
எல்லாம் இந்த ஒரு மாசம்தான். அப்புறம் வாழப்போறது என்னவோ அவிங்க தான் (அரசியல்கட்சிகள்). நாம கடைசிவரை கஞ்சிக்குக் கஷ்டப்பட்டுட்டுதான் இருக்கோணும்”
ஒவ்வொரு இடைத்தேர்தலின்போதும் புதுப்புது பார்முலாக்கள் உருவாகும். அப்படி திருமங்கலம் தொடங்கி இதுவரை உருவான எல்லா பார்முலாக்களையும் ஈரோடு பார்முலா ஓவர்டேக் செய்துள்ளது. மக்களைத் தேடிக் கட்சிகள் பிரசாரத்துக்கு வருவதுதான் இயல்பு. மக்களையே தங்கள் இடத்துக்கு வரவழைத்துவிடுகிறது ஆளுங்கட்சி. ஒவ்வொரு பூத்திலும் தி.மு.க சார்பில் ஒரு பணிமனை அமைத்துள்ளனர். அங்கு தினமும் காலை 7 மணி முதல் டிபன் வழங்கப்படுகிறது. வீடுகளில் பெரிதாக யாரும் சமைப்பதில்லை. அந்த உணவை வாங்கி, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, வேலைக்குச் செல்பவர்களுக்குக் கட்டிக் கொடுக்கின்றனர்.
பட்டியில் கால்நடைகளை அடைப்பது போல, டிபன் முடித்து காலை 10 மணியளவில் அந்தந்த பூத்தில் உள்ள பெரும்பாலான வாக்காளர்களை அங்கு திரட்டிவிடுகின்றனர். சிறிது நேரம் தி.மு.க பாடல்கள் ஒலிக்கும். தேநீர், வடை, பஜ்ஜி கொடுக்கப்படும். அதன் பிறகு ஒரு திரைப்படம் போடப்படும். அது முடிந்தவுடன் உணவு இடைவேளை. அங்கேயே மதிய உணவு வழங்கப்படுகிறது. சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மாலை 4.30 – 5 மணியளவில் மீண்டும் அதே பட்டியில் கூடிவிடுகின்றனர். மாலை தேநீர் கொடுத்து, ஒரு திரைப்படம் ஒளிபரப்பப்படும். இரவு உணவுடன் 8 மணியளவில் எண்டு கார்டு போடுகின்றனர். இப்படி சாப்பிட்டு படம் பார்ப்பதற்கு காலை ரூ.500, மாலை ரூ.500 வழங்கப்படுகிறது. பெரும்பாலும் உதயநிதி நடித்த படங்களையே திரையிடுகின்றனர். “கண்ணு, வேற படம் எல்லாம் இல்லையா” என மக்கள் கேட்க, பொங்கல் ரிலீஸ் வாரிசு, துணிவு வரை அனைத்துப் படங்களையும் திரையிட்டுவிட்டனர்.


இந்த டீலிங் பிடித்துப்போகவே, வேலைக்குச் செல்பவர்கள்கூட சிக் லீவ் போட்டுவிட்டு இங்கு அட்டெண்டன்ஸ் போட்டுவிடுகின்றனர். இதன் காரணமாக அங்குள்ள முக்கியத் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விசைத்தறிக் கூடங்களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதிக்கும் கீழே குறைந்துவிட்டதால், ஷிப்ட்டைக் குறைத்து விட்டார்கள். மஞ்சள் மார்க்கெட், சாய, சலவைப் பட்டறைகளிலும், தோல் தொழிற்சாலைகளிலும் பணியாளர்களின் வருகை வெகுவாகக் குறைந்து விட்டது. தேர்தல் முடியும் வரை புதிய ஆர்டர்களைப் பெற ஆலை முதலாளிகள் தயக்கம் காட்டிவருகின்றனர். ஒருநாள் உழைத்துப் பெறும் கூலி, 3 மணி நேரம் சும்மா உட்கார்ந்தாலே கிடைப்பதால், மக்கள் அதை விட்டுத்தரத் தயாராக இல்லை.
இதுதவிர, ஆரத்தி எடுப்பதற்கு எவர்சில்வர் தட்டுடன் ரூ.300 - 500, பூரண கும்ப மரியாதையின்போது எவர்சில்வர் குடத்துடன் ரூ.500 கிடைக்கிறது. தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது சாணம் தெளித்து, கட்சி சின்னத்துடன் கோலம் போட்டால் ரூ.200 – 300 வழங்குகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு கிலோ இறைச்சி, புடவை என்று பரிசுகளைக் குவிக்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பரிசு மழை கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்களுக்கு சரக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இப்படி மொத்தக் கூட்டமும் ‘தேர்தல் வேலை’க்குச் சென்றுவிட்டதால், டீ மாஸ்டருக்குக் கூட பற்றாக்குறை நிலவுகிறது. மார்க்கெட்டில் சுமார் 50 ஆண்டுகளாக இயங்கும் டீக்கடையில்கூட இப்போது கேனில் அடைத்து, தம் டீ தான் விற்கின்றனர். நாள் முழுவதும் வேலை பார்த்தாலும் அங்கு அவருக்கு ரூ.550 தான் சம்பளம். அதுவே தேர்தல் களத்துக்குச் சென்றால் சில மணி நேரத்திலேயே உணவுடன் ரூ.500 – 1,000 வரை சம்பாதிக்க முடிகிறது. பெரும்பாலான தேநீர்க் கடைகளிலும் இதுதான் நிலை.


அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை படையெடுத்துள்ளதால் ரிசார்ட்கள், பண்ணை வீடுகள், லாட்ஜ்கள், வீடுகள் என அனைத்தும் நிரம்பி வழிகின்றன. வீட்டு வாடகை 2-3 மடங்கு உயர்ந்துவிட்டது. ஈரோடு நகருக்குள் வீடு கிடைக்காமல் புறநகர்ப் பகுதிகளை நோக்கிக் கட்சிக்காரர்கள் செல்ல, அங்கும் ஹோட்டல்கள் ஹவுஸ்புல் ஆகிவிட்டன. வீடுகளுக்கு டிமாண்ட் அதிகரிக்கவே, நீண்ட நாள்களாகப் பூட்டிக் கிடக்கும் வீடு, வீட்டில் காலியாக இருக்கும் ஒற்றை அறையைக்கூட அவசர அவசரமாக ரெடி செய்து, ‘வீடு வாடகைக்கு விடப்படும்’ என போர்டு வைத்துள்ளனர். மூன்று தெரு தள்ளியிருக்கும் வீட்டுக்குக்கூட, சுற்றிச் சுற்றி Tolet போர்டை ஒட்டுகின்றனர்.
வெளியூர்க்காரர்களின் படையெடுப்பால், அவர்களுக்கு என எல்லா இடங்களிலும் தனி ரேட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உடைகளை அயர்ன் செய்ய உள்ளூர்க்காரர்களுக்கு ரூ. 10 (குறைந்தபட்சம்), வெளியூர்க்காரர்களுக்கு ரூ.20 (குறைந்தபட்சம்) கட்டணம். சில அசைவ உணவகங்களில் சைடு டிஷ் வாங்கினால்தான் மீல்ஸ் என்று புதிய விதியைப் போட்டுள்ளனர். மட்டன் ஒரு பீஸ் ரூ.100. ஆனால் இரண்டு பீஸ்களைக் கட்டாயப்படுத்தி வைத்துவிட்டு, ரூ.200 பில் போடுகின்றனர். சிங்கிள் பீஸ் கிடையாதாம். சில தேநீர்க் கடைகளில் டீ, காபி உட்பட அனைத்துக்கும் புதிய கட்டணப் பலகையை ஒட்டியுள்ளனர். கருங்கல்பாளையம் பகுதியில் இட்லிக் கடைகள் மிகவும் பிரபலம். அடுத்தடுத்து உள்ள சுமார் 15 இட்லிக் கடைகளில் தேர்தலுக்கு முன்பு தினசரி 30,000 இட்லிகள் விற்பனை செய்யப்பட்டுவந்தன. தற்போது 60,000 இட்லிகள் விற்பனையாகின்றன.

பெட்ரோல் பங்குகளிலும் விற்பனை பல மடங்கு அதிகரித்துவிட்டது. கார் டிரைவர்களுக்கு அதிக அளவு டிமாண்ட் உருவாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடுகிறது. அனைவரும் புத்தம் புது 500 ரூபாய் நோட்டுகளுடன் வருகின்றனர். ஈரோடு நகரில் சில்லறையே கிடைப்பதில்லை. வெளியூர்களில் உள்ள வாக்காளர்களுக்கு இப்போது அப் அண்ட் டவுன் பயணத்துக்கு முன்பதிவு செய்துவிட்டனர்.
கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்காக ஆளும் தி.மு.க இவ்வளவு ஜபர்தஸ்து காட்ட, அடுத்தடுத்த புகார்களால் தி.மு.க-வின் பெரும்பாலான பணிமனைகளைப் பூட்டிவிட்டனர். இதையடுத்து அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு வாக்கு கேட்டு வரும் பகுதியில், அவர் வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு வாகனத்தை வைத்து மக்களை அருகில் உள்ள கொடிவேரி அணை, பவானி ஆறு போன்ற பகுதிகளுக்கு தி.மு.க-வினர் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். அ.தி.மு.க-வினர் வந்து காலியான தெருக்களைப் பார்த்து ஏமாற்றம் அடைகின்றனர். அதேபோல அருகில் உள்ள மண்டபங்கள், மைதானங்களில் தினசரி கலை நிகழ்ச்சி, ரெக்கார்டு டான்ஸ் நடத்து கின்றனர். தி.மு.க அளவுக்கு இல்லையென்றாலும், அ.தி.மு.க-வும் முடிந்தவரை பணத்தை இறக்கிக்கொண்டுதான் இருக்கிறது. சிலர் தி.மு.க கூட்டங்களுக்குச் சென்ற நேரம் போக மீதி நேரம் அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சிகளின் கூட்டங்களுக்குச் செல்கின்றனர். ஆள் பற்றாக்குறை நிலவுவதால் அ.தி.மு.க அங்குள்ள வட இந்தியத் தொழிலாளர்களுக்குப் பணம் கொடுத்துக் கூட்டத்தைத் திரட்டுகிறது.

ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 33 வார்டுகளை முழுமையாகவும், 3 வார்டுகளைப் பகுதியாகவும் உள்ளடக்கியது ஈரோடு கிழக்குத் தொகுதி. 2,27,547 வாக்காளர்கள் உள்ளனர். கிராமங்கள் ஏதும் இல்லாத இந்தத் தொகுதியில் வாரந்தோறும் திங்கள் இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறும் ஜவுளிச் சந்தைக்கு நாடு முழுவதும் இருந்து ஜவுளி வியாபாரிகள் குவிவது வழக்கம். ஈரோட்டு மஞ்சள் தரமானது என்பதால் இதற்கு சர்வதேசச் சந்தையில் மதிப்பு அதிகம். இதை வாங்க ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்குக் கூட்டம் வரும். பெரிய அளவுக்குப் போக்குவரத்து நெரிசல் அல்லாத, ஜவுளிக்கடைகளும் விசைத்தறிகளும் சாயப் பட்டறைகளும்தான் தொகுதியின் அடையாளங்களாக இருந்தன. கடந்த ஒரு மாதத்தில் அவை தலைகீழாக மாறிவிட்டன. சந்துபொந்துகளில்கூட எஸ்.யு.வி கார்களின் படையெடுப்பால் திக்குமுக்காடிப் போயிருக்கிறது ஈரோடு. பொழுது விடிந்து கோழி கூவுகிறதோ இல்லையோ, கரைவேட்டியுடன் ‘வாக்காளப் பெருமக்களே’ எனக் கட்சிக்காரர்கள் களத்தில் இறங்கிவிடுகின்றனர்.
இப்படி ஈரோடு ஒருபக்கம் செழிப்பாக இருந்தாலும், மறுபக்கம் பாதிப்புகளும் இருக்கவே செய்கின்றன. ஈரோட்டு ஜவுளிச் சந்தைக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்த, சில்லறை ஜவுளி வியாபாரிகள் துணி ரகங்களை வாங்கிச் செல்வதற்காக வருவார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்கள் வருவது குறைந்துவிட்டது. சோதனைச் சாவடிக் கெடுபிடிகளே காரணம். அதேபோல விசைத்தறி உட்பட பல துறைகளில் உற்பத்தி வெகுவாகக் குறைந்து காற்று வாங்கிக்கொண்டிருக்கிறது.
அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்வதைத் தன் வீட்டின் முன்பு அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் பேசினோம். “எல்லாம் இந்த ஒரு மாசம்தான். அப்புறம் வாழப்போறது என்னவோ அவிங்க தான் (அரசியல்கட்சிகள்). நாம கடைசிவரை கஞ்சிக்குக் கஷ்டப்பட்டுட்டுதான் இருக்கோணும்” என்றார். அந்தப் பாட்டிக்கு இருக்கும் புரிதல் மொத்த மக்களுக்கும் இருந்தால், வாக்குப்பதிவுக்குப் பிறகும் ஈரோடு கிழக்குத் தொகுதி தனிக் கவனம் ஈர்க்கும்.