Published:Updated:

``உள்ளாட்சித் தேர்தல்... திட்டம் என்ன?'' கமல், சீமான் கட்சியினரின் பதில்!

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைப்போல் அல்ல, உள்ளாட்சித் தேர்தல். கிட்டத்தட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். இரண்டு கட்சிகளும் எந்தக் கட்சிகளுடனும் கூட்டணியிலும் இல்லை. தனியாகத் தாக்குப்பிடிக்குமா இவ்விரு கட்சிகளும்?

கமல் - சீமான்
கமல் - சீமான்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்கிற நீண்ட கால கேள்விக்கு, ``இன்னும் 15 நாள்களுக்குள் அறிவிப்பு. டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடைபெறும்'' என நாங்குநேரி தொகுதியில் நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தெரிவித்தார், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகி வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்ட நிலையில், தி.மு.க வழக்கால் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன் பிறகு, ஜெயலலிதா மறைவு, சசிகலா சிறைக்குச் சென்றது, பன்னீரின் தர்மயுத்தம் என பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் தேர்தலை ஆளும்கட்சியே தள்ளிப்போட்டு வந்தது. நீதிமன்றமே தேர்தலை நடத்த வற்புறுத்தியும், தேர்தலை நடத்த அ.தி.மு.க அரசு தயாராகயில்லை. மூன்றாண்டுகளாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாமல்தான் தமிழக உள்ளாட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் இப்போது வரையிலும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுகிறது தமிழக அரசு.

இந்த நிலையில்தான், தேர்தல் நடக்கவிருப்பதற்கான அறிகுறிகள் தற்போது தென்படத்தொடங்கியுள்ளன. கடந்த 7-ம் தேதி, சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியின் தலைமையில் மாவட்ட ஆட்சியாளர்களுடன் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், விரைவில் தேர்தல் தேதி வெளியாகும் என்பதால் தேர்தல் குறித்த ஏற்பாடுகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடந்து முடிந்தவுடன், டிசம்பர் 27, 28 தேதிகளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகர்ப்புறம் - வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை:

மாநகராட்சி - 1064, நகராட்சி - 3468, பேரூராட்சி - 8288

கிராமப்புறம் - வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை:

மாவட்ட ஊராட்சி - 655, ஊராட்சி ஒன்றியம் - 6471, சிற்றூராட்சித் தலைவர்கள் - 12524, சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் - 99324

கட்சிகளைப் பொறுத்தவரை, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தில், உள்ளாட்சித் தேர்தலில் களம் காண ஆவலாக காத்திருக்கிறது அ.தி.மு.க. போட்டியிட விரும்புபவர்கள் வரும் 15, 16 தேதிகளில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். தி.மு.க-வும் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டது. கடந்த பொதுக்குழுவில் அது தொடர்பாக பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. தவிர தமிழகத்தில் மற்ற பெரும்பாலான கட்சிகள் இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முழு வீச்சில், அதற்கான வேலைகள் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க பொதுக்குழு
தி.மு.க பொதுக்குழு

இந்த நிலையில், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய இரண்டு கட்சிகளும் முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றன. அந்தக் கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான இடங்களைக் கைப்பற்றலாம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். ஆனால் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் போல் அல்ல, உள்ளாட்சித் தேர்தல். கிட்டத்தட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். இப்போது வரையிலும் இரண்டு கட்சிகளும் எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்கவில்லை.

இதனால் இந்தத் தேர்தலில் இந்தக் கட்சிகள், தனியாகத் தாக்குப்பிடிக்குமா... தேர்தலைச் சந்திப்பதற்கு இவர்கள் எந்த வகையில் தயாராகி வருகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல்வட்டாரத்தில் கிளம்பியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.14 முதல் 20-ம் தேதி வரை விருப்ப மனு பெறலாம். உள்ளாட்சி தேர்தலை கூட்டணி அமைத்தே எதிர்கொள்கிறோம். தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, கூட்டணி குறித்து முடிவுசெய்யப்படும். தேர்தலை சந்திக்க தி.மு.க தயாராக உள்ளது. தேர்தலை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.
மு.க.ஸ்டாலின்

இதைத் தெரிந்துகொள்வதற்காக முதலில், மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம்.

``கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் எங்கள் கட்சியின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்துகிறோம். அது உறுதி. எங்கள் கட்சிக் கட்டமைப்பில் பல மாறுதல்களைச் செய்திருக்கிறோம். முன்பு, மாநிலச் செயலாளராக ஒருவர் மட்டும்தான் இருந்தார் இப்போது 5 செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதேபோல, மாவட்ட அளவிலும், ஒருவருக்குப் பதிலாக பல பிரதிநிதிகளை நியமனம் செய்திருக்கிறோம். தேர்தலைச் சந்திப்பதற்கென்றே ஒரு தனி அணியை உருவாக்கி இருக்கிறோம். மாநில அளவில் அதற்கு ஒரு பொதுச்செயலாளர், மாவட்ட, மண்டலச் செயலாளர் என அது ஒரு தனி அமைப்பாகச் செயல்படும்.

முரளி அப்பாஸ்
முரளி அப்பாஸ்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 4 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தாலும், சில இடங்களில் 13 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். ஒரு சில பூத்களில் 24 சதவிகிதம் வரை எங்களுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன. இப்படி ஏற்ற, இறக்கமாக வாக்குகள் வாங்கியதற்கு கட்சிக் கட்டமைப்புக் குறைபாடுதான் காரணம் என்பதைக் கண்டறிந்திருக்கிறோம். அதனால்தான் பல மாற்றங்களைச் செய்துவருகிறோம். இடைத்தேர்தலில் போட்டியிடாமல் போனதற்கு கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வந்ததும் ஒரு காரணம்.

2021 சட்டமன்றப் பொதுத்தேர்தலை மிக வலிமையாகச் சந்திக்க ஆயத்தமாகியிருக்கிறோம். அந்தவகையில் உள்ளாட்சித் தேர்தலை மிக முக்கியமான களமாகப் பார்க்கிறோம். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கட்சியைக் கொண்டு சேர்ப்பதற்கு இதை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுகிறோம்'' என்றார்.

அவரிடம், ``கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரிய நகரங்களில் அதிக வாக்குகள் பெற்ற மக்கள் நீதி மய்யம், கிராமப்புறங்களில் அதிக வாக்குகள் பெறவில்லையே, அதற்கு என்ன காரணம், அதை எப்படிச் சரிசெய்வீர்கள்?’’ என்று கேட்டோம்...

கமல்
கமல்

``மாநகரம் மற்றும் நகர்ப்பகுதிகளில் எங்களுக்கு பொறுப்பாளர்கள் இருந்தார்கள். கிராமப்புறங்களில் பொறுப்பாளர்கள் இல்லை. அனைத்துப் பகுதிகளிலும் கிளைகள் அமைக்கப்படாமல் இருந்ததே அதற்குக் காரணம். கட்சி ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகளில் தேர்தலைச் சந்தித்தோம். அதுதான் காரணம். மற்றபடி அந்தத் தேர்தலில் மோடி எதிர்ப்பு என்பதுதான் முதன்மையானதாக இருந்தது. ஆனால், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர் என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கும். அப்போது மக்களின் சிந்தனையில் பல மாற்றங்கள் வரும்'' என்றார் முரளி அப்பாஸ்.

``உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க என்ன மாதிரியான திட்டங்களை வைத்துள்ளீர்கள்?’’ என்ற கேள்விக்கு ,

``நான் சர்வாதிகாரியாக மாறுவேன்!" - ஸ்டாலின் சீற்றத்தின் பின்னணி!

``நாங்கள் ஏற்கெனவே கிராமசபைக் கூட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறோம். முடங்கிக்கிடந்த கிராமசபைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். இப்போது சபைக் கூட்டங்களை நடத்தாமல் அரசாங்கம் மக்களை ஏமாற்ற முடியாது. `மாநில சுயாட்சி' போன்று உள்ளாட்சி அமைப்புகளும் தனிச்சையான அதிகாரம் பெற மெனக்கெடுவோம். திட்டங்கள் சென்னையில் இருந்துவராமல், உள்ளாட்சி அமைப்புகளே முடிவெடுக்கும் அதிகாரத்தை உருவாக்கப் போராடுவோம்'' என்றார்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் 16-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவுள்ளன. விருப்ப மனு செலுத்துவதற்கான கட்டணம் குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது கட்சியின் தலைமை.

சீமான்
சீமான்
உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
சீமான்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், நகர்ப்பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகளைப் பெற்றதைப் போல், ஊரகப் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது.

அவர்கள் இந்தத் தேர்தலைச் சந்திக்க என்ன மாதிரியான திட்டங்களை வைத்திருக்கிறார்கள்,

நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செய்திப் பிரிவுச் செயலாளர் பாக்கியராசனிடம் பேசினோம்...

``தமிழகத்தில் முதலில் விருப்ப மனு வாங்கியது எங்கள் கட்சிதான். தோராயமாக 1,19,000 இடங்களுக்குத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அனைத்துப் பொறுப்புகளுக்கும் நாங்கள் போட்டியிட முடிவு செய்துள்ளோம். வேட்பாளர் தேர்வுப் பணியும் இறுதிநிலையில் இருக்கிறது. வேலைகளைத் தொடங்கி விட்டோம். ஆனால், முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது, கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது.

பல அடுக்குகளாக செயல்படும் உள்ளாட்சி அமைப்பு முறையை புரிந்துகொள்வது, அதற்கான வேட்பாளர்களை நிறுத்துவது மிகப்பெரிய பொறுப்பாக இருக்கிறது. புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது '' என்றார்.

அவரிடம் ``நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?'’ என்று கேட்டதற்கு,

`முதல்முறையாக நாம் தமிழர் கட்சி தம்பி, தங்கைகள் தங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் நேரிடையாக வாக்குக் கேட்கப் போகிறார்கள். கிராமப்புறப் பகுதிகளில் எங்கள் கட்சித் தம்பிகள் பல நல்ல களப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். அது எங்களுக்குக் கண்டிப்பாக பலன் தரும் என நம்புகிறோம். அது போன்ற களப்பணி செய்த ஆட்களைத்தான் வேட்பாளர்களாகவும் களமிறக்க இருக்கிறோம்.

பாக்கியராசன்
பாக்கியராசன்

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வாக்கும் முக்கியம். அதனால், இதுவரை ஊருக்குள் நண்பர்களாக இருந்தவர்கள்கூட எதிரிகளாகப் பார்க்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதேசமயம் கட்சிக்குள் இந்தத் தேர்தல் பணி புத்துணர்ச்சியை அளித்திருக்கிறது. தம்பி, தங்கைகள் மிக ஆர்வமாக வேலை செய்கிறார்கள். தாங்கள் செய்த வேலைக்கான பலன் கிடைக்கப் போகிறது என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். கண்டிப்பாக நாங்கள் பல இடங்களைக் கைப்பற்றுவோம்'' என நம்பிக்கையோடு பேசி முடித்தார் பாக்கியராசன்.

புதுமையையும் மாற்றத்தையும் விரும்பாத மனிதர்களே இல்லை. அது அரசியலுக்கும் விதிவிலக்கல்ல. அதேசமயம் இதுவரை, பொறுப்பில் இருந்தவர்களைவிட நாம் மேலானவர்கள் என்கிற நம்பிக்கையை விதைக்கும் பொறுப்பு புதிதாகப் போட்டியிடும் கட்சிகளுக்கு உண்டு. மக்களிடம் அந்த நம்பிக்கையை மட்டும் பெற்றுவிட்டால் வெற்றி நிச்சயம்.