Published:Updated:

பீகார் தேர்தல்... ஜெயித்த மூவர்... தோற்ற மூவர்!

ஜெயித்தவர்களில் மோடி இரண்டாம் இடம் பிடிக்கிறார். கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைவிட குறைவான தொகுதிகளில் பி.ஜே.பி போட்டியிட்டது.

பிரீமியம் ஸ்டோரி
கருத்துக் கணிப்பு செய்பவர்களின் முகத்தில் கரியைப் பூசுவதில் பீகார் மக்களுக்கு அளவில்லாத ஆனந்தம். இம்முறையும் அதைச் செய்திருக்கிறார்கள். பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் ஆட்சி மாற்றத்தை உறுதிசெய்தபோதும், அங்கு பி.ஜே.பி-யின் பலத்தில் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சி அமைக்கிறார். காங்கிரஸ் பங்குபெற்ற மெகா கூட்டணி வெற்றிக்கோட்டைத் தொடத் தவறியது. இரண்டு கூட்டணிகளிலும் ஜெயித்தவர்களும் இருக்கிறார்கள்; தோற்றவர்களும் இருக்கிறார்கள். இதுதான் இந்தத் தேர்தலின் விநோதம்.

தேஜஸ்வி யாதவ்: 75 இடங்களைப் பிடித்து பீகாரின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி). முதல்வர் நாற்காலியை நூலிழையில் தவறவிட்டிருக்கிறார் தேஜஸ்வி யாதவ். இந்தத் தேர்தலுக்கு முன்பு ‘லாலு பிரசாத் யாதவின் மகன்’ என்பது மட்டுமே அவர் அடையாளம். கொரோனாவைக் காரணம் காட்டி, ‘தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும்’ என்று அவர் கேட்டபோது, ‘சரியாகப் படிக்காததால், தேர்வு எழுத பயப்படும் பள்ளிச் சிறுவனாக’ அவரைக் கிண்டல் செய்தது பி.ஜே.பி. ‘காட்டாட்சி நடத்தியவர்களின் இளவரசன்’ என மோடி விமர்சனம் செய்தார். நிதிஷ் குமார்கூட நிதானமிழந்து தனிநபர் தாக்குதலில் இறங்கினார்.

ஆனால், தேஜஸ்வி பிரசாரத்துக்குப் போன இடங்களிலெல்லாம் பெரும் கூட்டம் திரண்டது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்தது இவர் கட்சி. ‘தேஜஸ்வியின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான்’ என எல்லோரும் முடிவு செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட அரசியல் வனவாசம் போயிருந்த அவர், வீறுகொண்டு எழுந்து இந்தத் தேர்தலைச் சந்தித்தார். என்றாலும், கூட்டணி நெளிவுசுளிவுகள் இன்னமும் அவருக்குக் கைகூடவில்லை.

பீகார் தேர்தல்... ஜெயித்த மூவர்... தோற்ற மூவர்!

ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, முகேஷ் சஹானியின் விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஆகிய இரண்டும் இந்த மெகா கூட்டணியில்தான் இருந்தன. காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடங்களைக் குறைத்து இவர்களைத் தக்கவைத்திருந்தால், ஒருவேளை முடிவு வேறாக இருந்திருக்கலாம். இரண்டு கட்சிகளும் கடைசி நிமிடத்தில் பி.ஜே.பி கூட்டணிக்கு மாறின.

இதேபோல தேஜஸ்வியின் கூட்டணியிலிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியும் விலகிச் சென்று தனிக் கூட்டணி அமைத்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியும் அந்த மூன்றாவது அணியில் இணைந்தன. இதில் ஒவைசி ஐந்து இடங்களைப் பிடித்தார். மாயாவதிக்கு ஓர் இடம் கிடைத்தது. குஷ்வாஹாவுக்கு எதுவுமே கிடைக்கவில்லை.

இன்னொரு பக்கம் லாலுவின் உறவினர் பப்பு யாதவ் தனியாக ஜன் அதிகார் கட்சியை ஆரம்பித்து பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். சின்னச் சின்னக் கட்சிகள் நிறைய இருக்கும் பீகாரில், சிறிய வாக்கு வித்தியாசமும் நிறைய தோல்விகளைக் கொடுத்துவிடும். அதுதான் நடந்தது.

யாதவ் வாக்குகளும், முஸ்லிம் வாக்குகளுமே ஆர்.ஜே.டி கட்சியின் பலம். ஜிதன் ராம் மஞ்சி, முகேஷ் சஹானி, உபேந்திர குஷ்வாஹா போன்றவர்கள் இருந்திருந்தால் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளைக் கூடுதலாகச் சேர்த்திருக்கலாம். அது நடக்காமல் போனது. ஒவைசி வந்து முஸ்லிம் வாக்குகளைப் பிரித்தார். இதனால் வடக்கு பீகாரில் மகா கூட்டணிக்கு பலத்த அடி கிடைத்தது. அதுவே தேஜஸ்வியின் ஆட்சிக் கனவைப் பறித்தது.

பீகார் தேர்தல்... ஜெயித்த மூவர்... தோற்ற மூவர்!

நரேந்திர மோடி: ஜெயித்தவர்களில் மோடி இரண்டாம் இடம் பிடிக்கிறார். கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைவிட குறைவான தொகுதிகளில் பி.ஜே.பி போட்டியிட்டது. ஆனால், 74 இடங்களில் ஜெயித்திருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும், ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தனித்துப் போட்டியிட்டார். அவரின் லோக் ஜனசக்தி கட்சி, நிதிஷ் கட்சியினருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளைப் பிரித்தது. இந்த இழப்பு பி.ஜே.பி-க்கு இல்லை.

ஒருகாலத்தில் மோடிக்கு இணையாகப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நிதிஷ், இப்போது மோடியின் தயவில் மீண்டும் முதல்வராகிறார். பீகார் கூட்டணி அரசுக்கு எதிரான மக்கள் வெறுப்பை முழுதாக நிதிஷ் தாங்கிக்கொள்ள, பி.ஜே.பி அந்த பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொண்டது. இந்த வெற்றியை மோடியின் வெற்றியாக பி.ஜே.பி முன்னிறுத்துகிறது. ‘‘பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமாக எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தற்கு மோடியே காரணம்’’ என்கிறார்கள் பி.ஜே.பி தலைவர்கள். அடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் இந்த பீகார் வெற்றி முன்மாதிரியாகப் பேசப்படும். எதிர்காலத்தில் நிதிஷை ஓரங்கட்டி விட்டு, தனி ஆவர்த்தனம் செய்யவும் இந்த வெற்றி உதவும்.

கம்யூனிஸ்ட்கள்: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சி.பி.ஐ., சி.பி.எம் ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுமே மகா கூட்டணியில் இம் முறை இணைந்தன. 29 இடங்களில் போட்டியிட்ட மூன்று கட்சிகளும் 16 இடங்களில் வென்றுள்ளன. தொடர்ச்சியாக தோல்விச் செய்திகளை மட்டுமே கேட்டு வந்த கம்யூனிஸ்ட்களுக்கு, நீண்டகாலத்துக்குப் பிறகு உற்சாக டானிக் கொடுத்திருக்கிறது பீகார். ‘‘கூடுதல் இடங்களைக் கொடுத்திருந்தால், இன்னும் அதிக இடங்களில் ஜெயித்திருப்போம்’’ என்கிறார் சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. ஒருவேளை காங்கிரஸைக் கழற்றிவிட்டுவிட்டு எதிர்காலக் கூட்டணிகளை தேஜஸ்வி திட்டமிட்டால், கம்யூனிஸ்ட்கள் அங்கு முக்கியத்துவம் பெறக்கூடும்.

நிதிஷ் குமார்: தோற்றவர்களில் முதலிடம் இவருக்குத்தான்! பிரசாரத்துக்குப் போன இடங்களில் வெங்காயத்தால் அடி வாங்கிய இந்த முதல்வர், ‘இதுதான் என் கடைசித் தேர்தல்’ என்று உருக்கமாகப் பேசினார். 243 பேர் பலம்கொண்ட சட்டமன்றத்தில் வெறும் 43 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட கட்சியின் தலைவராக மீண்டும் முதல்வராகிறார். ஒருபக்கம் பி.ஜே.பி ஆதிக்கம் செலுத்தும்; நூலிழை மெஜாரிட்டியில் இருப்பதால் கூட்டணியிலிருக்கும் ஜிதன் ராம் மஞ்சியும் முகேஷ் சஹானியும் முரண்டுபிடிப்பார்கள். முள்கிரீடத்தை நிதிஷ் தலையில் வைக்கிறது பி.ஜே.பி.

பீகார் தேர்தல்... ஜெயித்த மூவர்... தோற்ற மூவர்!

ராகுல் காந்தி: காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்விகள் புதிதல்ல. ஆனால், தேஜஸ்வி தலைமையில் ஒரு மகா கூட்டணியை அமைத்தும், 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்து எதிர்ப்புகளைச் சம்பாதித்த ஓர் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டும், மிக மோசமான தோல்வி கண்டிருக்கிறது காங்கிரஸ். 70 இடங்களில் போட்டியிட்டு வெறும் 19 இடங்களில் மட்டுமே ஜெயித்தது.

‘காங்கிரஸுக்கு இவ்வளவு இடங்களைத் தராமல் இருந்திருந்தால் ஜெயித்திருக்கலாம்’ எனக் கூட்டணியில் எல்லோரும் நினைப்பது ஒரு கட்சிக்கு எவ்வளவு பெரிய வேதனை. இந்தி பேசும் மாநிலங்களில் கட்சிக் கட்டமைப்பைச் சீர்படுத்த காங்கிரஸ் தயாராகவே இல்லை. ‘தேர்தல் நேரத்தில் ஒரு மாதம் வந்து பிரசாரம் செய்தாலே ஜெயித்துவிடலாம். வேறு எதுவும் செய்யத் தேவையில்லை’ என்ற நினைப்பிலிருந்து மீளாதவரை, இது போன்ற தோல்விகளே ராகுலுக்குத் தொடரும்.

சிராக் பாஸ்வான்
சிராக் பாஸ்வான்

சிராக் பாஸ்வான்: ‘கூட்டணி உள்குத்து வேலை கிட்டத்தட்ட கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் போன்ற மோசமான செயல்’ என்பதை சிராக் பாஸ்வான் இப்போது உணர்ந்திருப்பார். நிதிஷ் குமாரை வீழ்த்துவதற்காகத் தனித்துக் களமிறங்கிய இவர், கிங் மேக்கர் ஆவதற்குக் கனவு கண்டார். தேர்தலுக்குப் பிறகு நிதிஷை உதறிவிட்டு தன்னை பி.ஜே.பி சேர்த்துக்கொள்ளும் என்று எதிர்பார்த்தார். ஆனால், ஒரே ஓர் இடம் மட்டுமே அவருக்குக் கிடைத்தது. ஒருவேளை பி.ஜே.பி-யின் ஆசீர்வாதத் துடன் இவர் தனித்துப் போட்டியிட்டிருந்தால், மத்திய அரசில் சில காலம் கழித்து வாய்ப்பு கிடைக்கலாம். இல்லாவிட்டால், இளம் வயதிலேயே அரசியல் எதிர்காலத்தை இழந்தவராக ஆகிவிடுவார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு