாமல் தொகுதிவாரியான பிரச்னைகளைக் கையிலெடுத்து அதற்கு தீர்வு வழங்குது பற்றி விவாதிப்பது என பஞ்சாப் மக்களுக்குப் புதுமையான, அதேசமயம் ஏற்கெனவே டெல்லி மக்களுக்குப் பழகிய அரசியலை ஆம் ஆத்மி கட்சி அங்கு விஸ்தரித்திருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் அடிப்படை மாற்றத்துக்கான இந்த அணுகுமுறையே, மற்ற கட்சிகளைக் காட்டிலும் ஆம் ஆத்மி கட்சியை பஞ்சாப் மாநிலத்திலும் வளர்த்தெடுத்து ஆட்சிமாற்றத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism