அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

தடையில்லா பட்டுவாடா... தகராறு இல்லாத வாக்குப்பதிவு... தலையிடாத தேர்தல் ஆணையம்... கைகோத்த கழகங்கள்!

வாக்குப்பதிவு
பிரீமியம் ஸ்டோரி
News
வாக்குப்பதிவு

ஒரு மாத மளிகைச் சாமான் தந்துடுறோம்... பத்து பச்சைத் தாள் கொடுத்துடுறோம். இதுபோக பம்பர் பரிசு ஒண்ணும் காத்திருக்கு. உங்க பெயரையெல்லாம் எழுதிப்போட்டு, குலுக்கல் முறையில தேர்ந்தெடுப்போம். குலுக்கலில் ஜெயிக்குறவங்களுக்கு பம்பர் பரிசாக ஒரு கார் காத்திருக்கு...

கடந்த ஒரு மாதமாக, தமிழக அரசியலில் புயலாக வீசிக்கொண்டிருந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒருவழியாகக் கரையைக் கடந்துவிட்டது. பிப்ரவரி 25-ம் தேதியுடன் பிரசாரம் முடிந்தும், வாக்குப்பதிவின் கடைசி நேரம் வரை பட்டுவாடா காட்சிகள் ஓயவில்லை. ‘என் வழியில நீ வராதே... உன் வழியில நான் வர மாட்டேன்...’ எனக் கைகோத்துக்கொண்டு தொகுதிக்குள் பரிசுமழையைப் பொழிந்திருக்கின்றன இரு கழகங்களும். தொகுதி முழுவதும் இவ்வளவு விதிமீறல்கள் நிகழ்த்தப்பட்டபோதும், எதிலும் தலையிடாமல் தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கேலிக்கூத்து. தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக நடந்த கூத்துகளெல்லாம் ஜனநாயகத்தையே முச்சந்தியில் நிறுத்திவிட்டன.

தடபுடல் விருந்து... தடையில்லா பட்டுவாடா!

பிப்ரவரி 24, 25-ம் தேதிகளை ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களின் ‘ஜாக்பாட் தினம்’ என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத் தேதிகளில்தான் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடைசிகட்டப் பிரசாரத்துக்கு வந்திருந்தார். அவர் பிரசாரத்துக்கு வரும்போதெல்லாம் வாக்காளர்களுக்கு ‘பசை’யை இறக்கும் தி.மு.க., இந்த முறை மட்டன் பிரியாணியில் தொடங்கி ஐஸ்க்ரீம் வரை ‘தடபுடல் விருந்து’ படைத்தது. எடப்பாடியின் பிரசாரக் கூட்டத்துக்குச் செல்வதைத் தடுக்க, ஒரு வாக்காளருக்கு மூன்று பச்சைத் தாள்களும் கையளிக்கப்பட்டன.

தடையில்லா பட்டுவாடா... தகராறு இல்லாத வாக்குப்பதிவு... தலையிடாத தேர்தல் ஆணையம்... கைகோத்த கழகங்கள்!

பிப்ரவரி 25-ம் தேதியில் மொத்தம் ஐந்து இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். சுமார் ஒரு லட்சம் பேர் திரண்ட அன்றைய தினம் நசியனூர் சாலையிலுள்ள தி.மு.க பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்தில் சுமார் 3,000 பேருக்கு ஸ்பெஷல் கறி விருந்து நடைபெற்றது. நசியனூர் சாலை, சித்தன் நகர்ப் பகுதியிலுள்ள வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸில் அடைத்த பிரியாணியும், சிக்கன் ஃபிரையும் வழங்கினார்கள் உடன்பிறப்புகள். போதாததற்கு மதுரையிலிருந்து ஸ்பெஷலாக வந்திருந்த பீடாவும் விநியோகிக்கப்பட்டது.

கொங்கு அமைச்சரின் கன்ட்ரோலிலுள்ள வீரப்பன் சத்திரம் பகுதியில், பிப்ரவரி 25-ம் தேதி இரவோடு இரவாக காஸ்ட்லி பட்டுப் புடவை, பித்தளை விளக்குகள் வழங்கப்பட்டன. குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் சர்ப்ரைஸ் கிஃப்டாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்த ஸ்மார்ட் வாட்ச்சுகள், இதர பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டன. வாக்காளர்களிடம், “இதெல்லாம் டிரெய்லர்தான்மா... தேர்தல் முடிஞ்ச பிறகு, மூன்று மாசத்துக்கான மளிகை சாமான், அஞ்சு ‘ரோஸ் மில்க்’ தாள்கள் தர்றோம்” என வாக்குறுதிகளை அள்ளி வீசினர் ஆளுங்கட்சி நிர்வாகிகள்.

“பம்பர் பரிசு கார்” - இலைக் கட்சியின் அதிரடி ஆஃபர்!

இந்தப் பட்டுவாடாவில் அ.தி.மு.க-வும் சளைக்கவில்லை. பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பால் உற்சாகமடைந்த அ.தி.மு.க நிர்வாகிகள், தி.மு.க-வுக்கு ‘டஃப்’ கொடுக்க வேண்டுமென்பதற்காகப் பல வார்டுகளில் வெள்ளிக் கிண்ணம், வெள்ளி காமாட்சி விளக்குகளை வாரி வழங்கினார்கள். சில வார்டுகளில் தங்கக்காசுக்கான ‘டோக்கன்’களும் விநியோகிக்கப்பட்டன. எடப்பாடியின் பிரசாரத்துக்குக் கூட்டம் கூடவில்லை என்பதற்காக, ஈரோடு மேற்குத் தொகுதி, பெருந்துறை, கோபி, மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தலைக்கு மூன்று ‘நீல நிறத்’ தாள்களைக் கொடுத்து ஆட்களை அழைத்து வந்திருந்தனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

தடையில்லா பட்டுவாடா... தகராறு இல்லாத வாக்குப்பதிவு... தலையிடாத தேர்தல் ஆணையம்... கைகோத்த கழகங்கள்!

அதேபோல் தி.மு.க-வுக்கு நிகராக ஆஃபர்களை அள்ளி வீசவும் அ.தி.மு.க-வினர் தயங்கவில்லை. “ஒரு மாத மளிகைச் சாமான் தந்துடுறோம்... பத்து பச்சைத் தாள் கொடுத்துடுறோம். இதுபோக பம்பர் பரிசு ஒண்ணும் காத்திருக்கு. உங்க பெயரையெல்லாம் எழுதிப்போட்டு, குலுக்கல் முறையில தேர்ந்தெடுப்போம். குலுக்கலில் ஜெயிக்குறவங்களுக்கு பம்பர் பரிசாக ஒரு கார் காத்திருக்கு...” என ஒரே போடாகப் போடவும் வாக்காளர்களே திக்குமுக்காடிப்போனார்கள். இதற்கிடையே, அ.தி.மு.க-வினர் கொடுத்த சிறிய அளவிலான பரிசுப்பொருள்கள் சரியாகத் தொகுதிக்குள் சென்று சேரவில்லை என்றும் புகார்கள் பறந்தன. இதையடுத்து தேர்தலுக்கு முதல்நாள் நள்ளிரவு வரை, வீடு வீடாகச் சென்று பரிசுப்பொருள்கள் வந்திருக்கின்றனவா என

அ.தி.மு.க பொறுப்பாளர்கள் கிராஸ் செக் செய்துகொண்டிருந்தார்கள். தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் அடித்த இந்தக் கொட்டங்களுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாததுபோல தேர்தல் பறக்கும்படை ‘தூங்குமூஞ்சிப் படை’யாக மாறிப்போயிருந்தது அவலத்தின் உச்சம்.

தடையில்லா பட்டுவாடா... தகராறு இல்லாத வாக்குப்பதிவு... தலையிடாத தேர்தல் ஆணையம்... கைகோத்த கழகங்கள்!

வெளியூரில் வசிக்கும் வாக்காளர்களின் விவரங்கள் அனைத்தும் ஏற்கெனவே தி.மு.க., அ.தி.மு.க-வினர் வசமிருந்ததால், அதற்கும் ஆஃபர் அளிக்கப்பட்டது. வெளியூர் வாக்காளர் தங்களுக்குத்தான் வாக்களிப்பார் என்பது உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அவர்களின் போக்குவரத்துச் செலவை அ.தி.மு.க ஏற்றுக்கொண்டது. ஆனால், தி.மு.க-விடம் அந்த மாதிரியான ‘பாகுபாடு’ இல்லை. “எங்கள் பிள்ளை வெளியூரிலிருந்து வர வேண்டும்” என்று சொன்னாலே அவர்களுக்கான வாகனப் போக்குவரத்துச் செலவைப் பெற்றோரிடம் தந்துவிட்டுச் சென்றனர் தி.மு.க நிர்வாகிகள்.

பிஸியான கால் டாக்ஸி... மஃப்டியில் கரைவேட்டிகள்!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தென்னரசு உள்ளிட்டோருடன் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் இருந்தனர். ஒரு வாக்குச்சாவடியில் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்ததால், வாக்காளர்கள் சின்னத்தைத் தேடிப்பிடித்துத்தான் வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டது. வாக்குச்சாவடிகளில் தி.மு.க ஏஜென்ட்டுகளுக்கு மதியம் மட்டன் பிரியாணி பார்சலில் வந்தது. இதற்கான செலவை அந்தந்த வார்டுகளின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர்களே ஏற்றுக்கொண்டனர். மற்ற கட்சிகளின் பூத் ஏஜென்ட்டுகளுக்கு அந்தந்தக் கட்சிகளின் சார்பில் தக்காளி, தயிர்சாதப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. அவற்றை வாங்கி வீசிவிட்டு, தி.மு.க-வினர் வழங்கிய மட்டன் பிரியாணியை இதர கட்சிகளின் பூத் ஏஜென்ட்டுகள் உண்டு களித்தார்கள்.

நடக்க முடியாத, உடல்நலக் குறைபாடுள்ள வாக்காளர்களை, வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான கால் டாக்ஸி, ஆட்டோ செலவை தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே ஏற்றுக்கொண்டன. தேர்தல் அதிகாரிகளின் வாகனங்களைவிட, இந்த கால் டாக்ஸிகளும், ஆட்டோக்களும்தான் அதிக அளவு வாக்குச்சாவடியைச் சுற்றி வட்டமடித்தன. ஒவ்வோர் ஆட்டோவிலும் கட்சிக்காரர்கள் மஃப்டியில், வாக்காளர்களை அழைத்துவருவதில் மும்முரம் காட்டினார்கள். சிலர் வயதானவர்களைத் தோளில் தூக்கிக்கொண்டும், சக்கர நாற்காலியில்வைத்துத் தள்ளிக்கொண்டு வருவதுமாக, திடீர் ‘அன்னை தெரசாவாக’ அவதாரமெடுத்ததைப் பார்க்க முடிந்தது.

தகராறு இல்லாத வாக்குப்பதிவு... சுமுகமாக நகர்ந்த தேர்தல்!

பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு செய்தன. ஒரு மணி நேரத்துக்கு, சராசரியாக 70 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யும் நிலையே பல வாக்குச்சாவடிகளிலும் இருந்ததால், வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்தது. காரைவாய்க்கால் பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்களித்த பிறகு, ஒரு பெண் வாக்களித்தார். அவர் பொத்தானை அழுத்திவிட்டு, சாவடியைவிட்டு வெளியேறிவிட்டார். ஆனால், அவர் வாக்கைப் பதிவுசெய்ததற்கு அடையாளமாக ஒலிக்கவேண்டிய பீப் ஒலி 20 விநாடிகள் கழித்துத்தான் ஒலித்தது. அந்தப் பெண் செலுத்திய வாக்கு சரியாகப் பதிவாகவில்லை என்பது தாமதமாகவே அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

அன்னை சத்யா நகர் அ.தி.மு.க-வின் கோட்டை என்பதால் அங்கு தி.மு.க-வினர் அதிக அளவு களமிறக்கப்பட்டிருந்தனர். கடைசி நேர சர்ப்ரைஸாக அந்தப் பகுதி மக்களுக்கு தி.மு.க தரப்பில் ‘மூக்குத்தி’யும் தலா இரண்டு ரோஸ் மில்க் தாள்களும் போனஸாக வழங்கப்பட்டன. இதைக் கேள்விப்பட்டு டென்ஷனான அ.தி.மு.க-வினர், “எல்லாம் நேத்தோட முடிஞ்சுபோச்சுங்க... இப்ப வந்து நீங்க பட்டுவாடா பண்றது நியாயமில்லை... நாங்களெல்லாம் எங்கபோறது?” என தி.மு.க-வினருடன் மல்லுக்கட்ட, சிறு சலசலப்பு எழுந்தது.

வாக்குச்சாவடி எண் 198-ல், எந்தப் பொத்தானை அழுத்தினாலும் காங்கிரஸ் கட்சியின் கைச் சின்னம் அருகே விளக்கு எரிவதாகப் புகார் எழுந்தது. அதேபோல 178-வது வார்டிலும் இதே புகார் முன்வைக்கப்பட்டது. “இது சில அரசியல் கட்சிகள் வேண்டுமென்றே கிளப்பிவிட்ட புரளி” என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விளக்கமளித்ததும், அந்த விஷயம் அப்படியே அடங்கிப்போனது. இவற்றைத் தாண்டி, பெரிய அளவில் களேபரக் காட்சி எதுவும் வாக்குப்பதிவின்போது நிகழவில்லை. இடைத்தேர்தல்களுக்கே உரிய தகராறு ஏதும் இல்லாமலேயே சுமுகமாக நகர்ந்தது வாக்குப்பதிவு.

ஐந்து மணி ஆஃபர்... தலையிடாத தேர்தல் ஆணையம்... கைகோத்த கழகங்கள்!

மணி மாலை 5:00-ஐ தொட்டபோது, வாக்குப்பதிவு 70 சதவிகிதம்கூட நெருங்கவில்லை. இதனால் தி.மு.க-வினர் உச்சபட்ச டென்ஷனில் தத்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘மனிதப் பட்டியில் அடைக்கப்பட்ட அனைவரையும் வாக்களிக்கவைத்துவிட வேண்டும்’ என உடன்பிறப்புகளுக்கு ஏற்கெனவே கண்டிப்பான உத்தரவு போடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் பட்டியிலிருந்து மக்களைக் கண்காணித்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வர, ‘20 வாக்காளருக்கு ஓர் உடன்பிறப்பு’ என ஆட்களை நியமித்திருந்தது ஆளுங்கட்சி. அப்படியிருந்தும், பல பகுதிகளில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை.

ராஜாஜிபுரம், வீரப்பன்சத்திரம் பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமானதும் உஷாரான தி.மு.க-வினர், “5 மணிக்கு மேல் வாக்களிக்கும் நபர்கள், மை வைத்த தங்கள் விரலைக் காட்டினால், ஆறு பச்சைத் தாள்கள் தரப்படும். நீங்க யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போட்டுக்கலாம்” என அதிரடி ஆஃபரை அறிவித்தார்கள். இதனால், சரசரவென வாக்குச்சாவடியில் கூட்டம் ஏற ஆரம்பித்தது. மாலை 5:30 மணிக்குள் வாக்குச்சாவடிக்குச் சென்றவர்களுக்கு வாக்களிப்பதற்கான ‘டோக்கன்’ வழங்கப்படும் என்பதால், வாக்குச்சாவடியில் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணியைக் கடந்தும் வாக்குப்பதிவு நடந்தது. இதனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறித் தவித்தது போலீஸ்.

தடையில்லா பட்டுவாடா... தகராறு இல்லாத வாக்குப்பதிவு... தலையிடாத தேர்தல் ஆணையம்... கைகோத்த கழகங்கள்!

நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலர், “இடைத்தேர்தலில், ‘80 சதவிகித வாக்குப்பதிவு’ வந்தே ஆக வேண்டும் எனக் கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. அப்போதுதான், ‘ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மக்கள் எழுச்சியோடு வந்து வாக்களித்திருக்கின்றனர்’ என்கிற பிம்பம் ஏற்படும். எதிர்ப்பு மனநிலை இல்லையென்பதும் நிரூபணமாகும். ஆனால், 80 சதவிகித வாக்குப்பதிவை எட்டும் நிலை ஏற்படாததால், சில ஆஃபர்களை நாங்களே கொடுக்க வேண்டியதாகிவிட்டது” என்றனர். இந்த ஆஃபரை அ.தி.மு.க-வினரும் கொடுத்தார்கள். என்ன ஒன்று, ‘இரட்டை இலை வாக்காளர்களா...’ எனப் பார்த்துப் பார்த்து ஆறு பச்சைத் தாள்களை அவர்கள் தரப்பிலிருந்து இறக்கினர். இந்தக் கடைசி நேர ஆஃபரில்கூட தேர்தல் ஆணையம் தலையிடவில்லை.

ஓர் இடைத்தேர்தலுக்கு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்து இவ்வளவு பரிசுப்பொருள்கள், பட்டுவாடாவை வாரி இறைத்திருப்பது தமிழகத்திலேயே இதுதான் முதன்முறை. இந்தத் தேர்தலில், ஆளுங்கட்சியின் சாதனைகளைச் சொல்லி தி.மு.க-வினரும், அவர்கள் மீதான விமர்சனங்களை அடுக்கி அ.தி.மு.க-வினரும் வாக்குச் சேகரிக்கவில்லை. இரு கழகங்களுமே ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்காமல், கைகோத்துக்கொண்டு, பரிசுமழையை நம்பித்தான் தேர்தலைச் சந்தித்திருக்கின்றன. வாக்காளர்களும் வெட்கமே இல்லாமல், ‘ஹாட் பாக்ஸ்ல சூடா பிரியாணி வந்துச்சா... இல்லையா?’ என்கிறரீதியில்தான் இந்தத் தேர்தலையே அணுகியிருக்கிறார்கள். இதையெல்லாம் தேர்தல் ஆணையம் வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறது. “நேர்மையான, நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும்” என்று சத்தியம் செய்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அந்தச் சத்தியத்தைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டார்.

கடைசியில் ஜனநாயகம் சந்தி சிரித்ததுதான் மிச்சம்!

*****

சந்தைக்கு வந்த இலவசங்கள்!

பரிசுகளை அதிக அளவு கொட்டியதில் ஒருகட்டத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களே டயர்டாகிவிட்டனர். கழகங்கள் மாறி மாறிக் கொலுசுகளை இறக்கியதால், பலர் நகைக்கடைகளில் அவற்றைக் கொடுத்து, கூடுதல் தொகைக்கு வேறு ஆபரணங்களை வாங்கத் தொடங்கினர். இதை உணர்ந்த ஆளுங்கட்சியினர், “கொலுசு வேண்டாம் என்பவர்கள், அதைக் கொடுத்துவிட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்” என ஸ்பெஷல் ஆஃபரை அளித்தார்கள். இந்த டீலிங் பிடித்துப்போய், பலர் கொலுசைக் கொடுத்து, பணத்தை வாங்கிக்கொண்டனர். ஸ்மார்ட் வாட்ச் பெற்ற பல வாக்காளர்கள், அதைப் பயன்படுத்த விருப்பமில்லாமல் அதையும் 600 ரூபாய்க்கு ஈரோடு சந்தையில் விற்றுவிட்டனர். ஈரோடு சந்தைக்கடைகள் முழுவதும், இலவசமாக அளிக்கப்பட்ட கொலுசுகளும், ஸ்மார்ட் வாட்ச்சுகளும்தான் நிரம்பி வழிகின்றன.