Published:Updated:

சரிவில் காங்கிரஸ்... நெருக்கடியில் பா.ஜ.க... சூடுபிடிக்கும் ராஜஸ்தான் அரசியல் களம்!

அசோக் கெலாட்
பிரீமியம் ஸ்டோரி
அசோக் கெலாட்

ராஜஸ்தான் அரசின் முதன்மைச் செயலாளரான குல்தீப் ரங்கா, முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், ராஜஸ்தான் அரசில் சக்திவாய்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

சரிவில் காங்கிரஸ்... நெருக்கடியில் பா.ஜ.க... சூடுபிடிக்கும் ராஜஸ்தான் அரசியல் களம்!

ராஜஸ்தான் அரசின் முதன்மைச் செயலாளரான குல்தீப் ரங்கா, முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், ராஜஸ்தான் அரசில் சக்திவாய்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

Published:Updated:
அசோக் கெலாட்
பிரீமியம் ஸ்டோரி
அசோக் கெலாட்

காங்கிரஸ் கட்சியும், உட்கட்சிப்பூசல்களும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் எனலாம். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உட்கட்சிப்பூசல்களால் பெரும் சரிவைச் சந்தித்துவருகிறது அந்தக் கட்சி. அந்தச் சரிவிலிருந்து கட்சியை மீட்டெடுப்பதற்காக, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் `சிந்தனை அமர்வு மாநாடு’ ஒன்றைச் சமீபத்தில் நடத்தியது கட்சித் தலைமை. ஆனால், அந்த ராஜஸ்தான் மாநிலத்திலேயே, சொந்தக் கட்சியினரே முதலமைச்சரை விமர்சிக்கும் அளவுக்கு மோதல்கள் அதிகரித்திருக்கின்றன. இதனால், ஆட்சியிலிருக்கும் இரண்டு மாநிலங்களில், ஒன்றை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது காங்கிரஸ். இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கி 2023 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. இருந்தும், அந்தக் கட்சிக்குள்ளும் பல்வேறு சிக்கல்கள் நீடித்துவருகின்றன. ராஜஸ்தான் அரசியல் களம் எப்படியிருக்கிறது?

சரிவில் காங்கிரஸ்... நெருக்கடியில் பா.ஜ.க... சூடுபிடிக்கும் ராஜஸ்தான் அரசியல் களம்!

சரிவைச் சந்திக்கும் காங்கிரஸ்!

2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 200 தொகுதிகளில், 100 தொகுதிகளைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. 13 சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள், மூன்று ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், ஒரு ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் எம்.எல்.ஏ ஆகியோரின் ஆதரவோடு ஆட்சியமைத்தது. 2019 செப்டம்பரில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ-க்கள் காங்கிரஸுக்குத் தாவினர். தொடர்ந்து, 2021-ல் நடந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வென்றதால், சட்டசபையில் 108-ஆக உயர்ந்தது காங்கிரஸின் பலம். இதற்கிடையில், 2020-ம் ஆண்டு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் மோதல் ஏற்பட, பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அதன் பிறகு, அங்கு ஆட்சி கவிழும் சூழல் உருவாகவே, கட்சித் தலைமை தலையிட்டு இந்தப் பிரச்னையைச் சரிசெய்தது.

தற்போது மீண்டும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே புகைச்சல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இந்த மே மாதத்தில் மட்டும் அமைச்சர் உட்பட சில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இந்த மாதத் தொடக்கத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான திவ்யா மஹிபால், நீர்வளத்துறை அமைச்சர் மகேஷ் ஜோஷியைச் சட்டமன்றத்திலேயே எச்சரித்தது அதிர்வலைகளை உண்டாக்கியது. ``நான் மக்களுக்காகச் சேவை செய்யத்தான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் (மகேஷ் ஜோஷி) தொடர்ந்து மாநிலத்தின் தண்ணீர்ப் பிரச்னைக்கு இப்படியே தீர்வு காணாமலிருந்தால், உங்களுக்கு எதிராகப் பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்வேன்’’ என்றார் திவ்யா.

கடந்த வாரம், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான கணேஷ் கோக்ரா (Ganesh Ghogra), தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் அசோக் கெலாட்டுக்குக் கடிதம் அனுப்பினார். போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகத் தன்மீது எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டதை அடுத்து, ``உள்ளூர் அரசு அதிகாரிகளால் எனது குரல் நசுக்கப்படுகிறது’’ என்று அரசு மீதான அதிருப்தியை ராஜினாமா கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

சரிவில் காங்கிரஸ்... நெருக்கடியில் பா.ஜ.க... சூடுபிடிக்கும் ராஜஸ்தான் அரசியல் களம்!

இதையடுத்து மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான ராஜேந்திர சிங், முதலமைச்சர்மீது குற்றம் சுமத்தி வீடியோ வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். அந்த வீடியோவில், ``ரீட் தேர்வின் (REET - ராஜஸ்தானில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு) கேள்வித்தாள் கசிந்தது தொடர்பான வழக்கை விசாரிக்க முதலமைச்சர் பயப்படுகிறார். விசாரித்தால், அவரது அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களே சிறைக்குச் செல்ல நேரிடும்’’ என்று பேசியிருக்கிறார்.

மார்ச் 26 அன்று, அசோக் கெலாட் அமைச்சரவையின் முக்கிய அமைச்சரான அசோக் சந்தா, மற்றொரு பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறார். விளையாட்டு, இளைஞர் நலன், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருக்கும் அசோக் சந்தா, ``என்னை இந்தக் கொடூரமான அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, எனது துறைகளின் அனைத்துப் பொறுப்புகளையும் அதிகாரி குல்தீப் ரங்காவிடம் கொடுத்துவிடுங்கள். இப்போது அவர்தான் அமைச்சர்போலச் செயல்படுகிறார்’’ என்றிருந்தார்.

ராஜஸ்தான் அரசின் முதன்மைச் செயலாளரான குல்தீப் ரங்கா, முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், ராஜஸ்தான் அரசில் சக்திவாய்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. அவர்மீது அமைச்சர் ஒருவர் வெளிப்படையாகக் குற்றச்சாட்டு வைத்திருப்பது ராஜஸ்தான் அரசியலில் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. இது பற்றி ஊடகங்களிடம் பேசிய அசோக் கெலாட், ``அவர் டென்ஷனில் இப்படிச் சொல்லியிருப்பார். இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது’’ என்று சமாளித்திருந்தார். ஆனால், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான பா.ஜ.க தீவிரமாகக் கையிலெடுத்திருப்பது அசோக் கெலாட்டுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

பா.ஜ.க-வுக்கும் நெருக்கடி!

2013 சட்டமன்றத் தேர்தலில், 163 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க., கடந்த தேர்தலில் 90 இடங்கள் சறுக்கி 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றிகண்டு எதிர்க்கட்சியானது. பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளில் பலமுறை ஈடுபட்டும் பலனில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியினரே அரசுமீது அதிருப்தி தெரிவித்திருப்பதைத் தங்களுக்குச் சாதமாக்கி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் முனைப்பிலிருக்கிறது பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க-வுக்குள்ளும் பல பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் ஒருபக்கம் சண்டைகள் நடந்துகொண்டிருக்க, மூத்த தலைவர்களிடையே அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற மோதல் தொடங்கியிருக்கிறது. முதல்வர் வேட்பாளருக்கான ரேஸில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத், எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா, பா.ஜ.க மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா ஆகியோர் இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்வதற்காகவே, கடந்த சில வாரங்களில் மட்டும் மூன்று முறை ராஜஸ்தானுக்கு விசிட் அடித்திருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா.

சரிவில் காங்கிரஸ்... நெருக்கடியில் பா.ஜ.க... சூடுபிடிக்கும் ராஜஸ்தான் அரசியல் களம்!

கள நிலவரம் என்ன?

ராஜஸ்தான் அரசியலை உற்றுநோக்கும் சிலர், ``கடந்த 30 ஆண்டுகளில், எந்தக் கட்சியும் தொடர்ச்சியாக இரண்டு முறை ராஜஸ்தானை ஆட்சி செய்ததில்லை. பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள்தான் இங்கு மாறி மாறி ஆட்சி செய்துவருகின்றன. எதிர்வரும் தேர்தலிலும் இதே நிலைதான் தொடரும் எனத் தோன்றுகிறது. காரணம், பஞ்சாப்பைப்போலவே ராஜஸ்தானிலும் வெளிப்படையாகவே காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் மோதிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே, முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் முக்கியத் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் பனிப்போர் நிலவிவருகிறது. இதுபோக வேலைவாய்ப்பின்மை, தண்ணீர்ப் பிரச்னை என அரசுமீது பெரும்பாலான மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை உட்கட்சி மோதல்கள் இருந்தாலும், தேர்தலுக்கு முன்பாக இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்வதில் கட்சித் தலைமை வேகம் காட்டிவருகிறது. இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள ஹிமாச்சல், குஜராத்தைக் காட்டிலும், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் ராஜஸ்தானுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது பா.ஜ.க. எனவே, ராஜஸ்தானில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன’’ என்கிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால், ராஜஸ்தான் அரசியலில் காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அங்கு அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் எப்படியிருக்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism