
பா.ஜ.க-வுக்கு தெற்கில் கால் பதிக்க வாசல் திறந்துவிட்ட முதல் மாநிலம் கர்நாடகா. இப்போது புதுச்சேரியில் ஆளும் கூட்டணியில் பா.ஜ.க ஓர் அங்கமாக இருந்தாலும், அது குட்டியான யூனியன் பிரதேசம்.
‘விஷப்பாம்பு' என்று பிரதமர் நரேந்திர மோடியை வர்ணிக்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. ‘சோனியா காந்தி விஷ கன்னிகை, ராகுல் காந்தி ஒரு பைத்தியம்' என்கிறார் பா.ஜ.க-வின் கர்நாடக எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல். ஏதோ விட்டலாச்சார்யா படத்தின் காட்சிகள்போல கர்நாடகத் தேர்தல் களம் மாறியிருக்கிறது. இந்த மாற்றம் மட்டுமே இல்லை, விட்டலாச்சார்யா படங்களில் மனிதர்கள் மாயாஜாலத்தில் விலங்குகளாக மாறுவதைப் போல, தேர்தல் நேரத்தில் பலர் கட்சி தாவியிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் வளர்ந்து பா.ஜ.க சார்பில் சில மாதங்கள் கர்நாடக முதல்வராகவே இருந்த ஜெகதீஷ் ஷெட்டர்கூட சீட் மறுக்கப்பட்டதால் அங்கிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்து போட்டியிடுகிறார். முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சாவடி உட்பட நிறைய பேர் பா.ஜ.க-வால் சீட் மறுக்கப்பட்டு இப்படி காங்கிரஸுக்கு வந்து போட்டியிடுகிறார்கள். மே 10-ம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் முடிவு, தேசமே எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது.
இந்தத் தேர்தல் காங்கிரஸுக்கு வாழ்வா, சாவா போராட்டம். பா.ஜ.க-வுக்கு வென்றே ஆகவேண்டிய போர்க்களம். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த ஆண்டு நடைபெறும் சில தேர்தல்களை செமி ஃபைனல் என்று வர்ணிக்கிறார்கள். அதில் கர்நாடகா தேர்தல் முதல் ரவுண்டு, இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய பெரிய மாநிலங்களுக்குத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

பா.ஜ.க-வுக்கு தெற்கில் கால் பதிக்க வாசல் திறந்துவிட்ட முதல் மாநிலம் கர்நாடகா. இப்போது புதுச்சேரியில் ஆளும் கூட்டணியில் பா.ஜ.க ஓர் அங்கமாக இருந்தாலும், அது குட்டியான யூனியன் பிரதேசம். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் இருமுனைப் போட்டிக்கு நடுவே இடமின்றி நசுங்கித் தவிக்கும் பா.ஜ.க., தெலங்கானாவிலும் ஆந்திராவிலும் முக்கிய எதிர்க்கட்சியாக முன்னேறும் முனைப்பில் இருக்கிறது. கர்நாடகாவில் ஆட்சியைத் தக்கவைத்தால்தான் தெற்கில் தங்கள் இருப்பை நிலைநாட்ட அவர்களால் முடியும். இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது என்பதால், கர்நாடகா வெற்றியே தெலங்கானாவில் அவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். நாடாளுமன்றத் தேர்தலிலும் தெற்கிலிருந்து கணிசமான இடங்களைப் பெறும் நம்பிக்கையைத் தரும். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவின் 28 தொகுதிகளில் 25 இடங்களை வென்றது பா.ஜ.க. அப்போது தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைக்கக் காரணமாக இருந்தவர்கள், அந்த 25 எம்.பி-க்கள்தான்! எனவே, கர்நாடகாவை இழக்க அவர்கள் தயாராக இல்லை.
‘பா.ஜ.க-வுக்கு மாற்றாக தேசிய அளவில் ஒரே எதிர்க்கட்சியாக இருப்பது நாங்கள்தான்' என்பதை மற்ற மாநிலக் கட்சிகளிடம் நிரூபிப்பதற்கு காங்கிரஸுக்கு இருக்கும் முதன்மை வாய்ப்பு கர்நாடகா தேர்தல்தான். கர்நாடகாவைத் தொடர்ந்து நடைபெறும் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் தேர்தல்களை எதிர்கொள்ள கட்சிக்கு இதுவே உத்வேகம் கொடுக்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் வெறும் மூன்று மாநிலங்களில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானும் அடக்கம். அங்கு அவர்கள் ஆட்சியை இழந்தால், 2024 தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸின் குரல் சுத்தமாக மங்கிவிடும். கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசத் தேர்தல்கள் இதனால் அந்தக் கட்சிக்கு ரொம்பவே முக்கியம். ராகுல், பிரியங்கா என்று பலரும் தீவிரமாக இங்குவந்து பிரசாரம் செய்கிறார்கள்.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பது பற்றியும், தேர்தல் களத்தில் மதுபானம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுவது பற்றியும் பேசும் ஜனநாயகவாதிகள் பலரும் ‘இது தமிழ்நாட்டின் சாபக்கேடு' என்பார்கள். ஆனால், இந்தியாவிலேயே பணக்காரர்கள் அதிகம் தேர்தல் களம் காண்பது கர்நாடகாவில்தான்! தேர்தல் முறைகேடுகளின்போது அதிகம் பணம் பிடிபடுவதும் அங்குதான். தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளில் அதிகம் தண்டிக்கப்படுவதும் கர்நாடகாவில்தான். தமிழகத்திலாவது தேர்தல் ஆரம்பித்த பிறகுதான் பணம் கொடுப்பார்கள். கர்நாடகாவில் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே பட்டுவாடா ஆரம்பித்துவிடும். இம்முறை அப்படி புடவை, பரிசுப்பொருள்கள் என்று முன்பே ஆர்ப்பாட்டமாகச் செலவழித்துவிட்டு, சீட் கிடைக்காமல் கண்ணீர் விட்டவர்கள் நிறைய பேர்.

காங்கிரஸ் இன்னமும் வலுவாக இருக்கும் வெகு சில மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. கடந்த 1999 முதலே அங்கு 35% வாக்குகளுக்குக் குறைவாக அந்தக் கட்சி பெற்றதில்லை. 2018 தேர்தலில் அது ஆட்சியை இழந்தாலும், முந்தைய தேர்தலைவிட அதிக வாக்குகளே பெற்றிருந்தது. ஒரு பக்கம் பாப்புலர் தலைவரான முன்னாள் முதல்வர் சித்தராமையா, இன்னொரு பக்கம் பணபலமும் செல்வாக்கும் உள்ள டி.கே.சிவகுமார் என்று இரண்டு வலிமையான தளகர்த்தர்கள் கட்சியை வழிநடத்துகிறார்கள். இந்த இருவருக்கும் இடையிலான மோதல் மட்டுமே காங்கிரஸுக்குக் கவலை தரும் ஒரே விஷயம். ஏனெனில், இருவருமே முதல்வர் நாற்காலிக் கனவுடன் இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த மாநிலத்துக்காரர்தான். ஆனால், அவர் ‘நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை' என்று இப்போதே சொல்லிவிட்டார்.
கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்துகளை பா.ஜ.க-வின் ஓட்டு வங்கியாக மாற்றி வைத்திருந்தார் எடியூரப்பா. அந்தச் சமூகத்தில் முக்கியமான தலைவர்கள் யாருமின்றி காங்கிரஸ் தடுமாறிவந்தது. ஜெகதீஷ் ஷெட்டரை வைத்து அதை ஈடுசெய்யப் பார்க்கிறது காங்கிரஸ். பலருக்கு சீட் தராதது. எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது என்று லிங்காயத்துகளுக்கு எதிராக பா.ஜ.க மாறிவிட்டதாகவும் பிரசாரம் செய்கிறது காங்கிரஸ். எப்போதும் இல்லாத அளவுக்கு 51 தொகுதிகளில் லிங்காயத் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது காங்கிரஸ்.

வேறெங்கும் இல்லாத அளவுக்கு களத்தில் தொடங்கி சோஷியல் மீடியா வரை சமபலத்துடன் பா.ஜ.க-வை இங்கு எதிர்கொள்கிறது காங்கிரஸ். மாநில அரசின் ஊழலையே பிரதானப்படுத்தி காங்கிரஸின் பிரசாரம் இருக்கிறது. அந்தப் பிரசாரம் மக்களிடம் எடுபடவும் செய்கிறது. எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் மோடி அங்கு பிரசாரத்துக்குப் போனால், அதைத் தனது தேர்தலாக மாற்றிவிடுவார். மோடி அளவுக்குச் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் இல்லாத நிலையில் காங்கிரஸ் திணறும். ஆனால், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் அப்படி மோடியை ஹைஜாக் செய்யவிடாமல், ஒரு மாநிலத்தின் முடிவைத் தீர்மானிக்கும் தேர்தலாக இதைக் காட்டுவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். பல்வேறு இலவசத் திட்டங்களுக்கான வாக்குறுதி, ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்து நிறுத்துவது என்று பெரிய அதிருப்திகள் ஏதும் இல்லாமல் சாமர்த்தியமாகத் தேர்தலைச் சந்திக்கிறது காங்கிரஸ். பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகச் சொல்கின்றன.

பா.ஜ.க இதற்குமுன்பு ஒன்பது ஆண்டுகள் கர்நாடகாவில் ஆட்சி செய்தாலும், ஒருமுறைகூட அந்தக் கட்சி அங்கு தனிப் பெரும்பான்மை பெற்றதில்லை. 224 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட சட்டமன்றத்தில் 110 இடங்களை வென்றதுதான் பா.ஜ.க-வின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. கடந்த முறைகூட ‘ஆபரேஷன் தாமரை' என்று மாற்றுக்கட்சிகளிலிருந்து பலரை இழுத்துவந்தே காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தது. இம்முறை ஆட்சிக்கு எழுந்திருக்கும் அதிருப்தியைத் தணிக்க 80 இடங்களில் புதுமுகங்களை நிறுத்தியிருப்பது, பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை அதிகரித்தது, இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அதை லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிக சமூகங்களுக்குக் கொடுத்தது என்று பல அம்சங்களை நம்பி நிற்கிறது பா.ஜ.க.
வாரிசு அரசியலை மேடைகள் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்கிறார்கள் பா.ஜ.க தலைவர்கள். கர்நாடகாவில் பா.ஜ.க அளவுக்கு வாரிசுகளுக்கு சீட் கொடுத்த கட்சி வேறெதுவும் இல்லை. கர்நாடகத் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தும், இலவசங்களை வாக்குறுதிகளாக அளிக்கும் கட்சிகளைச் சாடினார் பிரதமர் மோடி. ஆனால், ஆண்டுக்கு மூன்று முறை இலவச காஸ் சிலிண்டர், தினமும் அரை லிட்டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம் என்று ஏராளமான வாக்குறுதிகளைத் தந்திருக்கிறது பா.ஜ.க தேர்தல் அறிக்கை. முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்தாலும், சீனியர் தலைவர் எடியூரப்பா வழிகாட்டுதலில்தான் தேர்தலைச் சந்திக்கிறது அந்தக் கட்சி. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வீதிகளில் நடந்து பிரசாரம் செய்கிறார் மோடி. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல மாநில முதல்வர்கள் என்று பெரும்படையே களத்தில் இறங்கியிருக்கிறது. கர்நாடகாவின் ஒவ்வொரு பகுதிக்கும் பிரத்யேக குணங்கள் உண்டு. பெங்களூரு, தெற்குக் கர்நாடகா, கடலோரக் கர்நாடகா, மத்திய கர்நாடகா, பம்பாய் கர்நாடகா, ஹைதராபாத் கர்நாடகா என ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விஷயங்கள் தேர்தலைத் தீர்மானிக்கும். இதை அடிப்படையாக வைத்து பிரசார யுக்திகளை வகுக்கிறது பா.ஜ.க.

இந்த இரண்டு கட்சிகள் இல்லாமல், மதச்சார்பற்ற ஜனதா தளமும் களத்தில் இருக்கிறது. கடைசியாக 94-ம் ஆண்டில் இந்தக் கட்சி தனிச் செல்வாக்குடன் ஆட்சியைப் பிடித்து தேவ கவுடா முதல்வரானார். காங்கிரஸ், பா.ஜ.க என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத முடிவு வரும்போது, கிங் மேக்கராக உருவெடுப்பார் இந்தக் கட்சியின் தலைவரும் தேவ கவுடாவின் மகனுமான ஹெச்.டி.குமாரசாமி. கடந்த 2006 தேர்தலில் வெறும் 58 இடங்களை வென்றிருந்தாலும், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து அவர் முதல்வரானார். 2018 தேர்தலில் 40 இடங்களை மட்டுமே பிடித்து, காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வரானார். இரண்டு முறையும் அவரால் நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்க முடியவில்லை என்பது வேறு விஷயம். மைசூர் வட்டாரத்தில் இந்தக் கட்சிக்குச் செல்வாக்கு அதிகம். குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இந்தக் கட்சியின் செல்வாக்கை மங்கச் செய்திருந்தது. இம்முறை குடும்பத்தினருக்கு பெரிதாக சீட் கொடுக்காமல், ‘‘நாங்கள் கிங் மேக்கர் இல்லை. நாங்கள்தான் கிங்'' என்று களத்தில் நிற்கிறார் குமாரசாமி. இம்முறை ஒருவேளை எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் குமாரசாமிக்கு டிமாண்ட் அதிகமாகிவிடும்.
மே 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது பா.ஜ.க-வின் தெற்கு வாசல் மூடப்படுகிறதா, அல்லது யாரை முதல்வராகத் தேர்வு செய்வது என்ற போர் காங்கிரஸில் ஆரம்பிக்கப்போகிறதா, அல்லது வெறும் 40 இடங்களைக்கூடப் பிடிக்காத குமாரசாமிக்கு முதல்வர் வாய்ப்பை ஏதோ ஒரு பெரிய கட்சி தரப்போகிறதா என்பது தெரிந்துவிடும்.