Published:Updated:

பா.ஜ.க-வின் பாய்ச்சலுக்கு இடையேயும் திரிணாமுல் காங்கிரஸ் வென்றது எப்படி? - 5 காரணங்கள்!

மோடி - மம்தா
மோடி - மம்தா

மேற்கு வங்கத்தில் இந்த முறை பாஜக பெரும் எழுச்சியுடன் தேர்தலில் களமிறங்கிய போதிலும், அந்தக் கட்சியின் அத்தனை வியூகங்களையும் மீறி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அபாரமான முன்னிலை பெற்றதற்கு 5 காரணங்கள்தான் முக்கியமாக சொல்லப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர் யார்?

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சியமைத்ததிலிருந்தே, மாநில சட்டசபை தேர்தல்களிலும் பெரும்பாலும் மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்வதே அந்தக் கட்சிக்கு வழக்கமாக இருந்து வருகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களே இதற்கு விதி விலக்காக இருந்து வருகின்றன.

இந்த நிலையில், ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் எனக் களமிறங்கிய மேற்குவங்க தேர்தலில், பாஜக வெற்றி பெற்றால் யார் வேட்பாளர் என்பதை முன்னிறுத்த அக்கட்சி தவறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், முதல்வர் வேட்பாளர் என்று
சொல்லத்தக்க வகையில் மக்களுக்கு நன்கு அறிமுகமான மாநில அளவிலான பாஜக தலைவர் யாரும் இல்லாததுதான். மம்தா மீது ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருந்தாலும், மக்களிடையே முதல்வர் வேட்பாளராக அறிமுகமான அளவுக்கு,
பாஜகவில் யாருமே இல்லாமல் போனது அந்தக் கட்சியின் துரதிருஷ்டவசமாகவே போனது.

இதனால்தான், தேர்தல் பிரசாரத்தில் மோடி மற்றும் அமித்ஷாவை முன்னிறுத்தியே பாஜக பிரசாரம் மேற்கொண்டது. ஆனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதைச் சொல்லாததால் மக்களிடம் ஒரு நெருக்கமான தாக்கத்தை ஏற்படுத்த பாஜக தவறி விட்டது.

மம்தா - அமித் ஷா
மம்தா - அமித் ஷா

மம்தாவின் அன்னியர்கள் கோஷம்!

மோடியும் அமித்ஷாவும் மட்டுமல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்த இதர பாஜக தலைவர்களும் மேற்கு வங்கத்தைச் சுற்றிச் சுற்றி வந்து பிரசாரம் செய்தனர். இந்த நிலையில், அவர்களை அன்னியர்கள் என்றும், மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்களால் மேற்கு வங்கத்தின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் புரிந்து கொள்ள முடியாது என்றும் மம்தா மேற்கொண்ட பிரசாரம் வாக்காளர்களிடையே நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது.

கை கொடுத்த நலத்திட்டங்கள்!

கடந்த 10 ஆண்டு கால மம்தா ஆட்சியில், அவர் பெண்களின் நலன்களுக்காக மேற்கொண்ட பல நலத்திட்டங்களும் இந்தத் தேர்தலில் அவரது கட்சிக்கு கை கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக ஒரு பெண் குழந்தை 8 ஆம்
வகுப்புக்கு வந்துவிட்டால், அவளுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும் என்ற 'கன்யாஸ்ரீ' என்ற திட்டமும், ஒரு பெண் குழந்தை 18 வயதை அடைந்து விட்டால், அவளது குடும்பத்துக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும் என்ற 'ரூபஸ்ரீ' என்ற திட்டமும் தாய்மார்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவை தவிர, இலவச அரிசி மற்றும் இலவச ரேசன் பொருட்கள் ஆகிய சமூக நலத் திட்டங்களும் அவருக்கு கை கொடுத்தது எனலாம்.

கை கொடுத்த கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் வாக்குகள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்று, 40 சதவீத வாக்குகளைப் பெற்றதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் வாக்குகள் முக்கிய பங்காற்றின. ஆனால் இந்தத் தேர்தலில்
இந்த வாக்குகளில் கணிசமானவை மம்தா கட்சி பக்கம் சாய்ந்து விட்டது. திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவீதம்(இன்று மாலை நிலவரப்படி) இந்த முறை 43 லிருந்து 49 ஆக அதிகரித்ததற்கும், பாஜகவின் வாக்கு சதவீதம் 40 லிருந்து 37 ஆக சரிந்ததற்கும் இதுதான் முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இந்துத்துவா கோஷம்!

மேற்கு வங்க தேர்தலில், இந்துத்துவா கோஷத்தையும் அது தொடர்பான முழக்கங்களையும் முன்னிறுத்தி பாஜக மேற்கொண்ட பிரசாரம், அந்தக் கட்சிக்கு ஓரளவுக்கு வாக்குகளைப் பெற்றுத்தந்த போதிலும், அதுவே பாஜகவுக்குப் பாதகமான நிலையையும் ஏற்படுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும். பாஜகவின் இந்துத்துவா பிரசாரம், மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதிகளில் கணிசமாக உள்ள இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாற்றி விட்டது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு