Published:Updated:

`எம்.எல்.ஏ-களுக்கே பணம் கொடுத்துத்தான் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறார்கள்!' - ஸ்டாலின்

லோகேஸ்வரன்.கோ
ச.வெங்கடேசன்

``கருணாநிதியின் நிழலாக இருந்த துரைமுருகன் மீது களங்கத்தை ஏற்படுத்தினால் தமிழக மக்கள் தி.மு.க-வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று மோடியுடன் கூட்டுச் சேர்ந்து திட்டம் போட்டார்கள். அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை’’ என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

வேலூர் மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளரான துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். குடியாத்தம் சட்டமன்றப் பகுதிக்குட்பட்ட சோமலாபுரம், சாத்தம்பாக்கம் கிராமங்களில் இன்று பொதுமக்களுடன் அவர் கலந்துரையாடினார்.

பிரசாரத்தில் ஸ்டாலின்
பிரசாரத்தில் ஸ்டாலின்

அப்போது பேசிய ஸ்டாலின், ``பொதுத்தேர்தலின் போது திட்டமிட்டு தப்பான பிரசாரம் செய்து, வேலூர் தேர்தலை நிறுத்திவிட்டார்கள். வருமானவரித் துறை, தேர்தல் ஆணையம், மத்திய-மாநில அரசுகள் கூட்டாகச் சேர்ந்துகொண்டு துரைமுருகன் மற்றும் தி.மு.க மீது களங்கத்தை ஏற்படுத்த முயன்றார்கள். 

கலைஞருக்கு நிழலாக இருந்து, தி.மு.க-வில் பொருளாளராக இருக்கும் துரைமுருகன் மீது பழிபோட்டால் தமிழகம் முழுக்க தி.மு.க-வுக்கு மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என்று நினைத்தனர். அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. புதுச்சேரியைச் சேர்த்து 38 தொகுதிகளை நாங்கள் வென்றிருக்கிறோம். மத்தியில் இருக்கிற ஆட்சிக்குப் பாடம் புகட்ட வேண்டும்.

துரைமுருகன்
துரைமுருகன்

உங்களிடம் ஒரு மகனாக, சகோதரிகளின் அண்ணனாக, தம்பியாக, வயதான தாய்மார்களின் பேரனாக உரிமையோடு கேட்கிறேன். எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள். காவிரி பிரச்னை, மேக்கே தாட்டூ பிரச்னை உட்படத் தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் தி.மு.க-வின் 38 எம்.பி-க்களும் பேசிவருகிறார்கள்.

நாங்கள் பொறுப்புக்கு வந்தால் கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் நல்லது செய்வோம். 100 நாள் வேலைத் திட்டத்தில் கஷ்டப்பட்டு வேலை செய்தாலும் ஊதியம் சரியாக கொடுப்பதில்லை. இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்ய வேண்டுமானால் தி.மு.க வெற்றிபெற வேண்டும். அ.தி.மு.க-வினர் ஆட்சியைக் காப்பாற்றும் கவலையில் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அவர்களின் எம்.எல்.ஏ-களுக்கே பணம் கொடுத்துத்தான் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவின் சாவில் மர்மம், கொடநாடு கொலைகள், பொள்ளாச்சியில் கிட்டத்தட்ட 200 பெண்களின் பாலியல் விவகாரம் போன்றவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள மோடியின் தயவை நாடுகிறார்கள். இதற்கெல்லாம் அச்சுறுத்தல் கொடுக்கவேண்டும்’’ என்றார்.