Election bannerElection banner
Published:Updated:

கரூர்: `தானாக கணினி இயங்கியதாகப் புரளி... திமுக-வுக்கு தோல்வி பயம்!’ - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆய்வுசெய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
ஆய்வுசெய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ( நா.ராஜமுருகன் )

தி.மு.க-வினர் தோல்வி பயத்தால், என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் கன்டெய்னர் லாரிகள் செல்வதற்கும், வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கும் சம்பந்தமில்லை.

"அ.தி.மு.க கூட்டணி 140 இடங்களில் வெற்றிபெற்று, மீண்டும் தமிழகத்தில் மூன்றாவது முறையாக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்" என்று கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆய்வுசெய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
ஆய்வுசெய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்
கரூர்: நள்ளிரவில் தானாக இயங்கிய ஏ.சி., கணினிகள்?! - வாக்கு இயந்திரங்கள் அறைக்கு அருகே பரபரப்பு

கரூர் மாவட்டத்தில், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் முடிந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையத்தைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சை விஷயங்களை தி.மு.க-வினர் கிளப்பிவருகிறார்கள். இந்தநிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதை, கரூர் சட்டப்பேரவைத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரும், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆய்வு செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
ஆய்வு செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கரூரிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அனைத்தும் அரசியல் கட்சியின் முகவர்கள் கண்காணிப்பில் உள்ளன. ஆனால், தி.மு.க-வினர் வாக்குச்சாவடி மையங்களில் முன்பு கன்டெய்னர் லாரிகள் வருவது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து, தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குகின்றனர். இங்கே கணினி இயங்கியது குறித்தும் புரளியைக் கிளப்புகின்றனர்.

தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. இதனால், மத்தியப் பாதுகாப்பு படை வீரர்களும், தமிழ்நாடு காவல்துறையினரும் இணைந்து, வாக்கு எண்ணும் மையங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிவருகின்றனர். தி.மு.க-வினர் தோல்வி பயத்தால், என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிவருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் கன்டெய்னர் லாரிகள் செல்வதற்கும், வாக்குப்பெட்டி இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கும் சம்பந்தமில்லை.

`தமிழகத்தில் தி.மு.க அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும்' என கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதைக் குறித்துக் கேட்கிறீர்கள். ஆனால், எங்களுக்கு கருத்துக்கணிப்பு குறித்து பயம் கிடையாது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், `தி.மு.க ஆட்சி அமைக்கும்' என அனைத்து ஊடகங்களும் கூறிவந்தன. ஆனால், அன்றைய முதல்வர் ஜெயலலிதா, இரண்டாவது முறையாக வென்று, ஆட்சியைக் கைப்பற்றினார். அதுபோல, இன்றைய முதல்வர் மீண்டும் ஆட்சியை மூன்றாவது முறையாகக் கைப்பற்றுவார். 140 இடங்களுக்கு குறைவில்லாமல் நிச்சயம் அ.தி.மு.க கூட்டணி வெற்றிபெற்று, தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியமைக்கும்" எனத் தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு