அரசியல்
Published:Updated:

தீப்பிடிக்கும் தேர்தல் களம்! - 8 முனைப் போட்டி... 8 வியூகங்கள்... 8 சிக்கல்கள்...

8 முனைப் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
8 முனைப் போட்டி

தி.மு.க அரசின்மீது மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டது பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தில்தான்.

தி.மு.க., அ.தி.மு.க கூட்டணிக்குள் சீட் பங்கீடு முடிந்து, பிரசாரம் களைகட்டுகிறது. இரு கூட்டணிக்குள்ளும் சீட் பங்கீடே அதகளமான நிலையில், தோழமைக் கட்சிகளுக்காக இரண்டு பெரிய கட்சிகளின் நிர்வாகிகளும் கைகொடுப்பார்களா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தக் கூட்டணிகளைத் தவிர, பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர், அ.ம.மு.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனித்தனியாகத் தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றன. இந்த எட்டுமுனைப் போட்டியில் எட்டுத் திக்கிலிருந்தும் பிரசாரம் வெப்பம் கிளப்ப, தீப்பிடித்திருக்கிறது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம். இந்தக் கூட்டணிகள், கட்சிகளின் வியூகம்தான் என்ன? என்னென்ன மாதிரியான சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்... என்பதை விசாரிக்கக் களமிறங்கினோம்.

“சக்கரபாணிக்குச் சர்க்கரை கொடுக்கணும்...” - உற்சாகமான அ.தி.மு.க!

அ.தி.மு.க கூட்டணியில், தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மட்டுமே உள்ளது. தொடக்கத்தில் பத்து சதவிகித இடங்களை எதிர்பார்த்த அவர்களும், முடிவில் அ.தி.மு.க ஒதுக்கும் இடங்களில் போட்டியிடும் மனநிலைக்கு வந்துவிட்டனர். இதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அ.தி.மு.க-வே நேரடியாகக் களம்காண்கிறது. பா.ஜ.க-வுடனான உறவு முறிந்திருப்பதால், அ.தி.மு.க தொண்டர்களிடம் உற்சாகம் எழுந்திருக்கிறது. ஆரம்பத்தில், தேர்தலில் போட்டியிடத் தயங்கியவர்கள்கூட இப்போது போட்டியிட ஆர்வம் காட்டியுள்ளனர்.

அ.தி.மு.க-வின் தேர்தல் வியூகம் குறித்து, அக்கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம். “தி.மு.க அரசின்மீது மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டது பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தில்தான். அரசு வழங்கிய தரமில்லாத பொங்கல் பரிசுத்தொகுப்பும், பணம் கொடுக்காமல் ஏமாற்றியதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. எங்கள் பிரசாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததற்காக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்குச் சர்க்கரைதான் கொடுக்க வேண்டும். தவிர, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் உரிமைத்தொகை அளிப்பதாக தி.மு.க-வினர் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தனர். இப்போது அதை அடியோடு மறந்துவிட்டார்கள். இதுபோல, தேர்தல் நேரத்தில் கொடுத்த காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதையெல்லாம் பட்டியலிட்டு மக்களிடம் பிரசாரம் செய்யவிருக்கிறோம். தி.மு.க எளிதாகக் கடந்துசெல்லும் தேர்தலாக நிச்சயம் இந்தத் தேர்தல் இருக்காது” என்றனர்.

அ.தி.மு.க முகாமில் உற்சாகம் கரைபுரண்டு ஓடினாலும், கரன்சி விஷயத்தில்தான் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களே அவர்களுக்கான செலவுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென எம்.ஜி.ஆர் மாளிகை அறிவுறுத்தியிருக்கிறது. ஒரு சில இடங்களில் மட்டும், அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாஜிக்கள் கூடுதல் செலவுகளைப் பார்த்துக்கொள்வதாக உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதியை அவர்கள் களத்தில் செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதால், சிக்கலில் ஆழ்ந்திருக்கிறது அ.தி.மு.க வேட்பாளர்கள் தரப்பு. கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியும், தென் மாவட்டங்களில் பன்னீரும் பிரசார வியூகங்களை அமைக்கிறார்கள். வட மாவட்டங்களில் சி.வி.சண்முகத்தையும், பன்னீரையும் வைத்துப் பிரசாரக் கூட்டங்கள் நடத்த அ.தி.மு.க தலைமை திட்டமிட்டுள்ளது.

தீப்பிடிக்கும் தேர்தல் களம்! -  8 முனைப் போட்டி... 8 வியூகங்கள்... 8 சிக்கல்கள்...

அதிகாரம் ப்ளஸ் பணம்... டாப் கியரில் தி.மு.க!

பத்தாண்டுகளுக்குப் பிறகு அரியணை ஏறியிருப்பதால், தங்கள் கட்சியினருக்கே அனைத்திலும் முன்னுரிமை என்கிற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தமாகச் சேர்த்து பதினைந்து சதவிகித இடங்களை மட்டும் கொடுத்தால் போதும் என்கிற கணக்கில் அறிவாலயம் இருந்ததால், பல இடங்களில் கூட்டணிக்குள் குஸ்திகள் அரங்கேறின. ஆனாலும், விடாப்பிடியாகத் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றுவிட்டது தி.முக. பிப்ரவரி 3-ம் தேதி வாக்கில், ஒரு வழியாகக் கூட்டணிக் கட்சிகளைச் சரிக்கட்டி சீட் பங்கீட்டை முடித்திருக்கிறது அறிவாலயம்.

தி.மு.க-வின் உள்ளாட்சித் தேர்தல் வியூகம் குறித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பேசினோம். “அ.தி.மு.க முகாமிலிருந்து ‘வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ என்கிற பிரசாரம் வேகமாகியிருப்பதால், பணமும் அதிகாரமும்தான் இந்தத் தேர்தலில் எங்களுக்குக் கைகொடுக்கப் போகின்றன. மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர்களும் செலவைப் பார்த்துக்கொள்ளவிருக்கிறார்கள். சென்னை மாவட்டத்துக்கான தேர்தல் செலவுகள் இரண்டு அமைச்சர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் பிரசாரத்துக்கு உதயநிதியைப் பயன்படுத்திக்கொள்ளவும் தலைமை அறிவுறுத்தியுள்ளது. அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பிரிந்து பா.ஜ.க தனித்து களம் காண்பதால், வாக்குகள் பிரியும். அது தி.மு.க-வுக்குச் சாதகமாக அமையும். வாக்காளர்களுக்கான கவனிப்பு, தேர்தல் செலவுக்குத் தலைமை கொடுக்கும் தொகை, உள்ளிட்டவை குறித்து பிப்ரவரி 7-ம் தேதிக்குப் பிறகு முடிவு செய்யவிருக்கிறோம்” என்றனர்.

அதிகாரம் கையில் இருப்பதால், டாப் கியரில் செல்கிறது தி.மு.க. ஆனால், தோழமைக் கட்சியினரிடம்தான் உற்சாகமில்லை. பெரம்பலூரில் தனித்துப் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்திருப்பதிலிருந்தே, அந்தக் கட்சிக்குக் கூட்டணியில் கிடைத்த மரியாதையை அறிந்துகொள்ளலாம். சென்னை மாநகராட்சியில், பத்து சதவிகித இடங்கள் வேண்டும் என்றவர்களிடம், நான்கு விரல்களை மட்டும் காட்டியது அறிவாலயம். சத்தியமூர்த்தி பவன் உள்ள 63-வது வார்டையே தி.மு.க தர மறுத்ததால் கடும் டென்ஷனாகிவிட்டது கதர் தரப்பு. நீண்ட பேச்சுவார்த்தை இழுபறிக்குப் பிறகு, அந்த வார்டு உட்பட இப்போது 17 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஓரிரு இடங்கள் என்றாலும், தமிழகம் முழுவதும் பரவலாக சீட் ஒதுக்கப்பட்டிருப்பதால் வி.சி.க., ம.தி.மு.க கட்சியினரிடம் சிணுங்கல் ஏதுமில்லை. எதிர்த்து போராடும் மனநிலையில் கம்யூனிஸ்ட்டுகள் இல்லையென்பதால், கொடுத்த இடத்தைப் பெற்றுக்கொண்டு களமிறங்குகிறார்கள் தோழர்கள். ஆனால், தோழமையிலிருப்பவர்கள் அனைவருக்கும் ‘எங்கே தி.மு.க கடைசி நேரத்தில் உள்ளடி வேலையைக் காட்டிவிடுமோ?’ என்கிற கவலை ஏற்பட்டுள்ளது. இது கூட்டணிக்குள் சிக்கலையும் உருவாக்கியிருக்கிறது.

தீப்பிடிக்கும் தேர்தல் களம்! -  8 முனைப் போட்டி... 8 வியூகங்கள்... 8 சிக்கல்கள்...

பதற்றத்தில் பா.ஜ.க... திண்டாட்டத்தில் தினகரன் கட்சி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் 12,838 வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகத் தங்களை நிலைநிறுத்தும் கனவில் வியூகம் அமைக்கிறது பா.ஜ.க. தேர்தல் செலவுக்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிட்ட அளவு தொகையும் அனுப்பப்பட்டிருக்கிறதாம். அதேபோல, தி.மு.க-வை எதிர்த்து தேர்தல் பிரசாரம் செய்வதுபோல, தேவைப்படும் பட்சத்தில் அ.தி.மு.க-வுக்கு எதிரான கருத்துகளைப் பேசவும் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை அளித்திருக்கிறது கமலாலயம்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க துணைத் தலைவர் ஒருவர், “சென்னை மாநகராட்சிக்கான கவுன்சிலர் வேட்பாளர்களை தி.மு.க அறிவிக்கும் முன்பே நாங்கள் அறிவித்துவிட்டோம். கூட்டணி முறிவுற்ற குறுகிய காலத்துக்குள், தமிழகம் முழுவதும் வேட்பாளர்களைப் போட்டதே பெரிய சாதனைதான். தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடம், நேரடியாகவே நேர்காணல் செய்திருக்கிறார் அண்ணாமலை. அவர் தலைவராகப் பதவியேற்ற பிறகு, கட்சி சந்திக்கும் பெரிய தேர்தல் இது. தேர்தல் வெற்றியைவிட, பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதத்தை அதிகரிப்பதே அவரது வியூகம். ஒரு வார்டுக்குக் குறைந்தது 500 வாக்குகள் கிடைத்தாலும், மொத்தமாக 64 லட்சம் வாக்குகளை பா.ஜ.க பெற்றுவிடும்” என்றார்.

‘பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமான வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டுமென்பதால், அவசரகதியில் வலுவில்லாதவர்களுக்கும்கூட வாய்ப்பு வழங்கியிருக்கிறது கமலாலயம். வீராப்பாகக் களமிறங்கிவிட்டாலும், உருப்படியான கட்டமைப்பு இல்லாதது, பிரசாரத்துக்கு முகங்கள் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்த பதற்றம் இருக்கிறது கட்சியில். இவை தேர்தல் களத்தில் அவர்களுக்குச் சிக்கலாக இருக்கும்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தென் மாவட்டங்களில் போட்டியிடும் அ.ம.மு.க-வினர் உற்சாகத்தோடு வலம்வருகிறார்கள். ஆனால், வட மாவட்டங்களில் ஆட்கள் கிடைக்காமல் தள்ளாடுகிறது அக்கட்சி. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அக்கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் எம்.சி.முனுசாமி கட்சியைவிட்டு வெளியேறியிருக்கிறார். இதுபோல, தென்காசி, விழுப்புரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பல நிர்வாகிகளும் அ.தி.மு.க-வில் இணைந்திருக்கின்றனர். அ.ம.மு.க-வின் செஞ்சி நகரச் செயலாளர் மில்கா கணேஷ் தி.மு.க-வில் ஐக்கியமாகியிருக்கிறார். இருப்பவர்களைத் தக்கவைப்பதற்கே படாதபாடுபடுகிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன். இந்தக் குழப்பத்தில்தான், ‘வேட்புமனு வாபஸ் நாள் முடிந்த பிறகு, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவேன்’ என்று வித்தியாசமாகக் கூறியிருக்கிறார் அவர். ‘வேட்பாளர் பட்டியலை முன்கூட்டியே அறிவித்தால், அவர்களை தி.மு.க., அ.தி.மு.க கட்சியினர் ‘கிட்னாப்’ செய்து, கன்ட்ரோல் எடுத்துவிடுவார்கள்’ என்பதே தினகரனின் பதற்றத்துக்குக் காரணமாம். நிதிரீதியாக, நிலைப்பாடாகவும்கூட சசிகலா ஆதரவு ஏதும் தெரிவிக்கவில்லை என்பதால், திண்டாடிப்போயிருக்கிறது தினகரன் கட்சி.

சவாலைச் சந்திக்கும் நாம் தமிழர்... நிதியால் விழிபிதுங்கும் கமல்!

திராவிடக் கட்சிகளுக்கு இணையாக, தமிழகம் முழுவதும் வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறது நாம் தமிழர் கட்சி. சட்டமன்றத் தேர்தலிலேயே ஒவ்வொரு நகரத்திலும் கணிசமான வாக்குகளை வாங்கியிருப்பதால், தெம்பாக இருக்கிறார்கள் தம்பிகள். நம்மிடம் பேசிய அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவர், “ஏழு சதவிகிதம் இருக்கும் எங்கள் வாக்குவங்கியை யாரும் உடைக்க முடியாது. தவிர, ஒவ்வொரு பகுதியிலும் கொரோனா, மழை வெள்ளம் என அனைத்துப் பிரச்னைகளிலும் மக்களுக்காகக் களத்தில் நின்றிருக்கிறோம். அதனால், புதிதாகவும் பலர் எங்களை ஆதரிப்பார்கள். தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளுக்குள்ளும் எங்கள் கட்சியின் ஒரு கவுன்சிலராவது இருக்க வேண்டுமென்பதே எங்கள் இலக்கு” என்றார்.

‘தி.மு.க., அ.தி.மு.க-வின் கட்டமைப்பு, பண பலத்துக்கு நிகராகத் தம்பிகள் தாக்குப் பிடிப்பார்களா?’ என்பதே நாம் தமிழர் சந்திக்கும் பெரும் சவாலாக இருக்கிறது. ‘தமிழ், தமிழர் விவகாரங்களில் தி.மு.க அடுத்தடுத்து ஸ்கோர் செய்துவரும் நிலையில், சித்தாந்தரீதியாக சீமானின் பிரசாரம் எடுபடுமா?’ என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் முதல் ஆளாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டவர் கமல்ஹாசன். “மாநகரம், நகர்ப் பகுதிகளில் எங்கள் தலைவருக்கு எப்போதும் ஒரு மாஸ் உண்டு. மற்றவர்களின் மீது மதம், இனம், ஊழல், கொள்ளை என ஏதாவது ஒரு முத்திரை இருக்கிறது. கமல்ஹாசன் மீது அப்படியான எந்த முத்திரையும் இல்லாதிருப்பதே எங்களுக்கான ப்ளஸ் பாயின்ட். நகர்ப்புறங்களில் கணிசமான இடங்களைப் பெறுவோம்” என்கிறார்கள் ம.நீ.ம கட்சியினர். அதேவேளையில், தமிழகம் முழுவதும் தகுதியான வேட்பாளர்களை நிறுத்துவதும், தேர்தல் செலவுகளும் அக்கட்சியைக் கலங்கடித்திருக்கிறது. ‘நேர்மை அரசியலுக்கு நன்கொடை தாரீர்’ என கமல்ஹாசன் உண்டியலுடன் கிளம்பியிருப்பதே இதற்கு சாட்சி.

“நிர்வாகிகளாவது மிஞ்சுவார்களா?” - கலக்கத்தில் பா.ம.க., தே.மு.தி.க!

இந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் தழுவிய அளவில் பா.ம.க., தே.மு.தி.க இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி என வட மாவட்டங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறது பா.ம.க. வேட்பாளர் பட்டியலையும் ஜரூராக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், ‘தேர்தல் செலவுக்குப் பணம் கேட்டு தைலாபுரம் வரக் கூடாது’ என்று ஏற்கெனவே கட்சித் தலைமை அறிவுறுத்தியிருப்பதால், கட்சி நிர்வாகிகளெல்லாம் கலங்கிப்போயிருக்கிறார்கள். ஒருசில இடங்களில், கட்சி மாறும் காட்சிகளும் அரங்கேறுகின்றன. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி பா.ம.க நகர அமைப்பாளர் கார்த்திகேயன், தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். சென்னை, காஞ்சிபுரம் ஏரியாக்களில் தி.மு.க-வினருடன் பா.ம.க-வினர் போட்டுக்கொள்ளும் ‘அண்டர் கிரவுண்ட் டீலிங்’ காட்சிகளும் கன ஜோராக அரங்கேறுகின்றன.

தே.மு.தி.க நிலைமையோ இன்னும் மோசம். படாடோபமாக சென்னை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தவர்கள், மீதமிருக்கும் 100 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காமல் திண்டாடிவிட்டனர். மன்னார்குடி, சிதம்பரம் பகுதிகளில் அ.ம.மு.க., தி.மு.க என வாய்ப்பளிக்கும் கட்சிகளோடு லோக்கல் அண்டர் ஸ்டேண்டிங் போட்டுக்கொள்கிறார்கள் அக்கட்சியின் சில நிர்வாகிகள். சில இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிடும் தே.மு.தி.க நிர்வாகிகள், பதவிகளைக் கைப்பற்றும் கட்சிகளுடன் பிற்பாடு இணையவும் ‘தொலைநோக்கு’ பார்வையுடன் செயலாற்றுகிறார்கள். எந்தத் திட்டமும் இல்லாததால், இருக்கும் கட்சி நிர்வாகிகளைத் தக்கவைப்பதற்கே அல்லாடிப்போயிருக்கிறார் கட்சியின் பொருளாளரான பிரேமலதா. தேர்தலை எதிர்கொள்வதைவிட, நிர்வாகிகளைக் காப்பாற்றுவதற்குத்தான் இப்போது ஒரு வியூகம் அவருக்குத் தேவையாகியிருக்கிறது. ஒருகாலத்தில் 10 சதவிகித வாக்குகளை வைத்திருந்த ஒரு கட்சி, பிரேமலதாவின் சில தவறான முடிவுகளால் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களை நியமிக்கக்கூட முடியாமல் திண்டாடுகிறது.

தமிழகம் சமீபகாலங்களில் பார்த்திராத எட்டுமுனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது தேர்தல் களம். பிரசாரம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. அதற்குள்ளாகவே கட்சிகள், எதிர்த்தரப்பு நிர்வாகிகளைக் கபளீகரம் செய்யும் காட்சிகள் அரங்கேறுகின்றன. ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான வியூகங்களோடும் சிக்கல்களோடும் தேர்தலை எதிர்கொண்டாலும், முடிவில் தீர்ப்பு எழுதப்போகிறவர்கள் வாக்காளர்கள்தான். அதற்குள் என்னென்ன கூத்துகளெல்லாம் அரங்கேறப்போகின்றனவோ?!