Published:Updated:

இலங்கைத் தேர்தல் முடிவுகள்: இரு தேசங்கள்... இரு அபிலாஷைகள்!

என்ன செய்ய வேண்டும் தமிழ்க் கட்சிகள்?

பிரீமியம் ஸ்டோரி

- தீபச்செல்வன்

இன்னமும் ஈழ மண்ணில் இன அழிப்பின் குருதி நெடி விலக வில்லை. போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சொற்களாலும் அரசியலாலும் உளவியல்ரீதியாகத் தமிழர்களைக் கொல்கிற இன அழிப்புப் போர் முடியவில்லை. நடந்து முடிந்துள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், தமிழர்களை இனப்படுகொலை செய்த தரப்புக்குப் பெரும் வெற்றியைக் கொடுத் திருக்கிறது. `இனிவரும் காலம் எப்படி யிருக்குமோ...’ என்ற அச்சத்தைத் தமிழர்கள் உணரத் தொடங்கியிருக் கிறார்கள்.

போர் முடிவுற்ற பிறகு நடக்கும் மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தல் இது. தமிழர்கள் தொடர்ச்சியாக இந்தத் தேர்தல்கள் வாயிலாக இன அழிப்புத் தரப்பை எதிர்த்து வாக்களித்து வந்துள்ளனர். விடுதலைப்புலிகள் இல்லாத இன்றைய ஈழத்தில், வாக்கு என்பது தமிழ் மக்களின் ஆயுதம். நடந்து முடிந்த தேர்தலில் வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மிகுந்த சவாலை ஏற்படுத்தியது. தமிழ்த் தேசியத்தைப் பேசும் கட்சிகள் மூன்றாகப் பிளவுண்டு தேர்தலில் போட்டி யிட்டன. அரசியல்வாதிகளால் மாத்திரமல்ல, அரசியல் கணிப்பாளர்களாலும் தமிழர்களின் தீர்ப்பைக் கணிக்க இயலவில்லை. ஆனாலும், தெளிவான சேதியைத் தான் தேர்தலில் மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இலங்கைத் தேர்தல் முடிவுகள்: இரு தேசங்கள்... இரு அபிலாஷைகள்!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 196 பேர் போட்டி வாயிலாகத் தேர்வுசெய்யப்படுவார்கள். ஒவ்வொரு கட்சியும் தேசிய அளவில் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் (போனஸ் ஆசனங்கள்) மேலும் 29 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 225 உறுப்பினர்கள். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும். இந்தத் தேர்தலில் 145 ஆசனங்களை ராஜபக்சே தரப்பின் மொட்டு சின்னம் பெற்றிருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டுத் தேர்தலை ஒப்பிடும்போது கூடுதலாக 50 ஆசனங்கள் கிடைத்துள்ளன. பெரும்பான்மைக்குத் தேவை ஐந்து ஆசனங்கள். இதைக் கூட்டணிக் கட்சிகள் மூலமாக ஈடுகட்டியிருக்கும் ராஜபக்சே, ஆட்சி அமைத்துவிட்டார்.

சஜித் பிரேமதேசாவின் தலைமையில் போட்டியிட்ட, ‘ஐக்கிய மக்கள் சக்தி’ 54 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ‘ஐக்கிய தேசியக் கட்சி’ ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதேவேளை, ‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்’ சார்பில் போட்டியிட்ட, ‘இலங்கை தமிழரசுக் கட்சி’க்கு 10 இடங்கள் கிடைத்துள்ளன. கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தலைமையிலான ‘இலங்கை தமிழ் காங்கிரஸ்’ கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ‘ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி’க்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட கருணா தோல்வியைத் தழுவியுள்ளார்.

இலங்கைத் தேர்தல் முடிவுகள்: இரு தேசங்கள்... இரு அபிலாஷைகள்!

ஏற்கெனவே அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவை அதிபராக்கிய சிங்கள மக்கள், தற்போது மகிந்த ராஜபக்சே பிரதமராக வாய்ப்பு அளித்துள்ளனர். ‘விடுதலைப்புலிகளை அழித்துவிட்ட பிறகு இலங்கை ஒரு நாடாக்கப்பட்டுவிட்டது’ என்று அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே கூறினார். உண்மையில், ஒவ்வொரு தேர்தலின்போதும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பிரிந்து வாக்களித்து, தத்தமது அபிலாஷைகளை வெளிப்படுத்திவருகிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், முகக்கவசங்களை அணிந்தபடி பிள்ளைகளுக்காகப் போராடும் தாய்மார்களைக் கொண்டது ஈழ தேசம். இன அழிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறக்கங்கள் கலைத்த மண் இது. இன அழிப்புக்கான நீதிக்காகத் துடித்துக்கொண்டிருக்கிறது தேசம். ஆனாலும், இந்த மண்ணில் முன்னெடுக்கப்படும் தமிழ்க் கட்சிகளின் அரசியல், மக்களை மேலும் நோவுக்குள் தள்ளுவதாகவே அமைகிறது. கொள்கைக்கும் லட்சியத்துக்குமான அரசியலைத் தொடரவேண்டிய மண்ணில், நபர்களுக்கும் கபடங்களுக்குமான அரசியல்தான் எஞ்சியிருக்கிறது. இதனால் தமிழர்களின் கட்சிகள் பிளவுண்டு சிதையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஈழத் தமிழ் அரசியலில் முக்கியப் பாத்திரத்தை வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி. புலிகள் காலத்தில், புலிகளின் பெரும் ஆதரவுடன் இந்தக் கட்சி வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களைப் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய தடத்தைப் பதித்தது. அதற்குப் பிறகு 2010-ம் ஆண்டு 14 ஆசனங்களைக் கைப்பற்றியது. இம்முறை 10 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. விடுதலைப்புலிகளின் கொள்கைகளை விலக்கு செய்தமை, கடந்தகாலத்தின் வினைத்திறனற்ற செயல்கள், அரச ஆதரவு நிலைப்பாடு ஆகியவையே இந்தப் பின்னடைவுக்குக் காரணங்கள்.

தென் இலங்கையில் சிங்கள தேசியம் வெற்றிபெற்றிருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியம் தோல்வியுற்றதா என்றால், `இல்லை’ என்றே சொல்ல வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தோல்வியே தவிர, தமிழ்த் தேசியத்துக்கு அல்ல.

வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்புமீது விமர்சனங்களை முன் வைக்கின்ற இவர்கள், அந்தக் கட்சிக்கு முன்மாதிரியாக நடந்துகொள்வார்கள் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. விக்னேஸ்வரனின் குரல் ஈழத் தமிழர்களின் நீதிக்கான வேட்கையாக இருக்கும்.

சிங்கள தேசத்தில் மக்கள் வெளிப்படுத்திய தீர்ப்பும், ஈழ தேசத்தில் தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பும் இரு தேச மக்களின் அடிப்படை அபிலாஷைகள். அவரவர் தேசங்களின் பற்றுகளுடன் மக்கள் வாழ்வது இலங்கைத் தீவின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் அடிப்படையாக இருக்கும். புதிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஈழத் தமிழரின் நீதிக்கும் அபிலாஷைக்குமான பயணத்தை மெய்யான பற்றுடன் செய்ய வேண்டும். அதைத்தான் இந்தத் தேர்தலில் வலியுறுத்தியிருக்கிறார்கள் தமிழ் ஈழ மக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு