Published:Updated:

பதவி... பணம்... பஞ்சாயத்து... ரணகளமாகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

ஆளுங்கட்சியான தி.மு.க-வுக்குள் பணம் எகிறியடிக்கும் நிலையில், அ.தி.மு.க-வுக்குள் பஞ்சப்பாட்டுதான் ஒலிக்கிறது.

பதவி... பணம்... பஞ்சாயத்து... ரணகளமாகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

ஆளுங்கட்சியான தி.மு.க-வுக்குள் பணம் எகிறியடிக்கும் நிலையில், அ.தி.மு.க-வுக்குள் பஞ்சப்பாட்டுதான் ஒலிக்கிறது.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

நீண்ட பேச்சுவார்த்தை, இழுபறிக்குப் பிறகு அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் விரிசல் விழுந்திருக்கிறது. உள்ளாட்சிக் கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடும்” என்று அறிவித்திருக் கிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இந்த அறிவிப்பு அ.தி.மு.க முகாமுக்குள் மலர்ச்சியை உருவாக்கியிருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்குப் பண பலமில்லை என்பதால், தவித்துப்போயிருக்கிறார்கள் அ.தி.மு.க-வின் கீழ்மட்ட நிர்வாகிகள். மற்றொருபுறம், கூட்டணிக் கட்சிகளை தி.மு.க நடத்தும்விதம் கடும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. “இதுதாங்க கொடுக்க முடியும். வேணும்னா ஏத்துக்கிட்டு போட்டியிடுங்க. இல்லைன்னா கெளம்புங்க” என்று தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ‘கட் அண்ட் ரைட்’டாகப் பேசுவதால், அறிவாலயக் கூட்டணியிலிருப் பவர்கள் நொந்து போயிருக்கிறார்கள். பதவிக்காக நடைபெறும் இந்த யுத்தத்தில், பணம் புகுந்து விளையாடுவதால் பஞ்சாயத்து களைகட்டுகிறது. அரசியல் ரணகளத்தை ஏற்படுத்தியிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து விசாரணையில் இறங்கினோம். கிடைத்த தகவலெல்லாம் `தெறி’ ரகம்!

பதவி... பணம்... பஞ்சாயத்து... ரணகளமாகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

“பர்சன்டேஜ் பேசுறதெல்லாம் வேணாம்...” - கடுப்பான எடப்பாடி, முறிந்த கூட்டணி!

ஜனவரி 29-ம் தேதி, ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிப் பேச்சுவார்த்தையே ரணகளமாகத்தான் நடந்திருக்கிறது. பா.ஜ.க சட்டமன்றக்குழுத் தலைவரான நயினார் நாகேந்திரனின் ‘சர்ச்சைப் பேச்சு’ விவகாரத்தால், அவரைப் பேச்சுவார்த்தைக்கு பா.ஜ.க டீம் அழைத்துச் செல்லவில்லை. பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டியை அழைத்துச் சென்றிருந்தனர். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தான் முதலில் பேசியிருக்கிறார். “உங்களுக்கு எத்தனை சீட், எங்கெங்கே எதிர்பார்க்குறீங்க?” என்று பன்னீர் கேட்டவுடன், ஒரு பட்டியலை எடுத்து டேபிளில்வைத்த சுதாகர் ரெட்டி, “எங்களுக்கு 40 சதவிகித இடங்களைக் கொடுங்க” என்று எடுத்தவுடன் ஐந்தாவது கியரைப் போட்டிருக்கிறார். சிரித்தபடி, “யதார்த்தமா என்ன சாத்தியமோ அதைக் கேளுங்கங்க...” என்று அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லவும், பா.ஜ.க டீமில் வந்திருந்தவர்கள் தங்கள் புராணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் ஒருவர், “40 சதவிகித இடங்களுக்கு அ.தி.மு.க மறுத்தவுடன், ‘நாடாளுமன்றத் தேர்தல்ல ஐந்து இடமும், சட்டமன்றத் தேர்தல்ல 20 சீட்டும்தான் ஒதுக்குனீங்க. இந்த முறை அப்படி இருக்கக் கூடாது. 20 சதவிகித இடங்களையாவது நீங்க ஒதுக்கியாகணும். நாகர்கோவில், திருப்பூர், கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிகளை எங்களுக்குத் தாங்க’ என்று விடாப்பிடியாக நின்றது பா.ஜ.க டீம். இதைக் கேட்டதும் வேலுமணி கொதித்துவிட்டார்.

‘கோயம்புத்தூர்ல உங்க கட்சிக்கு எவ்வளவு வாக்கு இருக்குங்கறது தெரியுமா?’ என்று வேலுமணி கேட்கவும், ‘நாங்க கூட்டணியில இருந்ததாலதான் உங்களால அதிக இடங்களை ஜெயிக்க முடிஞ்சுது’ என்று பதிலளித்திருக்கிறார் பொன்னார். கடைசியில், ‘15 சதவிகித இடங்களையாவது தாருங்கள்’ என்று கமலாலயத் தரப்பினர் எதிர்பார்த்தபோது, எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். ‘பர்சன்டேஜ் பேசுறதெல்லாம் வேணாங்க. மாவட்டச் செயலாளர்கள்கிட்ட சொல்லிவிடுறோம். நீங்க மாவட்ட அளவுல பேசி சீட் வாங்கிக்கங்க. மேயர் யாருங்கறதை ரிசல்ட் வந்த பிறகு பேசி முடிவெடுத்துக்கலாம்’ என்று கண்டிப்பாக எடப்பாடி சொல்லிவிட்டார். ஜனவரி 30-ம் தேதி மாலை வரை பா.ஜ.க-வின் முடிவுக்காக அ.தி.மு.க காத்திருந்தது. ஆனால், அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றதும், கடலூர், தருமபுரி மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தனித்தே களமிறங்குவதாக பா.ஜ.க-வும் அறிவித்திருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இரு தரப்புக்குமே தெளிவான கண்ணோட்டமில்லை என்பதால், அதுவரையில் கூட்டணி முற்றிலுமாக உடைவதற்கு வாய்ப்பு இல்லை” என்றார்.

பதவி... பணம்... பஞ்சாயத்து... ரணகளமாகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

மகனுக்கு சீட்... கொதிப்பில் உடன்பிறப்புகள்!

தனித்தே களமிறங்கப்போகும் பா.ஜ.க., தாங்கள் வலுவாக இருப்பதாகக் கருதும் கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு பகுதிகளில் திராவிடக் கட்சிகளுக்கு இணையாக வாக்குகளை அள்ள வியூகம் வகுத்திருக்கிறதாம். நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது, இரண்டு முறை அதைக் கைப்பற்றிய பா.ஜ.க., இந்த முறை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மேயர் பதவியைக் கைப்பற்ற சுறுசுறுப்பாகியிருக்கிறது. அதற்காக, தங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைந்த சில வார்டுகளில் பிற கட்சி வேட்பாளர்களிடம் பேரம் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ‘உங்கள் தேர்தல் செலவுகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மேயர் தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்’ என டீலிங் பேசுகிறதாம் பா.ஜ.க.

இந்த ரணகளத்துக்கு நடுவே, கவுன்சிலர் சீட்டுகளை விற்பது என்பது தி.மு.க-வுக்குள் பலத்த அதிர்வலையை உருவாக்கியிருக்கிறது. முட்டைக்குப் பெயர்போன மாவட்டத்தின் தி.மு.க மாவட்டப் பிரமுகர் ஒருவர், ஒரு கவுன்சிலர் சீட்டுக்குத் தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் வசூலித்திருக்கிறார். இதேபோல, ‘பணத்தைக் கொடு... சீட்டை எடு’ என்று கறார் காட்டுகிறதாம் வடக்கு மாவட்ட அமைச்சர் ஒருவரின் தரப்பு. விழுப்புரம் மாவட்டத்தில், தான் 25 வருடங்கள் செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்ததுபோல, தனது மகன் மொக்தியாரை, பேரூராட்சித் தலைவராக்க மும்முரம் காட்டிவருகிறாராம் அமைச்சர் மஸ்தான். இதனோடு தன் மனைவியை நேர்காணலில் அமர்த்தி அழகு பார்த்ததும், சீட் எதிர்பார்த்திருந்த சீனியர் உடன்பிறப்புகளிடம் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. பல மாவட்டங்களிலும் வாரிசு, சொந்த பந்தம் எனத் தங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கே தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சீட் ஒதுக்குவது பஞ்சாயத்தாகியிருக்கிறது.

“என்னது பணமா..?” - டென்ஷனாகும் அ.தி.மு.க தலைவர்கள்

ஆளுங்கட்சியான தி.மு.க-வுக்குள் பணம் எகிறியடிக்கும் நிலையில், அ.தி.மு.க-வுக்குள் பஞ்சப்பாட்டுதான் ஒலிக்கிறது. மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் தேர்தலைச் சந்திக்கிறது கடலூர். மாநகராட்சிக்கான வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டதும், முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான எம்.சி சம்பத்தைக் கழக நிர்வாகிகள் சந்தித்திருக்கிறார்கள். “தேர்தல் செலவுக்கு ஏதாச்சும் பண்ணுங்கண்ணே” என்று வந்தவர்கள் துண்டை விரிக்கவும், “என்கிட்ட ஏதுப்பா காசு? தலைமையிலருந்து வரட்டும்... பார்க்கலாம்” என்று வெறும் கையைக் காட்டி அனுப்பிவிட்டாராம் சம்பத். இந்த பதிலால் அதி.மு.க வேட்பாளர்கள் டோட்டல் அப்செட்.

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசியிருக்கும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களே செலவை கவனித்துக்கொள்ள வேண்டும். கட்சித் தலைமை பணம் தரவில்லை” என்றிருக்கிறார். அதற்குச் சில நிர்வாகிகள், “ஏழ்மை நிலையில் இருக்கும் வேட்பாளர்களுக்கு நீங்களாவது சொந்தப் பணத்தை கொடுங்க” என்றிருக்கிறார்கள். அதற்கு வைத்திலிங்கம் தரப்பு, “என்னது பணமா? யாருக்கும் ஒத்த பைசா கிடையாது. பணம் திரட்ட முடியலைன்னா அப்புறம் எதுக்குய்யா உங்களுக்குக் கட்சிப் பதவி?” என்று கறார் காட்டியிருக்கிறது. “10 வருடம் அமைச்சராக இருந்தவர். 20 வருடம் மாவட்டச் செயலாளராக வலம்வருபவர். இவரிடமே பணமில்லை என்றால், லோக்கல் கட்சிக்காரர்கள் செலவுக்கு என்ன செய்வார்கள்?” என்று புலம்பித் தீர்க்கிறது தஞ்சை அ.தி.மு.க. இதே புலம்பல்கள் பெரும்பாலான மாவட்டங்களிலும் ஒலிக்கிறது. செலவுக்குப் பணம் கிடைக்காத விரக்தியில், “நம்ம ஆட்சியில சம்பாதிச்சதை என்னதான்யா பண்ணுனாங்க?” என்று வெளிப்படையாகவே அ.தி.மு.க-வினர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

பதவிப் பஞ்சாயத்து... ரணகளமாகும் தேர்தல் களம்!

உள்ளாட்சித் தேர்தலுக்காக நடக்கும் உட்கட்சிப் பஞ்சாயத்துகளால், ரத்தக்களறி ஆகியிருக்கிறது தேர்தல் களம். நெல்லை பாளையங்கோட்டை 38-வது வார்டு தி.மு.க செயலாளர் பொன்னுதாஸ், தன் தாய் பேச்சியம்மாளை கவுன்சிலர் வேட்பாளராக்கத் திட்டமிட்டிருந்திருக்கிறார். அவருக்குப் போட்டியாக தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் பிரவீன் என்பவரும் தன் தாய்க்கு சீட் கேட்டிருக்கிறார். இந்த உட்கட்சி அரசியல் பகையில், நேர்காணலுக்கு முந்தைய இரவில் பொன்னுதாஸை வெட்டிக் கொன்றிருக்கிறது வழக்கறிஞர் அருண் பிரவீன் தரப்பு. சீட்டுக்காக நடக்கும் பஞ்சாயத்துகள் கொலையில் முடிந்திருப்பதால், நெல்லையில் பதற்றத்துக்கு அளவில்லை.

பதவி... பணம்... பஞ்சாயத்து... ரணகளமாகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

தன் தம்பி ஜெகன் பெரியசாமிக்கு, தூத்துக்குடி மேயர் பதவியை வாங்கித் தந்துவிட வேண்டுமென தீவிரமாக மெனக்கெட்ட அமைச்சர் கீதா ஜீவன், அதில் வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால், மேயர் பதவிக்கு உதயநிதி சிபாரிசுடன் முயன்ற மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. கனிமொழியின் கட்டுப்பாட்டில் மாவட்ட தி.மு.க இருப்பதால், உதயநிதியின் பரிந்துரையை அவர் விரும்பவில்லை என்கிறார்கள். இதனால்தான் ஜோயலின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லையாம்.

உட்கட்சிப் பஞ்சாயத்துகளுக்கு மத்தியில், கூட்டணிக் கட்சிகளை தி.மு.க நடத்தும்விதம் பலத்த எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. வடலூர் நகராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு வார்டுகள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில், அந்தக் கட்சிக்குள்ளேயே கோஷ்டிப்பூசல் வெடித்தது. அதில் ஒரு தரப்பினர், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் முறையிடுவதற்காக, குறிஞ்சிப்பாடியிலுள்ள எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு ஜனவரி 29-ம் தேதி சென்றனர். வந்தவர்களை உட்காரக்கூட சொல்லாத பன்னீர்செல்வம், அவர்களை நிற்கவைத்தே விசாரித்து அனுப்பியிருக்கிறார். “கொரோனா தொற்று காரணமாக அமைச்சர் யாரையும் அறைக்குள் அனுமதிப்பதில்லை. முக்கியமான விஷயமென்றால் மட்டுமே சில விநாடிகள் அனுமதிப்பார். அதனால்தான் சேர்கள் போடுவதில்லை” என்று விளக்கமளிக்கிறது அமைச்சர் தரப்பு. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வி.சி.க-வினர், “கொரோனா பயமென்றால் தேர்தல் பங்கீடு பேச வந்தவர்களுடன் அமைச்சரும் எழுந்து நின்று பேசியிருக்கலாமே? மேடையில் சமத்துவம், பகுத்தறிவு எனப் பேசினாலும், வீட்டுக்கு வந்தால் பண்ணையார்களாகத்தான் நடந்துகொள்கிறார்கள்” என்று காய்ச்சியெடுக்கிறார்கள். இந்த விவகாரத்தைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வந்த திருமாவளவனும் முதல்வர் ஸ்டாலினிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தகிப்பில் அறிவாலயக் கூட்டணி!

புதுக்கோட்டை தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி ஆலோசனைக் கூட்டத்தில், “நம் கூட்டணிக் கட்சியினர் அ.தி.மு.க-வுடன் பேரத்துக்குப் போனதால்தான், வாய்ப்பிருந்தும் மாவட்ட சேர்மன் பதவி பறிபோனது. இந்த முறை அது மாதிரி நடக்கக் கூடாது” என்று காங்கிரஸ் கட்சியினரைக் குறிவைத்துக் கடுகடுத்திருக்கிறார் அமைச்சர் ரகுபதி. இதில் டென்ஷனான காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் முருகேசன், “உங்க கட்சியிலயிருந்தும்தான் ஒருத்தர் மாத்தி ஓட்டுப் போட்டிருக்காரு. அவர் மேல என்ன நடவடிக்கை எடுத்தீங்க?” என்று பேசவும், கூட்டம் காரசாரமானது. திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் யாரும் மேயராக இருந்ததில்லை. இந்த முறை மேயர், துணை மேயர் பதவிகளைப் பிடித்துவிட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறது தி.மு.க. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு நான்கு சீட்டுகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்று கறார்காட்டுகிறார்களாம். திருச்சி சிட்டிங் காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் பேசிப் பார்த்தும் கலைஞர் அறிவாலயம் கருணை காட்டவில்லை என்கிறார்கள்.

பதவி... பணம்... பஞ்சாயத்து... ரணகளமாகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு நான்கு இடம், இதர கூட்டணிக் கட்சிகளுக்குத் தலா இரண்டு இடம் ஒதுக்கத் தீர்மானித்திருக்கிறது அறிவாலயம். இதர மாநகராட்சிகளில் நிலைமை இன்னும் மோசம். இரண்டு கவுன்சிலர் சீட்டுகள் ஒதுக்குவதற்கே சோம்பல் முறிக்கிறதாம் தி.மு.க. கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனக் குறிப்பிடத்தக்க வாக்குகள் இருக்கும் மதுரையில், ‘சி.பி.எம்., சி.பி.ஐ இரண்டுக்கும் சேர்த்தே நான்கு சீட்தான் ஒதுக்க முடியும்’ என்று அறிவாலயம் கறார் காட்டுவதால், கொதிப்பிலிருக்கிறார்கள் தோழர்கள். கோயம்புத்தூரில் காந்தி நினைவுநாள் கூட்டத்தில், கோட்சே பெயரைக் குறிப்பிட்டு முழக்கமிட்ட ஜி.ராமகிருஷ்ணன் போலீஸாரால் மிரட்டப்பட்டதும், சென்னை பெத்தெல் நகர் ஆக்கிரமிப்பு அகற்ற விவகாரத்தில் தி.மு.க அரசு வேகம் காட்டுவதும் கம்யூனிஸ்ட்டுகளை ஆத்திரப்படுத்தியிருக்கிறது. தோழமைக் கட்சிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் சீட் பங்கீட்டை முடிக்க தி.மு.க முடிவெடுத்திருப்பதால், அறிவாலயக் கூட்டணியில் தகிப்பு கூடிக்கொண்டே செல்கிறது.

மேயர் பதவிகளை எதிர்பார்த்த கூட்டணிக் கட்சிகளை அலட்சியமாக டீல் செய்து அனுப்புகிறது அறிவாலயம். அலட்சியம் காட்டவில்லையென்றாலும், உட்காரவைத்து அழகு பார்த்து, ‘நோ’ சொல்லி வெளியேற்றுகிறது எம்.ஜி.ஆர் மாளிகை. இந்த இரண்டு பெரிய கட்சிகளோடு இதர கட்சிகளையும் சேர்த்து மொத்தம் எட்டுமுனைப் போட்டியாக மாறியிருக்கிறது களம். சீட்டுகளுக்கான போட்டியே, பணப் பேரம் முதல் கொலை வரை சென்றிருப்பதால்... தேர்தல் ரிசல்ட் அறிவித்து மேயர்கள், சேர்மன்கள் தேர்வாகும் வரை தமிழக அரசியலில் ரணகளத்துக்குப் பஞ்சமிருக்காது!

****

இதர கட்சிகளின் நிலை என்ன?

அரசியல் கட்சிகளிலேயே உள்ளாட்சி வேட்பாளர்கள் அறிவிப்பை முதல் ஆளாக தொடங்கிய ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன், நகர்ப்புறங்களில் தன் கட்சியினர் விலைபோய்விடாமல் அதிக இடங்களில் வெற்றியடைய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இதே அச்சம், அ.ம.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சிகளின் தலைமையிலும் ஏற்பட்டிருக்கிறது. சசிகலாவின் நிதி ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அ.ம.மு.க வேட்பாளர்கள். ‘நல்ல நாளிலேயே பர்ஸைத் திறக்காத சின்னம்மா, இப்போது திறப்பாரா?’ என்பதுதான் தினகரன் டீமுக்குள் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது!

பதவி... பணம்... பஞ்சாயத்து... ரணகளமாகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

ஜோதிமணி வெடித்ததன் பின்னணி!

கரூர் மாவட்ட வார்டு பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க-வினர் தன்னை ஒருமையில் திட்டியதாகக் கூறி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் தி.மு.க அலுவலகத்தில் ஜனவரி 31-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தைவிட்டு வெளியே வந்த ஜோதிமணி, ‘நான் ஒன்றும் உங்கள் வீட்டு விருந்துக்கு வரவில்லை. வெளியே போ என்று சொல்வதற்கு... எனக்கும் ஒருமையில் பேசத் தெரியும்’ என்று வாக்குவாதம் செய்தார். ‘கடந்த எம்.பி தேர்தலில், ஜோதிமணி வெற்றிக்காக செந்தில் பாலாஜியும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றிக்காக ஜோதிமணியும் பரஸ்பரம் பம்பரமாக உழைத்தனர். இடையில் பல பிரச்னைகளில் ஈகோ ஏற்பட்டு, இருவரது நட்பிலும் விரிசல் விழுந்தது. இந்த நிலையில், பேரூராட்சியாக இருந்து இப்போது நகராட்சியாக்கப்பட்டிருக்கும் பள்ளபட்டியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் சிலரை, சில தினங்களுக்கு முன்பு தி.மு.க-வில் இணைத்தார் செந்தில் பாலாஜி. அந்தக் கோபத்திலிருந்த ஜோதிமணி, காங்கிரஸ் எதிர்பார்த்த இடங்களை செந்தில் பாலாஜி விட்டுத் தராததால், இப்படி வாக்குவாதம் செய்துவிட்டார்’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism