சினிமா
Published:Updated:

வாசகர் மெகா தேர்தல் போட்டி!

வாசகர் மெகா தேர்தல் போட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
வாசகர் மெகா தேர்தல் போட்டி!

2021 மொத்தப் பரிசு ரூ.3,00,000; முதல் பரிசு ரூ.1,50,000; இரண்டாம் பரிசு ரூ.1,00,000; மூன்றாம் பரிசு ரூ.50,000

'முதல்முறையாக ஸ்டாலின் முதல்வர் ஆவாரா, அல்லது, மூன்றாவது முறையாகவும் அ.தி.மு.க ஜெயிக்குமா?’ என்ற கேள்வியுடன் 2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார்கள் தமிழக மக்கள். அ.தி.மு.க ஒருபக்கம் வலுவான கூட்டணி அமைத்திருக்க, அதேபோல ஒரு கூட்டணியை உருவாக்கியிருந்தது தி.மு.க. கடைசி நேரத்தில் அ.ம.மு.க-வுடன் கைகோத்தது தே.மு.தி.க. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு கூட்டணியை உருவாக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

களம் இப்படி இருந்தாலும், மிகச் சரியாகத் தேர்தல் முடிவுகளைக் கணித்திருந்தனர் விகடனின் கணிப்புக் கில்லாடி வாசகர்கள். மூன்று லட்ச ரூபாய்க்கான தேர்தல் பரிசுப் போட்டியை இம்முறை அறிவித்திருந்தோம். 21,463 வாசகர்கள் போட்டியில் பங்கேற்று எங்களைத் திணற வைத்துவிட்டார்கள்.

‘தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார்’ என்ற கேள்விக்குப் பெரும்பாலான வாசகர்கள் ஸ்டாலின் பெயரை டிக் அடித்திருந்தார்கள். அ.தி.மு.க கூட்டணிக்கு 75 இடங்களும், தி.மு.க கூட்டணிக்கு 159 இடங்களும் கிடைக்கும் என்று துல்லியமாக நிறைய வாசகர்கள் கணித்திருந்தனர். எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் உட்பட 15 பிரபலங்களின் வெற்றி, தோல்விகளைச் சரியாகக் கணித்திருந்த நிறைய பேர், வெற்றி வித்தியாசத்தில் கோட்டை விட்டிருந்தனர். புதுவையில் சுயேச்சைகளின் வெற்றியையும் பலரால் சரியாகக் கணிக்க முடியவில்லை.

வாசகர் மெகா தேர்தல் போட்டி!

இத்தனை சவால்களையும் மீறிக் கணித்த வாசகர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 13 பேர். இவர்களில் முதல் பரிசான 1,50,000 ரூபாயை இரண்டு பேரும், இரண்டாம் பரிசான 1,00,000 ரூபாயை ஐந்து பேரும், மூன்றாம் பரிசான 50,000 ரூபாயை ஆறு பேரும் பகிர்ந்துகொள்கிறார்கள். தேர்தல் முடிவுகளைக் கிட்டத்தட்ட சரியாகக் கணித்த வாசகர்களுக்கு விகடனின் வாழ்த்துகள்!

முதல்பரிசான 1,50,000 ரூபாயைக் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை கல்லுக்கட்டியைச் சேர்ந்த எம்.கே.பாலசங்கரும்; சேலம் மாவட்டம், ஆத்தூர், ஆயர்பாடியைச் சேர்ந்த தேவரிந்திகாவும் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

வெற்றிச் செய்தியைக் கேட்டதும் உற்சாகமான பாலசங்கர், “1972-ல இருந்தே நான் ஆனந்த விகடன் வாசகர். ஒரு இதழைக்கூட மிஸ் பண்ணினது கிடையாது. 1991-ல் இருந்து விகடன் தேர்தல் போட்டிகள்ல கலந்துகிட்டிருக்கேன். இது எனக்கு எட்டாவது பரிசு. இந்தப் போட்டியிலயும் முதல் பரிசு வாங்குறது பெருமையான விஷயம்’’ என்கிறார்.

வாசகர் மெகா தேர்தல் போட்டி!

பாலசங்கர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். ‘`பத்திரிகைகளில வரக்கூடிய தொகுதி நிலவரக் கட்டுரைகளைப் படிச்சு, கருத்துக்கணிப்பு, சர்வே இதெல்லாம் வாசிச்சு, ரொம்ப ஆழமா அலசி ஆராய்ந்து கடைசியில ஒரு யூகத்தின் அடிப்படையில போடும்போது, சரியா வருது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு மீடியாவும் ஒவ்வொரு நிலவரத்தைச் சொன்னதால குழப்பமாப்போச்சு. அதனால, இழுபறி தொகுதிகளைக் கணக்கிடுவது ரொம்ப சவாலா இருந்தது. குறிப்பா, கமல் மற்றும் தினகரன் தொகுதிகள்தான் ரொம்பவே குழப்பமா இருந்துச்சு. அதுக்காக நிறைய ஸ்டடி பண்ணினேன். அந்தக் கணிப்பு சரியா வந்ததுல சந்தோஷம்’’ என்கிறார்.

முதல் பரிசைப் பகிர்ந்துகொண்டுள்ள தேவரிந்திகா, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி இரண்டாம் ஆண்டு படிக்கிறார். ‘`எங்க அப்பா மோகன் எம்.எஸ்ஸி படிச்சவர். முழுநேர விவசாயி. முப்பது வருஷமா விகடனின் தீவிரமான வாசகர். அவர் மூலமாதான் எனக்கும் அரசியல் ஆர்வம் வந்துச்சு. ஆனந்த விகடன் தேர்தல் போட்டிகளில் அப்பா ரெண்டு முறை பரிசு வாங்கியிருக்கார். ‘இந்தமுறை போட்டியில நானும் பங்கேற்கிறேன்’னு அப்பாகிட்ட சொன்னேன். தொடர்ச்சியா பத்திரிகைகள் வாசிச்சதாலும், சமூக வலைதளங்கள்ல அரசியலை உன்னிப்பாக் கவனிச்சதாலும் இந்தத் தேர்தல் கணிப்பை சரியா செய்ய முடியும்னு நினைச்சேன். அப்பாவும் நிறைய உதவி செஞ்சார். தி.மு.க கண்டிப்பா ஜெயிக்கும்னு குறிப்பிட்டிருந்ததோட, முக்கியத் தலைவர்கள் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பாங்கன்னும் சரியா குறிப்பிட்டிருந்தேன். கமல் தோல்வி, ஓ.பி.எஸ் வெற்றியைக் கணிக்க கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. முதல் தடவையே முதல் பரிசை வாங்குனது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப நாளா, ஒரு லேப்டாப் வாங்கணும்னு அப்பாகிட்ட கேட்டுக்கிட்டே இருந்தேன். இப்ப என் பணத்துலயே வாங்கிடுவேன்’’ என்று மகிழ்ச்சி ததும்பச் சொல்கிறார் தேவரிந்திகா.

இரண்டாம் பரிசான 1,00,000 ரூபாயை ஐந்து வாசகர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களிடம் பேசினோம்.

பாலசுப்ரமணியன் (சூரியம்பாளையம், திருச்செங்கோடு)

நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றேன். சின்ன வயசுல இருந்தே அரசியல்ல ஆர்வமுண்டு. எல்லா தினசரிகளையும் படிப்பேன். ஆனந்த விகடன் வாசகர் தேர்தல் போட்டியில கலந்துகிட்டு ஏற்கெனவே முதல் பரிசும், இரண்டு, மூன்றாவது பரிசுகளும் வாங்கியிருக்கிறேன். இந்த முறை தினசரிகள், டி.வி சேனல்கள், ஜூனியர் விகடன் மாதிரியான புலனாய்வுப் பத்திரிகைகள்னு எல்லாத்திலயும் தேர்தல் தொடர்பான செய்திகளைக் கூர்ந்து கவனிச்சேன். கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் சம்பந்தப்பட்ட செய்திகளையும், அதில் கலந்துக்கிற மக்களோட முகங்களையும் நுணுக்கமா கவனிக்க ஆரம்பித்தேன். எல்லாத்தையும் வெச்சுதான் முடிவுகளைக் கணிச்சேன். பரிசு கிடைச்சிருக்குங்கிற செய்தியைக் கேட்க பெருமையா இருக்கு.

சுகுமார் (சிவகாசி)

நான் ஊரக வளர்ச்சித்துறையில உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவன். விகடன்ல தேர்தல் பரிசுப் போட்டி தொடங்கிய காலத்துல இருந்து இப்போ வரைக்கும் தவறாம கலந்துக்குவேன். இதுவரைக்கும் பரிசு வாங்கியதேயில்லை. முதன்முறையா ரெண்டாவது பரிசு வாங்குறது உண்மையிலேயே மகிழ்ச்சியா இருக்கு. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க அரசு மேல கடும் அதிருப்தி தெரிஞ்சது. அதே அதிருப்தி இந்தச் சட்டமன்றத் தேர்தல்லயும் எதிரொலிக்கும்னு எனக்குத் தோணுச்சு. விகடன் போட்டிப் படிவத்தை வெச்சு நிறைய பேரைச் சந்திச்சுக் கேள்விகள் கேட்டு பதில் வாங்கினேன். மீடியாக்கள்ல வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்து இறுதியா முடிவுக்கு வந்தேன். போட்டி அறிவிச்ச நாள்ல இருந்து அனுப்புற நாள் வரைக்கும் ராத்திரி தூங்கப் போக 12 மணி வரை ஆச்சு. என் மனைவி சிவகாமியும் எனக்கு உறுதுணையா இருந்தாங்க.

கணேசன் (தூத்துக்குடி)

18 வயசுல மும்பைல ஒரு மளிகைக் கடையில வேலைக்குச் சேர்ந்தேன். அந்தக் கடையில தமிழ் பேப்பர்களும், வார இதழ்களும் வரும். அங்கதான் எனக்கு ஆனந்த விகடன், ஜூனியர் விகடனெல்லாம் அறிமுகமாச்சு. 18 வரு‌ஷம் அங்க வேலை பார்த்தேன். அதுக்குப்பிறகு ஊருக்கு வந்து நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளைக் கடைகளுக்கு விற்பனை செய்றேன். வயசு 62 ஆகுது. இப்போ வரைக்கும் விகடன்தான் துணை. ஜூ.வியில என் பல கேள்விகளுக்கு `கழுகார்’ பதில் சொல்லியிருக்கார். ஜூ.வியில் வந்த முக்கியக் கட்டுரைகளையெல்லாம் எடுத்துத் தொகுத்து வெச்சிருக்கேன். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போதே அ.தி.மு.க அரசு மேல மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுச்சு. அதுமட்டுமல்லாம, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச்சாலைன்னு மக்கள் வெறுத்துட்டாங்க. எல்லாத்தையும் வெச்சுதான் முடிவுகளைக் கணிச்சேன்.

