Published:Updated:

`நாடாளுமன்றத்துக்கு இணையானது கிராம சபை!' -உள்ளாட்சிக்கு வழிகாட்டும் ராசிபுரம் வழக்கறிஞர்

 மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

தேர்தலில் போட்டியிட என்னென்ன ஆவணங்கள் வேண்டும். தேர்தல் பிரமாண பத்திரத்தில் பல ஆவணங்கள் கேட்டிருக்கிறார்களே என்று பலரும் குழம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

``உள்ளாட்சித் தேர்தலில் 21 வயது பூர்த்தியடைந்த, வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் உடைய அனைவரும் இடஒதுக்கீடு விதிமுறைக்கு உட்பட்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம். இதற்கு கல்வித் தகுதியோ, பொருளாதாரத் தகுதியோ கிடையாது. சாதி பாகுபாடு, கட்சி வேறுபாடு இல்லாத சமூக அக்கறையுடைய இளைஞர்கள் பலரும் போட்டியிட்டால் மட்டுமே கிராமங்கள் வளர்ச்சி அடையும்'' என்கிறார் ராசிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் மக்களுக்கான சட்ட ஆலோசகருமான நல்வினை விஸ்வராஜூ.

விஸ்வராஜூ
விஸ்வராஜூ

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தமிழகம் தயாராகி வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவால் டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. புதிய அறிவிப்பாணையை மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று மாலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் ஊராட்சித் தேர்தல் குறித்து நம்மிடம் பேசிய நல்வினை விஸ்வராஜூ,``உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அடிப்படைத் தகுதி 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்த ஆண், பெண் அனைவரும் போட்டியிடலாம். ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்குப் போட்டியிடலாம்.

`21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்பது ஜனவரி 1ம் தேதியா, வேட்புமனு தாக்கல் செய்யக் கூடிய நாளா, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளா, வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளா, வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாளா என்பது ஒரு பிரச்னைக்குரிய கேள்வி.

பொதுவாக வாக்காளர் பட்டியலில் 22 வயது என இருந்திருந்தால் எந்தக் கேள்வியும் இல்லை. வாக்காளர் பட்டியலில் 22 வயதுக்குக் குறைவாக இருந்தால், பிறப்புச் சான்றிதழை அவசியம் வேட்புமனுவோடு இணைத்துத் தாக்கல் செய்ய வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லாதபோது 21 வயது பூர்த்தி அடைந்ததற்கான பள்ளி மாற்றுச் சான்றிதழ் அல்லது பிறந்த தேதி இருக்கக் கூடிய ஏதாவது ஓர் ஆவணத்தை இணைப்பது பாதுகாப்பானது.

மாநிலத் தேர்தல் ஆணையம்
மாநிலத் தேர்தல் ஆணையம்

பொதுவாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் போது ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான தகுதி பெற்றவர்கள். ஆனால், தேர்தலில் போட்டியிட 21வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அந்த 21 வயது பூர்த்தி அடைந்த நாளாக வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாள், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள், வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் நாள் என மும்பை, அலகாபாத், பஞ்சாப் ஹரியான நீதிமன்றங்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றன. உறுதியான நாள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தேர்தலில் போட்டியிட என்னென்ன ஆவணங்கள் வேண்டும். தேர்தல் பிரமாண பத்திரத்தில் பல ஆவணங்கள் கேட்டிருக்கிறார்களே என்று பலரும் குழம்பிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். 21 வயது பூர்த்தி அடைந்திருக்கிறது, வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது என்றால் நீங்கள் தாராளமாகப் போட்டியிடலாம். நீங்கள் வசிக்கும் ஊராட்சியில், `உங்கள் மேல் சொத்து வரி, குடிநீர் வரி எனப் பாக்கி தொகை எதுவும் நிலுவையில் இல்லை' என்பதற்காக ஊராட்சி செயலாளரிடம் சான்றிதழ் வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த மூன்று ஆவணங்கள் இருந்தால்போதும் நிச்சயம் போட்டியிடலாம்.

உள்ளாட்சி அரசாங்கத்தை ஏன் நாம் புறக்கணிக்கிறோம்?

இளைஞர்கள் பலரும் போட்டியிட்டால்தான் கிராமங்களை மாற்ற முடியும். கிராம சபைக்கு மிகப் பெரிய அதிகாரம் இருக்கிறது. கிராம சபை என்பது நாடாளுமன்றத்திற்கு நிகரானது. கிராம சபைக்கு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. அதில் இளைஞர்கள் பலரும் பங்கு பெற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு