Published:Updated:

உள்ளாட்சி ரேஸ்: அனல் பறக்கும் `எடப்பாடி vs கே.என் நேரு’... சேலம் மாநகராட்சியை கைப்பற்றுமா திமுக?!

சேலம் மாநகராட்சி

சேலம் மாவட்டத்தில் ஒரே எம்.எல்.ஏ-வை மட்டுமே வைத்திருக்கும் தி.மு.க., சேலம் மாநகராட்சியைக் கைப்பற்றுமா... அல்லது அ.தி.மு.க.,வெற்றி வாகை சூடுமா!

உள்ளாட்சி ரேஸ்: அனல் பறக்கும் `எடப்பாடி vs கே.என் நேரு’... சேலம் மாநகராட்சியை கைப்பற்றுமா திமுக?!

சேலம் மாவட்டத்தில் ஒரே எம்.எல்.ஏ-வை மட்டுமே வைத்திருக்கும் தி.மு.க., சேலம் மாநகராட்சியைக் கைப்பற்றுமா... அல்லது அ.தி.மு.க.,வெற்றி வாகை சூடுமா!

Published:Updated:
சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சி:

சேலம் என்றாலே அதையொட்டி நம் நினைவுக்கு வரும் மாம்பழத்தை யாராலும் தவிர்க்க முடியாது. அதைத்தாண்டி வெள்ளிக் கொலுசு தயாரிப்பு, ஜவுளித் தொழில், உருக்காலை, வெண்பட்டு எனச் சேலத்தின் பெருமைகளைச் சொல்லுபவை ஏராளமாக இருக்கின்றன. 1851-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சேலம் நகரசபை நிர்வாகம் தோற்றுவிக்கப்பட்டது. 1917-ல் சேலம் நகரசபை தலைவராக பதவி வகித்த மூதறிஞர் ராஜாஜி, பின்னர் சென்னை மாகாண முதல்வர், இந்தியாவின் கவர்னர் ஜெனரல் போன்ற மிகப்பெரும் பதவிகளை வகித்தார். நகராட்சியாக இருந்த சேலம் 1.6.1994-ல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சிக்கு அடுத்தபடியாக 5-வது பெரிய மாநகராட்சியாக இருக்கிறது சேலம் மாநகராட்சி.

சேலம்
சேலம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1996-ம் ஆண்டு நடந்த மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட டாக்டர் சூடாமணி சேலம் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு பெற்றார். 2001-ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுரேஷ்குமார், 2006-ல் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ரேகா பிரியதர்ஷினி, 2011-ல் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சவுண்டப்பன் ஆகியோர் மேயர் ஆனார்கள். இதுவரை நடந்த 4 தேர்தல்களில் தலா 2 முறை திமுக, அதிமுகவினர் மேயர் பொறுப்பை வகித்துள்ளனர். ஐந்தாவது மாநகராட்சித் தேர்தலை சந்திக்கவிருக்கும் சேலம் மாநகராட்சியின் மேயர் பதவி பொது ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

சேலம்
சேலம்

சேலம் மாநகராட்சியில் அம்மாபேடை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் அஸ்தம்பட்டி என நான்கு மண்டலங்கள் உள்ளடக்கிய 60 வார்டுகள் உள்ளன. இதில் மொத்த வாக்காளர்கள் 7,19,361 பேர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். இந்த 60 வார்டுகளின் கவுன்சிலர் பதவிக்காக 618 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திமுக vs அதிமுக

அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., ஆகிய கட்சிகள் 60 வார்டுகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது. தி.மு.க., தனது கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸிற்கு 5 வார்டுகளையும், சி.பி.எம்., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 இடங்களையும், சி.பி.ஐ., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றிக்கு தலா ஒரு வார்டுகள் என மொத்தம் 12 வார்டுகளை கொடுத்துவிட்டு 48 வார்டுகளில் தி.மு.க.,களமிறங்கியிருக்கிறது.

சேலம் மாநகர் சாலை
சேலம் மாநகர் சாலை

சிக்கல்களும் சவால்களும்..!

கடந்த சில ஆண்டுகளில் பெரும் வளர்ச்சியடைந்திருக்கும் சேலத்தில் வளர்ச்சிக்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகள் இதுவரை முழுமை பெறாமல் இருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் எதுவுமே முழுமை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. சிறிய மழைக்கே நீச்சல் குளம் போல மாநகரின் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழைநீர் வடிகால்கள் தூர்ந்து போய்க் கிடப்பதோடு, பாதாளாச் சாக்கடைப் பணிகளும் முழுவதுமாக முடிக்கப்படாமல் கிடக்கிறது.

எவ்வளவோ பாலங்கள் கட்டியும் இன்னும் மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. மாநகர் முழுக்க குண்டும் குழியுமான சாலைகளே இருக்கின்றன. சேலம் மாநகருக்குள் ஓடும் திருமணிமுத்தாறில் சாயக் கழிவுகள் கலந்து சீர் கெட்டுக் கிடக்கிறது. மாநகராட்சிக்கு வந்துசேர வேண்டிய சுமார் 50 கோடிக்கும் மேலான வரிகள் வசூல் செய்யப்படாமல் இருக்கிறது. மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத சூழலில் மாநகராட்சியின் நிதிப் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது. இப்படி சேலம் மாநகராட்சியில் சீர் செய்யப்பட வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

எடப்பாடி vs கே.என் நேரு:

2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி 9 தொகுதிகளைக் கைப்பற்றியது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தி.மு.க.,வால் வெற்றி பெற முடிந்தது. கடந்த 10 ஆண்டுகளாக சேலம் மாநகரை கட்டுக்குள் வைத்திருக்கும் அ.தி.மு.க., இம்முறையும் சேலம் மாநகராட்சியைக் கைப்பற்ற தீவிரமாக களமாடி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சியைப் பிடிக்க வேண்டுமென்பதை தி.மு.க., கெளரவப் பிரச்னையாகப் பார்க்கிறது. இதற்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான கே.என்.நேருவை சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக அறிவித்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது.

தி.மு.க., தரப்பில் சேலம் மேயர் பதவியைப் பிடித்திட மாவட்ட அவைத் தலைவர் எஸ்.டி.கலையமுதன், மாநகரச் செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் துணை மேயர் பன்னீர் செல்வம், 2014 சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட உமாராணி ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர். இதில் கலையமுதன் 80 வயதை எட்டியவர் என்பதால் மேயர் வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான் என்கின்றனர். மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனுக்கு நெருக்கமாக இருப்பதால் ஜெயக்குமாருக்கே மேயர் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்கின்றனர் விஷயமறிந்த உடன்பிறப்புகள்.

அ.தி.மு.க-வில் சேலம் மாநகர் மாவட்ட இணைச் செயலாளர் ஏ.இ.சுகுமாருக்கு மேயராகும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு, தலைமையின் வேட்பாளர் பட்டியலிலும் அவரின் பெயர் இடம்பெற்றது. ஆனால், மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அவரின் ஓட்டு இல்லாமல் போனதால் போட்டியிட முடியவில்லை. அதனால் அவருடைய மகள் ரம்யாவை வேட்புமனுத் தாக்கல் செய்யச் சொல்லி மேயர் ரேஸில் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்.

தி.மு.க., தேர்தல் பிரசாரம்
தி.மு.க., தேர்தல் பிரசாரம்

முன்னாள் எம்.எல்.ஏவும், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளருமான வெங்கடாஜலம் அவரின் மகன் ஜனார்த்தனனுக்கு மேயர் பதவியை எதிர்பார்க்கிறார். எடப்பாடியார் தரப்பும் ஜனார்த்தனனுக்கு மேயர் சீட்டுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகச் சொல்கின்றனர். அதேபோல சூரமங்கலம் பகுதிச் செயலாளர் ஏ.கே.எஸ்.எம்.பாலு, முன்னாள் சூரமங்கலம் பகுதிச் செயலாளர் தியாகராஜன், முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜ் மனைவி கோகிலவாணி ஆகியோரும் மேயர் அல்லது துணை மேயர் என ஏதாவது ஒரு பதவியை வாங்கிவிட வேண்டுமென நெடுஞ்சாலை நகரிலுள்ள எடப்பாடியார் வீட்டிற்கு நடையாய் நடந்து வருகின்றனராம்.

முந்துவது யார்?

சேலம் மாவட்டத்தில் ஒரே எம்.எல்.ஏவை மட்டுமே வைத்திருக்கும் தி.மு.க., சேலம் மாநகராட்சியைக் கைப்பற்றுமா... அல்லது அ.தி.மு.க.,வெற்றி வாகை சூடுமா என்பது தான் இப்போதைய கேள்வி. சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக என கூட்டணியாக களம் இறங்கினர். ஆனால் இப்போது, கூட்டணி பிரிந்து தனி தனியாக இறங்குவது திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதற செய்கிறது. இது திமுக-வுக்கு ப்ளஸ். கூடவே, திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும் களத்தில் சிறப்பாக இருப்பதால், சேலம் மாநகரில் திமுகவே இப்போது முந்தி நிற்கிறது. கடைசி நேர வைட்டமின்களால் சில மாறுதல்கள் நடக்கலாம் என்றாலும், திமுக வுக்கு அது பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தாது என்கிறார்கள் உள்ளூர் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.