அஜித் (மாடம்பாக்கம், சென்னை)

நான் ஃப்ரீலான்ஸ் ரைட்டரா இருக்கேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆனந்த விகடன் தேர்தல் போட்டியில் எட்டுப் பேரில் ஒருவனாக மூன்றாம் பரிசு வாங்கினேன். இப்போது மீண்டும் பரிசு பெற்றதில் மகிழ்ச்சி. இந்தத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்பது எல்லோரும் கணித்ததுதான். தொகுதிகளின் எண்ணிக்கைதான் குழப்பமாக இருந்தது. அ.தி.மு.க-வின் பலத்தைக் கணிப்பது சிரமமாக இருந்தது. நல்லவர், கெட்டவர் என்ற இமேஜைவிட, பலமான நபர் என்ற காரணிதான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று நினைத்தேன். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் பலத்தைத் தனித்தனியாகக் கணித்தேன். மிகவும் சவாலான வேலையாக இருந்தது அது. தினகரன், சீமான் போன்றோரின் பங்களிப்பு இந்தத் தேர்தலில் என்னவாக இருக்கும் என்பதும் கேள்வியாக இருந்தது. எல்லாக் கணக்கீடுகளையும் செய்தே கணிப்பை இறுதிசெய்து அனுப்பினேன்.

வாசகர் மெகா தேர்தல் போட்டி!

பாலமுருகன் (பெருநாழி, ராமநாதபுரம்)

கடலாடி அரசுப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றுகிறேன். அனைத்து நாளிதழ், வார இதழ்களை வாசிப்பேன். அரசியல் நிலவரங்களை நண்பர்களுடன் விவாதிப்பது உண்டு. அதனால்தான் ஓரளவு சரியாகக் கணிக்க முடிந்தது. குடும்பத்தினர், நண்பர்கள் ராமச்சந்திரன், மைத்துனர் முருகன் ஆகியோரிடம் தேர்தல் நிலவரம் பற்றி விவாதித்தேன். இந்த வெற்றியில் அவர்களுக்கும் பங்குண்டு. என் கணிப்பு பரிசுபெறும் அளவுக்கு சரியாக வந்ததில் மகிழ்ச்சி. கடந்த 2004 தேர்தலின்போதும் விகடன் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றேன்.

மூன்றாம் பரிசு 50,000 ரூபாயை ஆறு பேர் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இளவரசன் (உட்கோட்டை, அரியலூர்)

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறேன். தமிழக அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனிப்பதுண்டு. இதற்கு முன்பும் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். கடந்த ஆட்சியின் மீது மக்கள் கொண்ட வெறுப்பு, கூட்டணிக் கட்சிகளின் பலம் ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டேன். டெல்டா, சென்னை மண்டலங்களில் தி.மு.க வலுவாக இருப்பது தெரியவந்தது. பாரதிய ஜனதா கட்சி மேல் இருந்த அதிருப்தி அ.தி.மு.க-வுக்கு எதிராக அமையும் என்று நினைத்தேன். தேர்தல் ஆணைய இணையதளத்தில் முந்தைய வெற்றி, தோல்விகள் குறித்துக் குறிப்பெடுத்தேன். எல்லாவற்றையும் வைத்தே முடிவுகளைக் கணித்தேன்.

சஞ்சய்காந்தி (சக்கம்பட்டி, தேனி)

நான் நெசவுத் தொழிலாளி. ஊர்ல எங்கே அரசியல் பேசினாலும் அங்கே நானும் இருப்பேன். எல்லாரோட பார்வையையும் கூர்ந்து கவனிப்பேன். ஆனந்த விகடன் போட்டி பற்றிக் கேள்விப்பட்டதும், நாமளும் கணிச்சுப் பார்ப்போமேன்னு தோணுச்சு. சில தொகுதிகளோட வெற்றி நிலவரத்தைக் கணிக்க முடியலே. குடும்பத்தினர், நண்பர்கள்கிட்ட விவாதிச்சேன். பல நாள் திட்டமிட்டு கணிச்சது பரிசு வரைக்கும் கொண்டு போயிருக்கு.

ரவிக்குமார் (நாகர்கோவில், கன்னியாகுமரி)

2019 நாடாளுமன்றத் தேர்தல், 18 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் போட்டியில கலந்துகிட்டு மூன்றாவது பரிசு வாங்கினேன். இந்த முறை தேர்தல் அறிவிச்ச உடனேயே கணிப்பை ஆரம்பிச்சுட்டேன். ஐந்து முனைப் போட்டிங்கிறதால கணிக்க சிரமமாத்தான் இருந்துச்சு. தொகுதிக் கள நிலவரம், வேட்பாளரின் தனிச் செல்வாக்கு, கருத்துக்கணிப்புகள்னு நிறைய விஷயங்களை எடுத்துக்கிட்டேன். கமல்ஹாசன் கண்டிப்பா ஜெயிப்பார்னு நினைச்சேன். அந்தக் கணிப்பு தப்பாயிடுச்சு. ஆனாலும் மூணாவது பரிசு வரைக்கும் வந்தது மகிழ்ச்சி.

பேச்சியம்மாள் (ராஜகீழ்ப்பாக்கம், சென்னை)

வீட்டுல எல்லாப் பத்திரிகைகளும் வாங்குறோம். எல்லாப் போட்டிகள்லயும் கலந்துக்குவோம். அவள் விகடன்லகூட பரிசு வாங்கியிருக்கோம். போன முறையும் ஆனந்த விகடன் நடத்தின தேர்தல் போட்டியில கலந்துகிட்டோம். ஆனா பரிசு கிடைக்கலே. இந்த முறை தொடக்கத்துல இருந்தே அரசியலைக் கூர்ந்து கவனிச்சேன். தினமும் பத்திரிகைகள் வாசிப்பேன். டிவி செய்திகளும் பார்ப்பேன். என் கணவரும் உதவி செய்தார். ஏகப்பட்ட கூப்பன்களை எழுதி எழுதி கிழிச்சுப்போட்டோம். ரொம்பவே யோசிச்சு இந்தக் கூப்பனை இறுதிசெஞ்சோம். ‘இந்தமுறை பரிசு உனக்குத்தான்’னு அப்பவே என் வீட்டுக்காரர் சொன்னார். ஓரளவுக்கு அரசியலைக் கணிக்கமுடியுதுன்னு சந்தோஷமா இருக்கு.

வாசகர் மெகா தேர்தல் போட்டி!

ரவீந்திரன் (சாஸ்திரி நகர், ஈரோடு)

நான் மின்வாரியத்தில் முதன்மைத் தலைமை வரைவாளராக இருந்து ஓய்வுபெற்றவன். விகடன் தேர்தல் பரிசுப் போட்டிகளில் ஒன்றைக்கூட மிஸ் பண்ணுனது இல்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தல் போட்டியில் 2-வது பரிசு கிடைத்தது. இந்த முறை 3-வது பரிசு. துரைமுருகன், ஓ.பி.எஸ் வாக்கு வித்தியாசங்களை சரியா கணிக்க முடியலை. அதேமாதிரி காங்கிரஸ் 12 சீட்தான் வாங்கும்னு கணிச்சிருந்தேன். இதுல கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு. இதுவரை தமிழகத்தில் நடந்த தேர்தல்கள்ல அரசியல் கட்சிகளோட வெற்றி, தோல்வி பற்றிய முழு டேட்டாவும் கையில வெச்சிருக்கேன். அடுத்த முறை சரியாக் கணித்து முதல் பரிசு வாங்குவேன்.

முகமது மீரா (ஆவடி)

நிச்சயம் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். 30 ஆண்டுகளாகத் தமிழக அரசியலைத் தீவிரமாகக் கவனித்துவருகிறேன். இதுவரை இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தல் வித்தியாசமாக இருந்தது. பலமுனைகளில் போட்டி இருந்தது. ஓட்டு சிதறுவது, தி.மு.க-வுக்கு எதிராக அமையலாம் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அ.தி.மு.க மீதான அதிருப்தி தி.மு.க-வுக்கு பலமாக மாறும் என்று எதிர்பார்த்தேன். தேர்தல் முடிவு அதுமாதிரிதான் அமைந்தது. என் கணிப்பு உண்மைக்கு நெருக்கமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வெற்றிபெற்ற வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!