Published:Updated:

`மறுவாக்கு எண்ணிக்கையிலும் நாங்களே லீடிங்.. ஆனால்?!' -தர்ணா போராட்டத்தில் கொதித்த செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மாற்றி, அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றிபெற்றதாக அறிவித்ததாகக் கூறி செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் போராட்டத்தில் இறங்கினர்.

போராட்டத்தில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி
போராட்டத்தில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி

கரூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகளைக் கண்டித்து செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் அதிகாலையிலிருந்தே தர்ணா, சாலை மறியல் எனத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

செந்தில் பாலாஜி, ஜோதிமணி போராட்டம்
செந்தில் பாலாஜி, ஜோதிமணி போராட்டம்
நா.ராஜமுருகன்

தமிழகத்தில் மொத்தம் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல், இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த இரண்டு கட்டத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. நேற்று இரவும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது. கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை, க.பரமத்தியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.

Vikatan

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகள் உள்ளன. இவற்றில், 1 மற்றும் 16வது வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை மாற்றி, அந்த வார்டுகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.

செந்தில் பாலாஜி, ஜோதிமணி போராட்டம்
செந்தில் பாலாஜி, ஜோதிமணி போராட்டம்

இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜியும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் க.பரமத்தி விரைந்தனர். இன்று காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகள் இதற்கு எந்தவித ரெஸ்பான்ஸும் கொடுக்கவில்லை. இதனால் கோபமான செந்தில் பாலாஜி, கரூர் டு கோவை சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினார். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரூர் மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் சம்பவ இடத்துக்கு வந்து செந்தில் பாலாஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

`என்ன நடந்தது?' என செந்தில் பாலாஜியிடம் கேட்டோம்.

``கரூர் மாவட்டம், டி.கூடலூர் மேற்கு 16-வது வார்டு ஒன்றியத்துக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் லோகநாயகி வெற்றிபெற்ற நிலையில், ஆளும் கட்சியினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி, அ.தி.மு.க வேட்பாளர் கலையரசியைவிட 2 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார். இந்த வெற்றியை உடனடியாக அறிவிக்காத தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேண்டுமென்றே காலதாமதம் செய்து, இரண்டுமுறை மறுஎண்ணிக்கை செய்தனர். அதன்பிறகும், காங்கிரஸ் வேட்பாளரே இரண்டு வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருந்தார்.

இந்தநிலையில், மேலும் காலதாமதம் செய்து விடியற்காலை 3.30 அளவில் அ.தி.மு.க வேட்பாளர் கலையரசி ரவி வெற்றிபெற்றதாக அறிவிப்பு செய்துள்ளனர். அதேபோல், 1வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்குக் குணசேகரன் போட்டியிட்டார். அவர்தான் 1வது வார்டில் வெற்றிபெற்றார். ஆனால், அதையும் மாற்றி, 1வது வார்டில் அ.தி.மு.க வேட்பாளர் சரவணக்குமார் வெற்றிபெற்றதாக முறைகேடாக அறிவித்துவிட்டார்கள்.

செந்தில் பாலாஜி, ஜோதிமணி போராட்டம்
செந்தில் பாலாஜி, ஜோதிமணி போராட்டம்

இதைதொடர்ந்து, க.பரமத்தி ஒன்றியத்தில் அ.தி.மு.க 9 இடங்களிலும் தி.மு.க 8 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்தார்கள்.

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவியை அ.தி.மு.க-வினர் பிடிக்க வேண்டும் என்பதற்காக, நாங்கள் பெற்ற இரண்டு இடங்களின் வெற்றியை, அ.தி.மு.க பெற்றதாக மாற்றி அறிவித்துவிட்டனர். இதன் பின்னணியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கைங்கர்யம் இருக்கிறது. எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை" என்றார் கொதிப்புடன்.