
2018 டிசம்பரில் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை மாற்றும் மனோபாவம் கொண்ட ராஜஸ்தான் மக்கள் இம்முறை காங்கிரஸுக்கு வாய்ப்பு தந்தார்கள்
தீர்மானமான மெஜாரிட்டியுடன் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்று தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த நேரத்தில் பா.ஜ.க தலைவர்கள் பலரும் வலியுறுத்திய ஒற்றை விஷயம், ‘இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் கிடையாது' என்பதே! அதே சமயத்தில் காங்கிரஸ் தலைவர்களும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும், ‘இப்போது கர்நாடகாவில் நடந்திருக்கும் ஆட்சி மாற்றம், அடுத்த ஆண்டு டெல்லியிலும் எதிரொலிக்கும்' என்றார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையில் தேர்தல் நடந்தபடி இருக்கிறது. தேர்தலில் ஜெயிக்கும் கட்சிகள், ‘இதேபோல் நாடு முழுக்க நடக்கும்' என்று சொல்வதும், தோற்கும் கட்சிகள் ‘இதைத் தனி ஒரு தேர்தலாக மட்டுமே பார்க்க வேண்டும்' என்று அலறுவதும் வாடிக்கை. நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சரியாக இன்னும் ஓராண்டு இருக்கிறது. இடையில் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் என இன்னும் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற வேண்டும். மாநில சட்டமன்றங்களுக்கான இந்தத் தேர்தல்களின் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்றால், எல்லா நேரங்களிலும் அப்படி நடப்பதில்லை என்பதுதான் யதார்த்தம்.

* கர்நாடகா உதாரணத்திலிருந்தே இதை ஆரம்பிக்கலாம். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 104 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், 224 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் தனித்து ஆட்சியமைக்கப் போதுமான எம்.எல்.ஏ-க்கள் கிடைக்கவில்லை. காங்கிரஸுக்கு 80 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 37 இடங்களும் கிடைத்தன. பா.ஜ.க-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக இந்த இரண்டு கட்சிகளும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைத்தன. ம.ஜ.த கட்சியின் குமாரசாமி முதல்வர் ஆனார். காங்கிரஸ் அந்த அரசில் இணைந்தது. ஒரே ஆண்டு இடைவெளியில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அதில் காங்கிரஸும் ம.ஜ.த கட்சியும் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இப்படி ஒரு கூட்டணி அமைத்தபிறகு அவர்கள் அத்தனை இடங்களிலும் ஜெயித்திருக்க வேண்டும். ஆனால், மொத்தமுள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் 25 இடங்களை பா.ஜ.க வென்றது. பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சையாக நின்ற சுமலதாவும் ஜெயித்தார். காங்கிரஸும், ம.ஜ.த-வும் தலா ஒற்றை எம்.பி-யுடன் ஆறுதல் அடைய வேண்டியதாயிற்று. இந்தத் தோல்வியே இந்த இரண்டு கட்சிகளுக்குள் கசப்புணர்வை ஏற்படுத்தியது. பா.ஜ.க அதன்பின் ஆளும் கூட்டணியிலிருந்து 16 எம்.எல்.ஏ-க்களை இழுத்து ஆட்சியைக் கவிழ்த்தது. மோடி மீண்டும் பிரதமரான இரண்டே மாதங்களில் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க ஆட்சி அங்கு அமைந்தது.
* மத்தியப் பிரதேசத்திலும் இதே ஸ்கிரிப்டை பா.ஜ.க எழுதியது. 2018 நவம்பரில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களைப் பெற்றும் சிறிய கட்சிகள், சுயேச்சைகள் துணையுடன் ஆட்சி அமைத்தது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பா.ஜ.க., 109 இடங்களுடன் எதிர்க்கட்சியாக திருப்திப்பட வேண்டியதாயிற்று. ஏழே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல். மொத்தமுள்ள 29 இடங்களில் 28 தொகுதிகளை அள்ளியது பா.ஜ.க. அவர்களில் 16 பேர் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்கள். காங்கிரஸுக்குக் கிடைத்தது ஒற்றை எம்.பி மட்டுமே. அது, முதல்வர் கமல்நாத்தின் சொந்தத் தொகுதியில் கிடைத்த வெற்றி. தேர்தலில் தோற்ற விரக்தியில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வலைவீசி பா.ஜ.க பக்கம் இழுக்கப்பட்டார்கள். கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
* இதே நேரத்தில்தான் சத்தீஸ்கருக்கும் தேர்தல் நடந்தது. 90 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் 68 இடங்களைப் பிடித்து அசுரபலத்துடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ். அதுவரை ஆட்சியிலிருந்த பா.ஜ.க., வெறும் 15 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட சிறிய கட்சியாக சுருங்கிப்போனது. ஆனால், ஏழே மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 9 இடங்களை பா.ஜ.க வென்றது. காங்கிரஸ் பெற்றது மிச்சம் இரண்டு இடங்களை மட்டுமே!

* 2018 டிசம்பரில் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை மாற்றும் மனோபாவம் கொண்ட ராஜஸ்தான் மக்கள் இம்முறை காங்கிரஸுக்கு வாய்ப்பு தந்தார்கள். 200 உறுப்பினர் சட்டமன்றத்தில் 100 தொகுதிகளில் வென்று அசோக் கெலாட் ஆட்சி அமைக்க, 73 இடங்களுடன் பா.ஜ.க எதிர்க்கட்சி ஆனது. ஆனால், ஐந்தே மாதங்களில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வேறுவிதமாக இருந்தது. காங்கிரஸுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. பா.ஜ.க கூட்டணி 25 தொகுதிகளையும் வென்றது. 16 தொகுதிகளில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர்கள் ஜெயித்தார்கள்.
* சட்டமன்றத் தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் வேறு வேறு மனநிலையில் மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு டெல்லி சிறந்த உதாரணம். 2019 மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியின் ஏழு இடங்களையும் பா.ஜ.க வென்றது. காங்கிரஸுக்கு இரண்டாவது இடம் கிடைக்க, ஆம் ஆத்மி கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. ஒன்பது மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வந்தது. 70 உறுப்பினர் சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்க, வெறும் எட்டே எம்.எல்.ஏ-க்களுடன் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர்ந்தது பா.ஜ.க.
ஒரு சட்டமன்றத் தேர்தல் என்பது அந்த மாநில அரசைத் தீர்மானிக்கும் தேர்தல், அதில் தேசப் பாதுகாப்பு, பிரதமரின் செல்வாக்கு போன்ற விஷயங்களைப் பொருட்படுத்துவதில்லை என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். உள்ளூர் தலைவர்களையே அவர்கள் சீர்தூக்கிப் பார்க்கிறார்கள். கர்நாடகத் தேர்தலில் பசவராஜ் பொம்மை அரசின் முறைகேடுகளே முக்கியப் பிரச்னையாக இருந்தன. நந்தினி பால் விவகாரம், கன்னட மொழிப் புறக்கணிப்பு என்று கன்னடர்களின் குரலாக ஒரு மாநிலக்கட்சி போலவே காங்கிரஸ் பிரசாரம் செய்தது. பா.ஜ.க-வுக்கு ஈடுகொடுக்கும் வலிமை கர்நாடக காங்கிரஸுக்கு இருந்தது. எனவேதான் வெற்றி கிடைத்தது.
பெரிய மாநிலங்களிலும் முக்கியமான தேர்தல்களிலும் தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து சோர்ந்து போயிருந்த காங்கிரஸ் கட்சிக்குக் கர்நாடக வெற்றி ஒரு புது சுவாசம் கொடுத்திருக்கிறது. தெலங்கானாத் தேர்தல் களம் இப்போது பாரத் ராஷ்ட்ரிய சமிதிக்கும் பா.ஜ.க-வுக்குமான மோதல் களமாகக் காட்டப்படுகிறது. அங்கு ஆளும்கட்சியிலிருந்து பலரை இழுத்து பா.ஜ.க வளர்ந்துவருகிறது. அங்கு முக்கியக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், இப்போது புது வேகத்துடன் களத்தில் இறங்கக்கூடும். கர்நாடகா முடிவுகள் வெளியான நேரத்தில், தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கோஷ்டி சண்டைகளை மறந்து ஒன்றிணைந்தது இதையே காட்டுகிறது. ராஜஸ்தானில் அரசுக்கு எதிராக முஷ்டி உயர்த்தும் இளம் தலைவர் சச்சின் பைலட் இனி அடக்கி வாசிக்கலாம். ராகுல் காந்தியும் பிரியங்காவும் முன்பைவிட உற்சாகமாக சுற்றுப்பயணங்கள் செய்யலாம். இவ்வளவு காலமாக காங்கிரஸை பழைய பெருங்காய டப்பா போலவே டீல் செய்த பிற எதிர்க்கட்சிகள் இனி கூடுதல் மரியாதை தரலாம். ஆனால், கர்நாடகாவில் செய்தது போன்ற பிரசாரத்தை நாடு முழுக்க 2024 தேர்தலில் செய்வது காங்கிரஸுக்குக் கடினமான விஷயம்.


பா.ஜ.க-வுக்கு தென் மாநிலங்களை எப்படி அணுகுவது என்ற திட்டத்தை முழுமையாக மாற்றுவதற்கு கர்நாடகத் தேர்தல் முடிவு உதவும். 130 தொகுதிகள் இருக்கும் ஐந்து மாநிலங்களில் கர்நாடகா தவிர வேறு எங்கும் அவர்களுக்குப் பெரிதாக செல்வாக்கு இல்லை. கடந்த முறை அவர்களுக்குக் கிடைத்த 29 எம்.பி-க்களில் 25 பேர் கர்நாடகாவிலிருந்தும், 4 பேர் தெலங்கானா விலிருந்தும் வந்தார்கள். தெலங்கானாத் தேர்தலை எதிர்கொள்ளும் அதே நேரத்தில் தமிழகத்திலும் ஆந்திராவிலும் கூட்டணி விஷயத்தில் அவர்கள் இனி அடக்கி வாசிக்க நேரிடலாம்.
மோடியின் தனிப்பட்ட செல்வாக்கு, மத்திய அரசு செய்திருக்கும் நலத்திட்டங்கள், இந்துத்துவ முழக்கம், தேர்தல்களை அணுகுவதில் பா.ஜ.க-வுக்கு இருக்கும் தனிப்பட்ட அமைப்பு பலம் ஆகியவையே தொடர்ச்சியாக அந்தக் கட்சிக்கு வெற்றி தேடித் தருகின்றன. பா.ஜ.க-வின் அமைப்பு பலத்துக்குத் தங்களால் ஈடுகொடுக்க முடியும் என காங்கிரஸ் கர்நாடகாவில் காட்டியிருக்கிறது. 'ஜெய் பஜ்ரங் பலி' என உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் முதல் பிரியங்கா காந்தி வரை அனுமன் வழிபாடு செய்து பா.ஜ.க-வின் இந்துத்துவப் பிரசாரத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். 2024 தேர்தல் இன்னும் பல சுவாரசியங்களுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
எந்த ஒரு கட்சியும் மற்ற கட்சிகளை ஒரேயடியாகச் சிதைத்துவிட்டு நீண்ட காலம் அதிகாரம் செலுத்த முடியாது என்ற ஜனநாயக அடிப்படைப் பாடத்தைக் கர்நாடகத் தேர்தல் மீண்டும் ஒருமுறை அரசியல்வாதிகளுக்கு எடுத்திருக்கிறது.