Published:Updated:

‘மேயர் நாற்காலி குஸ்தி’ - மல்லுக்கட்டும் அமைச்சர்கள்! - பரபர க்ளைமாக்ஸ்

மல்லுக்கட்டும் அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மல்லுக்கட்டும் அமைச்சர்கள்

தேர்தல் களத்தில், தலைநகர் தி.மு.க-வினரிடமிருக்கும் வேகத்தை அ.தி.மு.க-வினரிடம் பார்க்க முடியவில்லை.

‘மேயர் நாற்காலி குஸ்தி’ - மல்லுக்கட்டும் அமைச்சர்கள்! - பரபர க்ளைமாக்ஸ்

தேர்தல் களத்தில், தலைநகர் தி.மு.க-வினரிடமிருக்கும் வேகத்தை அ.தி.மு.க-வினரிடம் பார்க்க முடியவில்லை.

Published:Updated:
மல்லுக்கட்டும் அமைச்சர்கள்
பிரீமியம் ஸ்டோரி
மல்லுக்கட்டும் அமைச்சர்கள்

உள்ளாட்சித் தேர்தலில் பரபர க்ளைமாக்ஸ் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகளைக் கைப்பற்ற நடக்கும் மும்முரங்களால் ரணகளமாகியிருக்கிறது தேர்தல் களம். நட்பு, உறவு, பகை, பணம், ஈகோ, அதிகாரம், தொகுதி செல்வாக்கு... என இந்நாள், முன்னாள் அமைச்சர்களின் மல்லுக்கட்டுகளால் களத்தில் அனல் பறக்கிறது. தமிழகத்திலிருக்கும் 21 மாநகராட்சிகளும் அரசியல் முட்டலும் மோதலுமாகப் பரபரக்கின்றன!

சேகர் பாபு Vs மா.சுப்பிரமணியன் - தகிப்பில் தலைநகர்!

2021 சட்டமன்றத் தேர்தலின்போது, சென்னைக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றதால், அக்கட்சியின் சார்பில் களமிறங்கியிருக்கும் வார்டு வேட்பாளர்களிடம் உற்சாகத்துக்குக் குறைவில்லை. தி.மு.க தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தனசேகரன், மகேஷ், மாநில மாணவரணி துணைச் செயலாளர் கவி கணேசன், சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு எனக் கட்சியின் முக்கியப் புள்ளிகள் பலரும் களம் காண்பதால், சென்னை தி.மு.க-வில் அனல் பறக்கிறது.

நம்மிடையே பேசிய தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், “மேயர் பதவியை அமைச்சர் சேகர் பாபுவும், துணை மேயர் பதவியை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர். இவர்கள் கைகாட்டும் நபர்களுக்குத்தான் பதவி கிடைக்கவிருக்கிறது. மேயர் பதவி, பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், தன் சார்பில் மூன்று பேரை மேயருக்கான ரேஸில் நிற்கவைத்திருக்கிறார் சேகர் பாபு. கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 70-வது வார்டு வேட்பாளர் ஸ்ரீதணி, 183-வது வார்டில் போட்டியிடும் பாலவாக்கம் தமிழரசி சோமு, 17-வது வார்டில் போட்டியிடும் கவிதா நாராயணன் ஆகியோர் மேயர் நாற்காலிக்கான போட்டியில் இருக்கிறார்கள். இவர்களில் யார் மேயராக வந்தாலும், தன் கட்டுக்குள் மாநகராட்சியை வைத்துக்கொள்ள வேண்டுமென்பதில் தீர்மானமாக இருக்கிறார் சேகர் பாபு.

இதற்கு செக் வைக்க வேண்டுமென்பதற்காகவே, துணை மேயர் பதவிக்கு, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிற்றரசுவை சிபாரிசு செய்திருக்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு மிக நெருக்கமானவர் சிற்றரசு. சமீபகாலம் வரையில், தன்னை எதிர்த்து அரசியல் செய்த எழும்பூர் பரந்தாமனைத் தன் பராக்கிரமத்தால் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார் சேகர் பாபு. ஆனால், சிற்றரசுவிடம் அவரது அரசியல் செல்லுபடியாகாது. சேகர் பாபு எகிறினால், ‘நீங்களும் மாவட்டச் செயலாளர். நானும் மாவட்டச் செயலாளர். அமைச்சர் பதவி மட்டும்தான் மிஸ்ஸிங்’ என்று சிற்றரசு தரப்பு எதிர்த்து நிற்கும். இதனால்தான், அவர் பெயரை, துணை மேயர் பதவிக்கு சிபாரிசு செய்திருக்கிறார் மா.சு. இதற்கு பதிலடியாக, மா.சு-வுக்கு எதிர்க் கோஷ்டியான தலைமைச் செயற்குழு உறுப்பினர் சைதாப்பேட்டை மகேஷ், அண்ணாநகர் ராமலிங்கம், விருகம்பாக்கம் தனசேகரன் ஆகியோரைத் துணை மேயர் பதவிக்குத் தூண்டிவிடுகிறது சேகர் பாபு தரப்பு. அமைச்சர்கள் இருவருக்கும் இடையிலான மல்லுக்கட்டு யுத்தம் உச்சகட்டத்தை நோக்கி நகர்வதால், சென்னை தி.மு.க ரொம்பவே சூடாக இருக்கிறது” என்றனர்.

தேர்தல் களத்தில், தலைநகர் தி.மு.க-வினரிடமிருக்கும் வேகத்தை அ.தி.மு.க-வினரிடம் பார்க்க முடியவில்லை. மாவட்டச் செயலாளர்கள் ஜெயக்குமார், கே.பி.கந்தன், ஆதிராஜாராம் மட்டுமே களத்தில் சுற்றிச் சுழல்கிறார்கள். மேயர், துணை மேயர் வேட்பாளர் குறித்த முன்முடிவுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. நம்மிடம் பேசிய மத்திய சென்னை அ.தி.மு.க மாவட்டப் பிரமுகர் ஒருவர், “சென்னை அ.தி.மு.க-வில் புதிதாக உருவாகியிருக்கும் ஐவரணி, ஆளுங்கட்சியுடன் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி போட்டுக்கொண்டுவிட்டது. தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகளில், மக்களுக்கு அறிமுகமில்லாதவர்களை அ.தி.மு.க சார்பாகக் களமிறக்கியிருக்கிறது இந்த ஐவரணி. சென்னையிலுள்ள 120 வார்டுகளிலும் இப்படித்தான் டீல் போடப்பட்டு சீட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சென்னை அ.தி.மு.க-வில் என்ன நடக்கிறது என்பதே அ.தி.மு.க தலைமைக்குத் தெரிவதில்லை” என்றார்.

சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, கே.என்.நேரு,  கீதா ஜீவன், ஐ.பெரியசாமி,  அனிதா ராதாகிருஷ்ணன்
சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, கீதா ஜீவன், ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன்

தலைக்கு மேல் கத்தி... தவிப்பில் செந்தில் பாலாஜி!

கோவை மாநகராட்சி மேயர் ரேஸ் குறித்து தி.மு.க-வினரிடம் விசாரித்தால், ஒரு பெரிய பட்டியலை எடுத்து நீட்டுகிறார்கள். முன்னாள் கவுன்சிலர் மீனா லோகு, மாவட்டப் பொறுப்பாளர் கார்த்திக்கின் மனைவி லக்குமி இளஞ்செல்வி, மற்றொரு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா சேனாதிபதி என்று நீள்கிறது அந்தப் பட்டியல். மேயர் ரேஸில் பலர் இருந்தாலும், மாவட்டத்துக்குப் பொறுப்பாளரான அமைச்சர் செந்தில் பாலாஜி அது குறித்து வாயே திறப்பதில்லை. சமீபத்தில் தான் நடத்திய ரகசியக் கூட்டத்தில்கூட, வார்டுகளில் வெற்றிபெறுவதற்கான வியூகங்களை மட்டுமே பேசியுள்ளார். நம்மிடம் பேசிய கோவை மாநகர் மாவட்ட தி.மு.க பிரமுகர்கள் சிலர், “கட்சிக்குள்ளேயே பல பஞ்சாயத்துகளால், தன் தலைக்கு மேல் கத்தி தொங்கிட்டிருக்குறது அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தெரியும். இங்க கரூர்க்காரங்கதான் எல்லாச் செலவையும் பார்க்குறாங்க. இது லோக்கல் தி.மு.க-காரங்களுக்குப் பிடிக்கலை. ஒருவேளை மாநகராட்சி அ.தி.மு.க வசம் போயிடுச்சுனா, அந்தப் பழியை செந்தில் பாலாஜி மேல தூக்கிப்போடுறதுக்கு ஒரு குரூப் தயாராக இருக்கு. ‘என்ன செஞ்சாவது கோவையை நாம பிடிச்சாகணும்’னு ஆட்சி மேலிடம் உத்தரவிட்டிருக்கிறதால, செந்தில் பாலாஜி நெருக்கடியில இருக்கார்” என்றனர்.

அ.தி.மு.க-வில் மேயர் பதவிக்கான ரேஸில், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரின் மனைவி ஷர்மிளாவின் பெயர் தீவிரமாக அடிபட்டது. தற்போது, புறநகர் வடக்கு மாவட்டம் எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளர் செந்தில் கார்த்திகேயனின் மனைவி கிருபாலினியின் பெயரும் பரிசீலனைக்கு வந்திருக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில், பி.ஆர்.ஜி அருண்குமார் வெற்றிக்கு, பொருளாதாரரீதியாகப் பக்கபலமாக நின்றவர் செந்தில்தான். அவரின் சிபாரிசில்தான் கிருபாலினி மேயர் ரேஸில் நிற்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இது சந்திரசேகர் தரப்பைக் கடுப்பாக்கியிருக்கிறது. ‘கட்சிக்குச் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக, சந்திரசேகர் - செந்தில் ஆகிய இருவரையும் வேலுமணி கொம்பு சீவிவிடுகிறார். கட்சி வெற்றிபெறும் பட்சத்தில், சூழ்நிலையைப் பொறுத்து இருவரில் ஒருவர் மேயராகலாம். மாநகராட்சி தி.மு.க வசம் போய்விடக் கூடாது என்பதற்காகச் சகல வித்தைகளுக்கும் வேலுமணி தயாராகிவிட்டார்’ என்கிறது கோவை அ.தி.மு.க.

அதிகாரத்தைத் தக்கவைக்குமா சேலம்? - அக்னிப் பரீட்சையில் நேரு

கிட்டத்தட்ட கோவை கதைதான் சேலத்திலும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதாலும், சேலம் மாவட்டத்தில் தி.மு.க-வுக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே இருப்பதாலும், சேலம் மாநகராட்சியின் மேயர் பதவிக்குத் தீவிரமாக முயல்கிறது தி.மு.க. இந்த ரேஸில், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.டி.கலையமுதன், மாநகரச் செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் துணை மேயர் பன்னீர்செல்வம், 2014 சேலம் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட உமாராணி ஆகியோர் தீவிரமாக இருக்கின்றனர். இதில் கலையமுதன் 80 வயதை எட்டியவர் என்பதால், மேயர் வாய்ப்பு குறைவுதான் என்கிறார்கள். அ.தி.மு.க-வில் சேலம் மாநகர் மாவட்ட இணைச் செயலாளர் ஏ.இ.சுகுமார் தன் மகள் ரம்யாவை மேயர் ரேஸில் களமிறக்கியிருக்கிறார். சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலமும் தன் மகன் ஜனார்த்தனனுக்காக மேயர் பதவிக்குக் காய்நகர்த்துவதால், அ.தி.மு.க முகாமும் பரபரக்கிறது. சொந்த மாவட்டம் என்பதால், சேலம் மாநகராட்சியில் அ.தி.மு.க வெற்றிவாகை சூடும் என்ற அதீத நம்பிக்கையில் இருக்கிறார் எடப்பாடி.

சூரமங்கலம் பகுதிச் செயலாளர் ஏ.கே.எஸ்.எம்.பாலு, முன்னாள் சூரமங்கலம் பகுதிச் செயலாளர் தியாகராஜன், முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜ் மனைவி கோகிலவாணி ஆகியோரும் மேயர் அல்லது துணை மேயர் என ஏதாவது ஒரு பதவியை வாங்கிவிட வேண்டுமென எடப்பாடியார் வீட்டுக்கு நடையாக நடக்கின்றனர். இந்த ரணகளத்தில், அமைச்சர் நேருவின் பாடுதான் திண்டாட்டமாகியிருக்கிறது. சேலம் மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர். இங்கு நேரு வெற்றியைத் தேடித் தரவில்லையென்றால், அவரது ஆதாரமான திருச்சியிலேயே அவருக்குச் சிக்கலாகிவிடும் என்கிறார்கள் சீனியர் தி.மு.க-வினர்.

திருச்சி மாவட்ட தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “கட்சி மேலிடத்திடம் பேசி, திருச்சி மேயர் பதவியைத் தன் ஆதரவாளர் அன்பழகனுக்குத் தருவது என்பதில் உறுதியாக இருக்கிறார் நேரு. துணை மேயர் பதவிக்குத்தான் குஸ்தி நடக்கிறது. இந்தப் பதவிக்கு, மாவட்டத் துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ் ஆகியோரை நேரு முன்வைக்கிறார். தன் ஆதரவாளரான மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் மதிவாணனைத் துணை மேயராக்க அமைச்சர் அன்பில் மகேஷ் காய்நகர்த்துகிறார். ஆனால், மதிவாணனுக்கு அப்பதவியைக் கொடுக்க நேருவுக்கு விருப்பமில்லை. இந்தக் குழப்பத்துக்கிடையேதான், சேலத்தில் முகாமிட்டு தி.மு.க வெற்றிக்காக உழைக்கிறார் நேரு. சேலம் மாநகராட்சி அ.தி.மு.க வசம் சென்றுவிட்டால், அதையே காரணமாகவைத்து திருச்சியில் நேருவின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கக் காத்திருக்கிறது அன்பில் மகேஷ் தரப்பு. இந்த உள்ளாட்சித் தேர்தல், ஒருவகையில் நேருவுக்கு அக்னிப் பரீட்சைதான்” என்றனர்.

எஸ்.பி.வேலுமணி, எஸ்.பி.சண்முகநாதன், செல்லூர் ராஜு
எஸ்.பி.வேலுமணி, எஸ்.பி.சண்முகநாதன், செல்லூர் ராஜு

யாருக்குத் திருப்பம் தரும் திண்டுக்கல்? - தூத்துக்குடி ஈகோ பஞ்சாயத்து!

திண்டுக்கல் மாநகராட்சி மேயராகிவிடும் எண்ணத்திலிருந்தார் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகள் மெர்சி செந்தில்குமார். அதற்கு மாமனார் தடைபோட்டுவிட்டதால், தற்போது தனது ஆதரவாளர் ஜெயக்குமாரின் மனைவி ஸ்வாதியை மேயர் ரேஸில் களமிறக்கியிருக்கிறார் மெர்சி. “ஸ்வாதிக்கு மேயர் பதவி கிடைத்தால், அவரை டம்மியாக்கிவிட்டு ஆக்டிங் மேயராக வலம்வருவதே மெர்சியின் திட்டம்” என்கிறார்கள் தி.மு.க மாவட்டப் பிரமுகர்கள். முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள் சந்திரசேகரனின் மருமகள் சரண்யா, பெருமாள்சாமியின் மனைவி சாந்தி ஆகியோரும் மேயர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வசம் சென்றதையே அமைச்சர் ஐ.பெரியசாமியால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், மாநகராட்சியைப் பிடித்து தி.மு.க தலைமைக்குத் தன் பலத்தைக் காட்டுவதென தீர்மானமாக இருக்கிறார். “மாநகராட்சியைப் பிடிச்சாதாம்ப்பா, வேற துறைக்கு அமைச்சரா மாத்தித் தரச்சொல்லி உரிமையா கேட்கலாம். இல்லைனா கடைசிவரைக்கும் கூட்டுறவுத்துறையில உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்” என்று தன் ஆதரவாளர்களை விரட்டி வேலை வாங்குகிறார் பெரியசாமி. ஆனால், தி.மு.க-வை வீழ்த்தியே தீர வேண்டும் எனக் களத்தில் மும்முரம் காட்டுகின்றனர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், முன்னாள் மேயர் மருதராஜுவும். திண்டுக்கல் யாருக்குத் திருப்பம் தருமோ!

தூத்துக்குடியில் அமைச்சர்கள் கீதா ஜீவனுக்கும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் இடையிலான ‘ஈகோ’ பஞ்சாயத்து ஊரறிந்த விஷயம். அனிதா மீதான அமலாக்கத்துறை வழக்கையே டெல்லி வரை அழுத்தம் கொடுத்து விசாரிக்கக் காரணமாக இருந்தது கீதா தரப்புதான் எனப் பேசப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ரேஸில், தன் தம்பி ஜெகனை முன்னிலைப் படுத்துகிறார் அமைச்சர் கீதா ஜீவன். துணை மேயர் பதவிக்கான ரேஸில், ஜெகனின் ஆதரவாளர் நிர்மல்ராஜ் முன்னணியில் இருக்கிறார். இப்படி மேயர், துணை மேயர் பதவிகள் இரண்டுமே கீதா ஜீவனின் ஆட்களுக்குச் செல்லும் எனக் கருதப்படுவதால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் அதிகாரம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜா, மேயர் பதவிக்கான ரேஸில் இருக்கிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க-வில் வேறு பவர் சென்டர்கள் இல்லை என்பதால், தனி ஆவர்த்தனம் காட்டுகிறார் ராஜா. துணை மேயர் பதவிக்கான ரேஸில், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணிச் செயலாளர் வீரபாகு, மாவட்ட இளம்பெண்கள் பாசறையின் செயலாளர் தன்ராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளர் டேக்ராஜா ஆகியோர் இருக்கிறார்கள். தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயலுக்கு சீட் மறுக்கப்பட்டிருப்பதால், அவர் தரப்பு வருத்தத்தில் இருக்கிறது. ஆனாலும், அதிகாரம் தங்கள் வசமிருப்பதால் தெம்பாக இருக்கிறது கீதா ஜீவன் தரப்பு.

‘மேயர் நாற்காலி குஸ்தி’ - மல்லுக்கட்டும் அமைச்சர்கள்! - பரபர க்ளைமாக்ஸ்

மியூசிக்கல் சேர் ஓட்டத்தில் மதுரை!

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கத்தின் மருமகள் விஜய மௌசிமிதான், மதுரை மேயர் வேட்பாளர் என்கிறார்கள் கட்சியின் சீனியர்கள். இதற்கு முட்டுக்கட்டை போடும்விதமாக அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்டச் செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன் ஆகியோர் பல வேலைகளைச் செய்வதால், `திகுதிகு’ அரசியலில் சிக்கியிருக்கிறது தூங்கா நகரம். இதற்கிடையே, தங்கம் தென்னரசுவின் ஆதரவுபெற்ற ரோகினி பொம்மதேவன், அமைச்சர் பி.மூர்த்தி ஆதரவுபெற்ற முன்னாள் கவுன்சிலர் சசிகுமாரின் மனைவி வாசுகி, இந்திராணி பொன் வசந்த், அமைச்சர் பி.டி.ஆர் ஆதரவுபெற்ற பாமா முருகன், கோ.தளபதி ஆதரவுபெற்ற இந்திராகாந்தி ஆகியோரும் மேயர் நாற்காலியைச் சுற்றிவருகிறார்கள். துணை மேயர் பதவிக்கு ஆரப்பாளையம் ஜெயராமன், எஸ்ஸார் கோபியின் தம்பி போஸ் முத்தையா, வி.கே. குருசாமியின் உறவினர் முகேஷ் ஷர்மா உள்ளிட்ட சிலர் காய்நகர்த்து கிறார்கள். மதுரை தி.மு.க-வுக்குள் ‘மியூசிக்கல் சேர்’ கேம் களைகட்டு வதால், பரபரப்பு எகிறியிருக்கிறது.

அ.தி.மு.க-வில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஆதரவாளரும், முன்னாள் மண்டலத் தலைவருமான சண்முகவள்ளியின் பெயர் மேயர் பதவிக்குப் பலமாக அடிபடுகிறது. முன்னாள் கவுன்சிலர் சுகந்தி அசோக், ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர் சண்முகப்ரியா ஹோசிமின் ஆகியோரும் மேயர் நாற்காலிக்குக் குறிவைத்திருக்கிறார்கள். துணை மேயர் பதவிக்கு செல்லூர் ராஜூவின் ஆதரவாளர் சோலைராஜா, ராஜன் செல்லப்பாவின் ஆதரவாளர் ஜெயவேல், ஆர்.பி.உதயகுமாரின் ஆதரவாளர் சாலை முத்து ஆகியோர் முட்டி மோதுவதால், அ.தி.மு.க முகாமும் களைகட்டுகிறது.

கழகங்களின் மாவட்டச் செயலாளர்களும் மாவட்டப் பொறுப்பு (இந்நாள், முன்னாள்) அமைச்சர்களும், ‘உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி என்பது தங்களது அடிப்படை அதிகாரத்துக்கான அஸ்திவாரம்’ என்றே பார்க்கிறார்கள். எனவேதான், இந்த அதிகாரத்தைத் தக்கவைக்க மேயர், துணை மேயர் நாற்காலிகளுக்கான போட்டி இவர்களுக்குள் கடுமையாகியிருக்கிறது. மார்ச் 4-ம் தேதி மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்குள் இந்த அதிகாரப் போட்டி... பேரங்கள், அணித் தாவல்கள், கூவத்தூர் எபிசோட்ஸ் என உச்சமடையும்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

****

இதர மாநகராட்சிகள் நிலை என்ன?

ஆவடி, தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கரூர், கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், வேலூர், திருநெல்வேலி, சிவகாசி ஆகிய மாநகராட்சிகளில் ஒப்பீட்டளவில் பஞ்சாயத்துகள் குறைவு. நாகர்கோவில் மாநகராட்சியில் தி.மு.க - அ.தி.மு.க - பா.ஜ.க என்கிற முக்கோணப் போட்டி நிலவுகிறது. மாநகராட்சியை எப்படியாவது வென்று, அதன் மூலம் வேறொரு துறையை வாங்கிவிடும் முனைப்பிலிருக்கிறார் மாவட்ட அமைச்சரான மனோ தங்கராஜ். திருப்பூர், ஈரோடு மாநகராட்சிகளில் அமைச்சர்கள் முத்துசாமி, வெள்ளக்கோயில் சாமிநாதன் ஆகியோர் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். அ.தி.மு.க முகாமும் சம பலத்தில் மோதுவதால் போட்டி கடுமையாகியிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism