Published:Updated:

``தேர்தல் ஆணையத்தை `நான் ஆணையிட்டால்’ என செயல்பட வைத்தவர் டி.என்.சேஷன்!’’- டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி

டி.என்.சேஷன்

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. தேர்தல் ஆணையத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்தவர்.

``தேர்தல் ஆணையத்தை `நான் ஆணையிட்டால்’ என செயல்பட வைத்தவர் டி.என்.சேஷன்!’’- டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. தேர்தல் ஆணையத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்தவர்.

Published:Updated:
டி.என்.சேஷன்

உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாகப் பார்க்கப்படுவது இந்தியாவின் பொதுத் தேர்தல். இந்திய தேர்தல் இத்தகைய தனித்துவம் பெறுவதற்கு மிக முக்கியக் காரணம் அதைத் திறம்படச் செயல்படுத்தி வரும் இந்திய தேர்தல் ஆணையம்தான். இத்தகைய அளவு கடந்த அதிகாரம் பொருந்திய இந்திய தேர்தல் ஆணையத்துக்குப் புதிய முகம் கொடுத்தவர் டி.என்.சேஷன்.

டி.என். சேஷன்
டி.என். சேஷன்

தேர்தல் நடத்தை விதிகளைக் கண்டிப்பாக அமல்படுத்தியது தொடங்கி செலவு உச்சவரம்பு நிர்ணயித்தது வரை தேர்தல் நடைமுறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர் டி.என்.சேஷன். இவரின் மகத்தான பணிக்கான சர்வதேச அங்கீகாரமாக 1996-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய `மகசேசே' விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த டி.என்.சேஷன் நேற்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். இவரின் மறைவுச் செய்தியை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி ட்விட்டரில் வெளியிட்டார். பிரதமர் மோடி மற்றும் முன்னாள் தேர்தல் ஆணையர்களும் பலரும் சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாலக்காட்டில் பிறந்த சேஷன், சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்று, அங்கு சிறிது காலம் பணியாற்றி வந்தார். 1955-ம் ஆண்டு இந்திய குடிமைப் பணிக்குத் தேர்வான சேஷன், குடிமைப் பணியின் மிக உயரிய பொறுப்பான கேபினட் செயலாளர் அந்தஸ்து வரை உயர்ந்தார். 1990-ம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சேஷன் ஆறு ஆண்டுகாலம் பணியாற்றினார். சேஷன் பதவியேற்றதற்குப் பிறகு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடே மாறியது. வெறும் பெயரளவில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டன. தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக இரண்டு மத்திய அமைச்சர்களை, அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்குக் கடிதம் எழுதினார். அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதாக ஆளும் தரப்பாலே விமர்சிக்கப்பட்டார். பலமுறை அவரை பதவிநீக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

டி.என்.சேஷன்
டி.என்.சேஷன்

அப்போது வரை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஒரே தேர்தல் ஆணையர் மட்டுமே இருந்துவந்தார். 1993-ம் ஆண்டுதான் கூடுதலாக இரண்டு நிரந்தர தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு மூன்று பேர் கொண்ட அமைப்பாக தேர்தல் ஆணையம் உருப்பெற்றது. சேஷனின் அதிகாரத்தைக் குறைக்கவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாகப் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. சேஷன் இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்த போதும் உச்சநீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்டது. தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட வழக்கொன்றில் 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், "டி.என்.சேஷன் காலத்து நம்பகத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள்" எனக் கருத்து தெரிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கு சேஷன் அளித்துள்ள பங்களிப்பை இதைவிட தெளிவாக யாரும் எடுத்துரைத்திட முடியாது.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேஷன் மறைவு தொடர்பாக நம்மிடம் பேசுகையில், ``இந்திய தேர்தல் ஆணையத்தை சேஷனுக்கு முன், சேஷனுக்குப் பின் எனப் பிரித்துக்கொள்ளலாம். அப்போது வரை ஓர் அரசுத் துறையாக மட்டுமே பார்க்கப்பட்ட தேர்தல் ஆணையத்தை ஒரு தனித்த அதிகாரம் பொருந்திய அரசியலமைப்பு நிறுவனமாகக் கட்டமைத்ததில் சேஷனின் பங்கு அளப்பரியது. தேர்தல் நேரங்களில் கண்காணிப்பாளர்களை நியமிக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் காரணமாக பல அரசியல்வாதிகளால் வெறுக்கப்பட்டார்."

டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி

``தமிழகத்தில் அவர் நுழைய முடியாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்புகள் கிளம்பின. அச்சுறுத்தல்கள் எதற்கும் அஞ்சாமல் தன்னுடைய கடமையைத் துணிச்சலுடன் செய்து முடித்து மிகப்பெரிய முத்திரையைப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவர் செய்த சீர்திருத்தங்களின் பலனை நாம் இன்று வரை அனுபவித்து வருகிறோம். இன்றைய அரசு அதிகாரிகள், தேர்தல் ஆணையர்கள் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் `சட்டத்துக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை வைத்தே ஒருவரால் நேர்மையாகச் செயல்பட்டு மிகப்பெரிய மாற்றங்களைச் செயல்படுத்த முடியும்' என்பதே. அவரின் மறைவு மிகப்பெரிய இழப்பு. அவரின் துணிச்சலான நடவடிக்கைகளுக்காக என்றுமே நினைவு கொள்ளப்படுவார்"