Published:Updated:

ஒருங்கிணைப்பில்லாத பொன்முடி; சி.வி.சண்முகத்தின் வைட்டமின்`ப'- விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றிவியூகம்

முத்தமிழ்ச்செல்வன்
முத்தமிழ்ச்செல்வன்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் சுமார் 1,13,407 வாக்குகள் பெற்று, 44,775 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.கவை வீழ்த்தியிருக்கிறார் அ.தி.மு.க முத்தமிழ்ச்செல்வன்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வான தி.மு.க-வைச் சேர்ந்த ராதாமணி உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். அதனால் இந்தத் தொகுதிக்கும் அக்டோபர் 21-ம் தேதி இடைத் தேர்தலை அறிவித்திருந்தது தேர்தல் ஆணையம். அ.தி.மு.க சார்பில் காணை ஒன்றியத்தின் செயலாளர் ஆர்.முத்தமிழ்ச்செல்வனும், தி.மு.க சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்டப் பொருளாளர் நா.புகழேந்தியும் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்கள்.

முத்தமிழ்ச்செல்வன் - புகழேந்தி
முத்தமிழ்ச்செல்வன் - புகழேந்தி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் பொறுத்தவரை அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்குமான போட்டி என்பதைவிட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்குமான பலப்பரீட்சையாகவே பார்க்கப்பட்டது. தொடர் தோல்விகளை சந்தித்துவந்த அ.தி.மு.க இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. அதனால் தனது அண்ணன் ராதாகிருஷ்ணனுடன் கைகோத்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

மைக்ரோ பூத் அளவில் இறங்கி வேலை பார்த்த இந்தச் சகோதரர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், வெளியில் இருந்து வந்த அமைச்சர்கள் என பாரபட்சம் பார்க்காமல் வைட்டமின் `ப'வை இறைத்தார்கள். வாக்கு ஒன்றுக்கு 2 முழு நோட்டுகளைக் கொடுத்த இவர்கள், வீக்காக இருந்த பகுதிகளில் 3 முழு நோட்டுகளுடன், வேட்டி, சேலைகளையும் கொடுக்க அது நல்ல பலனைக் கொடுத்திருக்கிறது. தவிர பரம்பரை தி.மு.க-வினர் என்று சொல்லப்பட்ட குடும்பத்தினருக்கும் இவர்கள் நோட்டுகளையும், வேட்டிகளையும் அனுப்பிய யுக்தி வாக்கு சதவிகிதத்தின் வித்தியாசத்தைக் கூட்டியது.

பொன்முடி
பொன்முடி

அதேபோல இந்தப் பகுதியில் பா.ம.க-வுக்கு இருக்கும் நிலையான வாக்கு வங்கி அ.தி.மு.க-வுக்கு பலமாக அமைந்தது. வன்னியர் சமூகம் என்றாலே அலர்ஜியாகப் பார்க்கும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு இந்தத் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று கட்சிக்குள் இருக்கும் வன்னியர் சமூகத்தினரே கிசுகிசுக்கத் தொடங்கினர்.

அவர்களைக் குறிவைத்த அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன், கரன்ஸி நோட்டுகளைக் காட்டி கொத்தாகத் தூக்கினார். எதிர் தரப்பின் இந்த `மூவ்'வை தெரிந்துகொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``தி.மு.க ஆட்சிக்கு வந்தால் வன்னியர் சமுதாயத்துக்காக இட ஒதுக்கீடு கேட்டு போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவரான ஏ.கோவிந்தசாமிக்கும் விழுப்புரம் மாவட்டத்திலேயே மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று அறிக்கையைப் பறக்கவிட்டார்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

ஆனால், ``தேர்தலின்போது மட்டும் தி.மு.க கொண்டாடுவதற்கு வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா? வன்னியர்கள் மீது அவ்வளவு அக்கறை இருந்தால் 30 வருடங்களாக மாவட்டத் தலைவராக இருக்கும் பொன்முடியின் பதவியை, கட்சியில் அவரைவிட சீனியரான ஏ.ஜி.சம்பத்துக்குக் கொடுப்பாரா?” என்று மருத்துவர் ராமதாஸ் விட்ட அறிக்கை பா.ம.க அல்லாத வன்னியர்களையும் உசுப்பேற்றிவிட்டது.

இந்த விவகாரத்தில் ஸ்டாலின் விட்ட அறிக்கையே அவருக்கு எதிர்வினையை உண்டாக்கிவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

புகழேந்தி தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம்
புகழேந்தி தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படம்

இந்த நேரத்தில் பொன்முடி வன்னியர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று பாருங்கள் என்று ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தி.மு.க-வில் இருந்த வன்னியர்களே வெளியிட்டார்கள். அதில் பொன்முடி நின்றுகொண்டிருக்க தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நா.புகழேந்தி தரையில் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்தார். அந்தப் புகைப்படத்தை எதிர்க்கட்சியினர் வாக்குச் சேகரித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் பொன்முடி சுமுக உறவைக் கடைப்பிடிக்காததால் அந்தத் தரப்பு வாக்குகள் இரட்டை இலை மேல் விழுந்தது. தங்களின் 52 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 14 எம்.பி-க்களை தொகுதிக்கு அனுப்பினார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அவர்களை முறையாக ஒருங்கிணைக்காத பொன்முடி, உள்ளூர் நிர்வாகிகள் அவர்களுடன் கைகோத்துக்கொண்டு தன்னை ஓரம் கட்டிவிடப் போகிறார்கள் என்பதில்தான் கவனமாக இருந்தாராம்.

முத்தமிழ்ச்செல்வன்
முத்தமிழ்ச்செல்வன்

அதனால்தான் வெளியூரிலிருந்து வந்த தி.மு.க எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-க்கள் அனைவரும் தெற்கு வடக்கு தெரியாமல் முட்டுச்சந்தில் முட்டி நின்றுவிட்டனர். இவைகள்தான் கடந்த தேர்தலில் 6912 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த அ.தி.மு.கவை இந்தத் தேர்தலில் 44,796 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்திருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு